For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

அமெரிக்கா:விமானம் மீது ஹெலிகாப்டர் மோதிய விபத்தில் 64 பேர் பலி!

01:31 PM Jan 30, 2025 IST | admin
அமெரிக்கா விமானம் மீது ஹெலிகாப்டர் மோதிய விபத்தில்  64 பேர் பலி
Advertisement

வாஷிங்டனில் உள்ள ரீகன் விமான நிலையத்தில் பயணிகள் விமானம், ராணுவ ஹெலிகாப்டர் மீது மோதிய விபத்தில் வெடித்து சிதறியது. ரொனால்டு ரீகன் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க முயன்றபோது நடுவானில் ஹெலிகாப்டர் மீது மோதி ஆற்றில் விழுந்தது. பயணிகள் விமானம் மீது மோதிய ஹெலிகாப்டர் அமெரிக்க இராணுவத்திற்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. மேலும், விமானத்தில் 64 பேர் இருந்தனர்.

Advertisement

கன்சாஸ் மாகாணத்தில் உள்ள விசிட்டாவில் இருந்து நாட்டின் தலைநகர் வாஷிங்டன் நோக்கி சுமார் 64 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற விமானம், ராணுவ ஹெலிகாப்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த நிலையில், பொட்டாமக் ஆற்றில் விழுந்த விமானத்தில் பயணித்த 64 பேரில் ஆற்றில் இருந்து இதுவரை 19 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் மற்றவர்களை தேடும் பணி தொடர்கிறது. சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே, விமானம் வெடித்துச் சிதறிய பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

இது குறித்து கருத்துத் தெரிவித்த அதிபர் டொனால்டு டிரம்ப், "எதனோடும் ஒப்பிட முடியாத மோசமான விபத்து, விபத்துக்கு உள்ளான விமானத்தில் இருந்த பயணிகளுக்கு கடவுள் துணை இருக்கட்டும். விபத்து நடைபெற்ற உடன் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டவர்களின் பணி என்பது அளவிடமுடியாத ஒன்று. நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகின்றேன். மேலும் தகவல்கள் விரைவில் தெரிய வரும்" என்று கூறியுள்ளார்.

Advertisement

64 பேருடன் சென்ற விமானம்: இந்த நிலையில் விபத்து குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம், கான்சாசின் விச்சிதாவில் இருந்து வாஷிங்டன் வந்து கொண்டிருந்த அமெரிக்கன் ஈகிள் பிளைட் 5342 விமானம் விபத்துக்கு உள்ளானது. அதில் 60 பயணிகள் பயணித்தனர். நான்கு விமான ஊழியர்களும் இருந்தனர்," என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மத்திய விமானப் போக்குவரத்துறை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு முன்னதாக நடுவானில் இந்த விபத்து அமெரிக்க நேரப்படி இரவு 9 மணிக்கு (இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு) நேரிட்டுள்ளது," என்று கூறப்பட்டுள்ளது. உலகிலேயே மிகவும் அதிக கண்காணிப்பு கொண்ட வான்வெளி, கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்ட விமான நிலையமாக கருதப்படும் ரீகன் விமான நிலையம் வெள்ளை மாளிகையில் இருந்து மூன்று மைல் தொலைவில் அமைந்துள்ளது.

விமானம் விபத்துக்கு உள்ளாவதற்கு முன்பு என்ன நடந்தது என்பதை அறிய விமானத்தின் தகவல் தொடர்பு சாதனங்கள் ஏதும் கிடைக்கிறதா? என்பதை அதிகாரிகள் தேடி வருகின்றனர். அமெரிக்கன் ஏர்லைன்ஸ் 5342 என்ற விமானம் ரீகன் தேசிய விமான நிலையத்தில் இறங்கும் முன்பு 400 அடி உயரத்தில் மணிக்கு 140 மைல் வேகத்தில் வந்து கொண்டிருந்தது என விமான நிலைய கட்டுப்பாட்டு அறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இத்தனைக்கும் விமானக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஜெட் விமானத்தை ஓடுபாதை எண் 33ல் இறங்கும்படி அறிவுறுத்தி இருந்தனர். இதையடுத்து ஓடுபாதை எண் 33 நோக்கி ஜெட் விமானம் வந்து கொண்டிருந்தது. தரை இறங்குவதற்கு 30 விநாடிகளுக்கு முன்பு ராணுவ ஹெலிகாப்டருடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்துக்கு உள்ளாவதற்கு சில நொடிகளுக்கு முன்பு ராணுவ ஹெலிகாப்டரின் பைலட்டுடன் பேசிய விமான நிலைய கட்டுப்பாட்டு அறை ஊழியர், நீங்கள் வரும் பாதையில் ஒரு ஜெட் விமானம் தரையிறங்க உள்ளது. அது உங்களுக்கு தெரிகிறதா? என்று கேட்டிருக்கிறார். ஆனால், அதற்கு சில நொடிகள் கழித்து ராணுவ ஹெலிகாப்டரின் பின்னால் ஜெட் விமானம் மோதி விட்டது. இதனால் ரன்வேயில் இறங்கும் முன்பு 2400 அடி உயரத்தில் கட்டுப்பாட்டை இழந்தது. தோராயமாக ஆற்றின் நடுவில் விழுந்தது என்பது தெரிய வந்துள்ளது.

நடுவானில் நேரிட்ட இந்த விபத்தில் பெரும்பாலானவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அசோசியேட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். விமானத்தில் பயணித்தவர்கள் யாரேனும் உயிருடன் இருக்கிறார்களா? என்பதை அறிய மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விபத்து குறித்து பேசிய அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, "இந்த விபத்து ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. எங்கள் அனைவருக்கும் இது ஒரு சிக்கலான தருணம்,"என்று கூறினார்.

Advertisement