உசைன் போல்ட்:- டி20 போட்டியின் தூதராக நியமனம்!
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் மாதம் 1-ம் தேதி அமெரிக்காவில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்தப் போட்டி ஜூன் 29-ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸில் உள்ள பார்படாஸ் நகரில் நிறைவுபெறும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.. அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இணைந்து நடத்தும் இந்த போட்டிகளில் 20 அணிகள் பங்கேற்கின்றன. இந்த உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் தொடரை நடத்தும் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் மோதுகின்றன. தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி ஜூன் 9-ம் தேதி நியூ யார்க் நகரில் நடைபெற இருக்கிறது.
அதிலும் அமெரிக்காவில் முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. அதையொட்டி ஐசிசி சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இதற்காக சிறப்பு மைதானங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த போட்டிகளுக்கான விளம்பர தூதராக பிரபல ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் நியமிக்கப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.
ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த உசைன் போல்ட், உலகின் அதிவேக மனிதர் என்றும் மின்னல் மனிதர் அழைக்கப்படுகிறார். 2008ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து மூன்று முறை பதக்கங்கள் வென்று அவர் சாதனை படைத்துள்ளார். அதேபோல் 2008ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளின் போது 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்ட பந்தயங்களில் அவர் உலக சாதனை படைத்துள்ளார். குறிப்பாக 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 9.58 நொடிகள், 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 19.19 நொடிகள் மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் 36.84 நொடிகள் என அவர் பல்வேறு உலக சாதனைகளை படைத்துள்ளார். மேலும், உலக தடகள வீரர்களில் அதிகம் சம்பாதிக்கும் வீரர் என்ற பெருமையும் இவருக்குண்டு. உலகளவில் பிரபலமான மற்றும் அனைத்து காலத்திற்குமான மிகச்சிறந்த விளையாட்டு வீரராகக் கருதப்படுகிறார்.
* எந்தவிதமான வழியிலும் தோல்வியடைவதை நான் விரும்ப வில்லை.
* உங்களுக்கான நல்ல நாட்கள் மற்றும் மோசமான நாட்கள் ஆகிய இரண்டுமே இருக்கவேண்டும்.
* என்னை விட சிறப்பாக தொடங்குபவர்கள் இருக்கிறார்கள் ஆனால், நான் வலிமையாக நிறைவு செய்பவன்.
* என்னால் என்ன செய்யமுடியும் என்பது எனக்கு தெரியும் அதனால், மற்றவர்களின் கருத்து மற்றும் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப்பற்றி எனக்கு கவலை இல்லை.
* திரும்ப திரும்பச் செய்வது என்பது மற்ற எதையும்விட கடினமாக செயல்.
* வரலாற்றில் நான் இடம்பெற வேண்டுமென்றால், என் இலக்கினை நான் அடைய வேண்டும்.
* நான் எடுத்துக்காட்டாக வாழ்வதற்கு முயற்சிக் கின்றேன்.
* என்னைப் பொறுத்தவரை, நான் என்ன செய்ய வேண்டுமோ அதிலேயே கவனம் செலுத்துகிறேன்.- என்றெல்லாம் சொல்லி சாதித்தவர் தற்போது இந்த டி 20 தொடரின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டு இருப்பதால், அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் இந்த போட்டிகளுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.