செங்கடல் பகுதியில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா தாக்குதலால் பதற்றம் அதிகரிப்பு!
காஸாவில் மூர்க்கத்தனமாக போர் புரியும் இஸ்ரேலுடன் வணிக தொடர்பை கொண்ட கப்பல்கள் மீது செங்கடலில் தாக்குதல் நடத்துவோம் என ஏமனின் ஹவுதி போராளிகள் கடந்த நவம்பர் 19ம் தேதி அறிவித்தனர். சொன்னது போல் தற்போது வரை பல்வேறு நாட்டு வணிக கப்பல் மீது தாக்குதல் நடத்தப்படுவதால் செங்கடல் பகுதியில் சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதில் வணிக கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்க அமெரிக்கா தலைமையில் சர்வதேச கூட்டுப்படை கடந்த 10 நாட்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்நிலையில், செங்கடலின் தெற்குபகுதியில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்த டென்மார்க்கின் மார்ஸ்க் ஹங்க்ஜோ கப்பலை குறிவைத்து ஹவுதி படையினர் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. உடனடியாக கப்பல் நிறுவனம் உதவி கோரியதைத் தொடர்ந்து அமெரிக்க கடற்படையின் 2 போர்க்கப்பல்கள் அப்பகுதிக்கு சென்று ஹவுதி படையினர் ஏவிய 2 ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழித்தன. அடுத்த சில மணி நேரத்தில் டென்மார்க் கப்பலை ஹவுதி படையினர் 4 சிறிய படகுகளில் வந்து சுற்றி வளைத்தனர்.
மீண்டும் அக்கப்பல் நிறுவனம் உதவி கோரியதைத் தொடர்ந்து, அமெரிக்க கடற்படை போர் ஹெலிகாப்டர் சம்பவ இடத்திற்கு சென்று 3 படகுகளை சுட்டு வீழ்த்தியது. அதிலிருந்த ஹவுதி படையினர் பலியாகினர்.இதுகுறித்து அமெரிக்காவின் கடற்படை கூறுகையில், சிங்கப்பூர் கொடியுடன் வந்த வணிகக் கப்பலை ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்கியதாக அமெரிக்க ராணுவத்திற்கு தகவல் கிடைத்தது. தாக்குதல் பற்றிய தகவல் கிடைத்ததும், அமெரிக்கா உடனடியாக தனது போர்க்கப்பல்களை அந்த இடத்திற்கு அனுப்பியது. அப்போது யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் இரண்டு ஏவுகணைகளை அழித்தது.
அதன் பிறகு, அந்த சிங்கப்பூர் கப்பல் தெற்கு செங்கடலை சென்றபோது நேற்று காலை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் கப்பலைத் தாக்கினர். தனது போர்க்கப்பல்களுடன் ராணுவ ஹெலிகாப்டர்களை அந்த இடத்திற்கு அனுப்பியபோது, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அமெரிக்க ஹெலிகாப்டர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் தற்காப்புக்காக தனது பாதுகாப்புப் படைகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதில் சுமார் 10 ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாகவும், அவர்களது மூன்று படகுகளும் மூழ்கியதாகவும் அமெரிக்கா கூறியது.
அந்த இடத்தில் இருந்து ஒரு படகு தப்பி சென்றது. இந்த நடவடிக்கையில் அமெரிக்க ராணுவத்திற்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை. ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீதான தாக்குதலை அடுத்து செங்கடலில் அனைத்து கப்பல் போக்குவரத்தும் 48 மணி நேரம் தடை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கையால், செங்கடல் பகுதியில் பதற்றம் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
கடந்த மாதம் 19ம் தேதியிலிருந்து ஹவுதி படையினர் நடத்தி உள்ள 23வது தாக்குதல் இது என மேற்கு ஆசியா, மத்திய ஆசியா, வட ஆப்ரிக்கா உள்ளிட்ட பகுதிகளுக்கான அமெரிக்க படைகளின் தலைமையகமான சென்ட்காம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த சம்பவத்தில் வணிக கப்பலில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. கூட்டுப்படை அமைக்கப்பட்டதில் இருந்து இதுவரை செங்கடல் வழியாக 1200 கப்பல்கள் சென்றுள்ளதாகவும், அதில் எந்த கப்பலும் தாக்குதலால் பாதிக்கப்படவில்லை என்றும் சென்ட்காம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
* இந்திய கடற்படை உஷார்
சர்வதேச கூட்டுப்படையில் இந்தியா இணையாத நிலையில், ஏடன் வளைகுடா மற்றும் அரபிக்கடல் பகுதியில் கடற்படை போர்க்கப்பல்களை அனுப்பி தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. கடற்படை விடுத்த அறிக்கையில், ‘கடந்த சில வாரங்களாக செங்கடல், ஏடன் வளைகுடா, அரபிக்கடலில் சர்வதேச கப்பல் போக்குவரத்து வழித்தடம் வழியாக வரும் கப்பல்கள் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. எந்த சமயத்திலும் வேண்டிய உதவிகள் செய்ய இந்திய கடற்படை கப்பல்கள் தயாராக உள்ளன’ என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியா நோக்கி வந்த 2 வணிக கப்பல் மீது ஹவுதி படையினர் தாக்குதல் நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.