வல்லான் - விமர்சனம்!
மதகஜ ராஜா 13 ஆண்டுகளுக்கு பின்னர் ரிலீஸாகி ஹிட் ஆன மகிழ்ச்சியில் இருக்கும் சுந்தர் சி தொடர்ச்சியாக இன்னொரு வெற்றியை எட்ட முடியுமா என்ற எண்ணத்தில் வெளியிடப்பட்ட படமாகவே வல்லான் தெரிகிறது. அந்த படம் முழுவதும் காமெடி இந்த படம் முழுவதும் கொலை, மர்மம். சுந்தர் சி.யை வைத்து நல்லதொரு க்ரைம் திரில்லர் படத்தினை எடுக்க நினைத்த டைரக்டர், அதில் ஆங்காங்கே சற்று சறுக்கி சொதப்பி விட்டார். ஆனாலும் க்ளைமாக்ஸ் காட்சியில் வைத்த ட்விஸ்ட் சற்று கவனிக்கும்படியாக இருந்தது.
அதாவது தொழிலதிபர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அந்த கொலை வழக்கை விசாரிக்கும் காவல்துறை துப்பு கிடைக்காமல் தினறுகிறது. இதனால், சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர்.சி-யிடம் உயர் அதிகாரி வழக்கை ஒப்படைக்கிறார். பணியில் இல்லை என்றாலும், தொழிலதிபர் கொலை வழக்கின் பின்னணியில், தனது தனிப்பட்ட பிரச்சனைக்கான தீர்வு கிடைக்கலாம் என்ற நோக்கத்தில் விசாரணை மேற்கொள்ளும் சுந்தர்.சி, பல மர்ம முடிச்சுகள் அவித்தாலும், அடுத்தடுத்த கொலைகளால் மேலும் பல மர்மங்கள் அவரை சூழ்கிறது. இதற்கிடையே, கொலை செய்யப்பட்டவரிடம் இருக்கும் ஏதோ ஒன்றுக்காக அரசியல்வாதியும், சில காவல்துறை அதிகாரிகளும் அவருக்கு எதிராக சதி செய்ய, அவைகளை முறியடித்து கொலையாளியை அவர் எப்படி கண்டுபிடிக்கிறார் ?, கொலைக்கான பின்னணி ? மற்றும் இந்த வழக்குடன் தொடர்புடைய அவரது பிரச்சனை என்ன? ஆகிய கேள்விகளுக்கான விடையை விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் சொல்வதே ‘வல்லான்’.
சுந்தர் சி, இதற்கு முன் நடித்த படங்களை காட்டிலும், இப்படத்தில் இவர் ஆக்டிங் மிகவும் செயற்கையாகவே இருந்தது. இறந்தது தன் காதலி என்றறிந்து கதறி அழும் காட்சியில் நமக்கு எந்த வித உணர்வையும் கடத்தவில்லை. மேலும், பல இடங்களில் ஒரே மாதிரியான ரியாக்ஷனைக் கொடுத்து காட்சிகளை உப்புக்கு சப்பாணியாக்கி விட்டார் சுந்தர் சி. எனக்கு நடிப்பு வராது ஆக்சன் தான் வரும் என்று சொல்லும் விதமாக நடிப்பு பற்றி கவலைப்படாமல் ஆக்சன் காட்சிகளை மட்டும் அதிரடி காட்டி இருக்கிறார் சுந்தர் சி. ஆனால் எம்ஜிஆராவது மூன்று அடி வாங்கிவிட்டு திருப்பி தாக்குவார் ஆனால் சுந்தர் சி. ஸ்டான்ட் வீரர்களிடம் ஒரு அடி கூட வாங்காமல் அடித்துக்கொண்டே இருக்கிறார்.
ஹீரோயினாக நடித்திருக்கும் தன்யா ஹோப் அழகாக இருக்கிறார. வேலை குறைவு என்றாலும் அதை நிறைவாக செய்து ரசிகர் மனதை கவர்கிறார்.ஹெபா பட்டேல், திரைக்கதை ஓட்டத்திற்கு மட்டும் இன்றி கவர்ச்சிக்கும் பயன்பட்டிருக்கிறார். இளம் தொழிலதிபராக நடித்திருக்கும் கமல் காமராஜ், அவரது மனைவியாக நடித்திருக்கும் அபிராமி வெங்கடாச்சலம், சாந்தினி தமிழரசன், அருள் டி.சங்கர், தலைவாசல் விஜய், ஜெயக்குமார், டி.எஸ்.கே என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் அளவாக டைரக்டர் சொன்னதை செய்து விட்டு போயுள்ளனர்.அரோல் சங்கரின் கதாபாத்திரமானது மிகவும் வலுவானதாக இருந்ததால், அதில் இன்னும் சற்று கவனத்தை கூடுதலாக செலுத்தியிருந்திருக்கலாம்.
கேமராமேன் மணி பெருமாளின் ஒளிப்பதிவு படத்திற்கு சற்று பலமாக அமைந்திருந்தது. மியூசிக் டைரக்டர் சந்தோஷ் தயாநிதியின் இசையும் பெரிதாக குறை கூறும்படியாக இல்லை என்றாலும் பின்னணி இசையில் இன்னும் அக்கறைக் காட்டி இருக்கலாம்
ஒரு கொலை அதை சுற்றி நடக்கும் கதைக்கான திரைக்கதையை பல திருப்பங்களுடன் சொல்ல முயலும் படம் வேகமாக சென்ற முதல் பாதியானது இரண்டாம் பாதியில் சற்று வேகம் குறைந்து எரிச்சலடைய வைத்துவிட்டது
ஆனாலும் சண்டைப் பிரியர்களுக்கு பிடித்த படக் கணக்கில் சேர்ந்து விட்டது.
மார்க் 2.25/5