மதவெறிப் பிடித்த ஆதித்யநாத்!
வட இந்தியாவில் இப்போது பிரபலமாக இருப்பது கன்வாரி யாத்திரை. இந்த யாத்திரிகள் கங்கை உற்பத்தியாகும் கங்கோத்ரிக்கும், ஹரித்வாருக்கும் நடந்து சென்று ‘புனித நீரை’ எடுத்து வந்து அவர்களின் ஊரிலிருக்கும் சிவன் கோவிலில் அபிஷேகம் செய்வார்கள். இந்த வருடம் யாத்திரை செல்லும் வழியில் இருக்கும் கடைகளெல்லாம் தம் உரிமையாளர் பெயரைக் கடைக்கு வெளியே கண்ணில் படுமாறு வைக்க வேண்டுமென உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டிருக்கிறது. யாத்திரை செல்பவர்கள் முஸ்லிம் கடைகளுக்குச் செல்லக் கூடாது என்பதுதான் இந்த உத்தரவின் உள் நோக்கம். புனிதம் கெட்டு விடுமாம்!
இனி இது குறித்து ஸ்வாமிநாதன் அன்க்ளேசரிய அய்யர் 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளேட்டில் எழுதிய கட்டுரையிலிருந்து சில பகுதிகள்:
இப்படித்தான் யூதர்களின் கடைகளை அடையாளம் கண்டுபிடித்து அடித்து நொறுக்கினர் நாஜிகள். இது 1838இல். ஹிமாலயா மருந்துக் கம்பெனி ஆயிரக் கணக்கில் கிளைகளை வைத்து ஆயுர்வேத மருந்துகளை விற்று வருகிறது. மனால் எனப்படும் முஸ்லிம் குடும்பத்தால் அது நடத்தப்படுகிறது. சிப்லா என்கிற மருந்துக் கம்பெனி உரிமையாளரின் பெயர் யூசுஃப் ஹமீத். எய்ட்ஸ் நோய்க்கான மருந்தை மேற்கத்தியக் கம்பெனிகளை விட மிகக் குறைந்த விலையில் (10இல் ஒரு பங்கு) விற்றதால் பிரபலமானது இந்த நிறுவனம்.இந்த நிறுவனங்களையெல்லாம் இழுத்து மூடி விட வேண்டுமென இந்த மதத் தீவிரவாதிகள் கேட்பார்களா?
முஸ்லிம்கள் மொஹர்ரம் ஊர்வலம் நடத்தும்போதும், கிறிஸ்துவர்கள் ஈஸ்டர் ஊர்வலம் நடத்தும்போதும் வழியில் கடை வைத்திருக்கும் இந்து உரிமையாளர்கள் தம் பெயர்களை வெளியே தெரியுமாறு எழுதி வைக்க வேண்டுமென்று யாராவது கட்டாயப் படுத்துவார்களா?