உயிர் தமிழுக்கு - விமர்சனம்!
சமீபகால சர்ச்சை கோலிவுட்வாசி அமீர் நாயகனாக நடிக்க ஆதம்பாவாவின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் உயிர் தமிழுக்கு. அரசியல் கதைக்கள பின்னணியில், ஆர்வத்தை தூண்டிய படம் ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறதா?அமீருடன் இந்தப் படத்தில் இமான் அண்ணாச்சி, சாந்தினி ஸ்ரீதரன் ராஜ்கபூர், ஆனந்தராஜ், சரவண சக்தி, மகாநதி சங்கர், சுப்பிரமணியம் சிவா, கஞ்சா கருப்பு ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். பொதுவாகவே டைரக்டர் அமீர் நிஜ வாழ்வில் நிறைய அரசியல் பேசுபவர், அவரது படைப்புகளும் அரசியல் நேர்த்தன்மையுடன் இருக்கக்கூடிய படைப்புகள், இப்படம் அவரது நடிப்பில் அரசியல் பின்புலத்தில் உருவாகிறது என்றவுடன் ரசிகர்களிடம் பெருத்த எதிர்பார்ப்பு இருந்தது அந்த எதிர்பார்ப்பு களையெல்லாம் இந்த படம் நிறைவு செய்ததா?
ஊஹூம்.. அடடே.. ஒரு அரசியல் காமெடித் திரைப்படம் பார்க்கப் போகிறோம் என்ற எண்ணத்தில் படத்துக்குச் சென்றால் நமக்குச் சின்ன ஏமாற்றம்தான் இது அரசியல் களத்தில் ஒரு காதல் கதை. தமிழ் என்ற பேர் கொண்ட தான் விரும்பும் பெண்ணிற்காக அரசியல் களத்தில் குதிக்கும் ஒரு கேபிள் ஆபரேட்டர் அந்த அரசியல் களத்தில் என்னவெல்லாம் செய்கிறார் என்பது தான் படத்தின் கதை.
காதலிக்காக கண்டன பொதுக்கூட்டம், நன்றி அறிவிப்பு கூட்டம் என கலக்குகிறார் அமீர். அரசியல் சேட்டைகள் என படம் முழுக்க உதார் விட்டே நேரத்தைக் கடத்துகிறார் அமீர். அமீரின் காதலியாக வரும் சாந்தினி ஸ்ரீதரன் பலதரப்பட்ட லுக்கில் வந்தாலும் கவனம் ஈர்க்கவில்லை.
பஞ்ச் வசனங்களில் அமீரை மிஞ்சி, இமான் அண்ணாச்சி கவர்கிறார். சமீப கால அரசியலை வச்சு செய்துள்ளார்கள். சமாதி முன் தியானம், ஓட்டு மிஷினை நம்பிய அரசியல் செய்வது, நடிகர்கள் அரசியலுக்கு வருவது என எல்லா கான்செப்ட்டையும் உள்ளே கொண்டு வந்து, பல இடங்களில் சிரிக்க வைக்க முயன்றிருகிறார். இயக்குனர் ஆதம் பாவா.
படத்தின் முதல் பாதி அரசியல் நையாண்டியை மையப்படுத்தி கதை நகருக்கிறது. ஆனால் இரண்டாம் பாதி அது தான் பெரும் சோகம். உயிர் தமிழுக்கு என்பது தமிழ் மொழிக்கு அல்ல, படத்தின் கதாநாயகியின் பெயர் தமிழ் அதனால் கதாநாயகியாக அமீர் என்னவெல்லாம் செய்கிறார் என்பது தான் உயிர் தமிழுக்கு அடி நாதம். இந்த ஐடியா எல்லாம் நன்றாகவே இருக்கிறது.
ஆனால் படமாக பார்க்கும் போது பல காட்சியில் அமீரின் படம் தான் பார்க்கிறோமா? என்ற அதிர்ச்சி இருந்து கொண்டே இருக்கிறது அதிலும் இரண்டாம் பாதி திரைக்கதை பயங்கரத் தொய்வாக இருக்கிறது. முதல் பாதியில் இருக்கும் காமெடி என்ற பித்தளைப் பாத்திரம் கூட இரண்டாம் பாதியில் இல்லை படத்தை நீண்ட காலம் எடுத்திருப்பது அப்பட்டமாக தெரிகிறது. ஒவ்வொரு பத்திரங்களும் வித்தியாசமான வேடத்தில் வருகிறார்கள் வித்தியாசமான காலகட்டத்தில் கதை நடக்கிறது.
மொத்தமாகவே இரண்டும் பாதியில் என்ன செய்வது என்பது மொத்தக்குழுவிற்கும் தெரியவில்லை. அமீரின் முந்தையப் படங்கள் தான் இந்தப்படத்தின் மைனஸ்.
லாஜிக், கதை, யார் நடித்திருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்காமல் அடிக்கும் வெயிலுக்கு ஏசியில் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்து வர ஆசைப்பட்டால் உயிர் தமிழுக்கு படத்தை தாராளமாக பார்க்கலாம்.
மார்க் 2.25/5