உபி:மருத்துவமனையில் தீ விபத்து- 10 பச்சிளம் குழந்தைகள் பலி!
உ.பி.ஸ்டேட்டின் ஜான்சியில் உள்ள மகாராணி .லக்ஷ்மி பாய் மருத்துவக் கல்லூரியின் பிறந்த குழந்தைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (NICU) நேற்று இரவு 10:45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.இதில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த நிலையில், 16 குழந்தைகள் உயிருக்கு போராடி வருகின்றனர். ஆக்ஸிஜன் செறிவூட்டிக்குள் ஏற்பட்ட மின்சுற்று காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என உ.பி துணை முதல்வர் பிரஜேஷ் பதக் தெரிவித்துள்ளார்.
அந்த நேரத்தில் 54 பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 44 குழந்தைகள் மீட்கப்பட்டன. அதில் 16 குழந்தைகள் படுகாயமடைந்தனர். உயிரிழந்த 10 குழந்தைகளில் ஏழு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர், மீதமுள்ள மூவரை அடையாளம் காண தேவைப்பட்டால் டிஎன்ஏ சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் இப்போது மருத்துவமனையில் முகாமிட்டுள்ளனர். மருத்துவமனை வளாகமே கண்ணீர் கூக்குரலுமாக காட்சியளிக்கிறது. காயமடைந்த 16 குழந்தைகள் உள்ளூர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களைக் காப்பாற்றும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் ஜான்சி மூத்த காவல் கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) சுதா சிங் தெரிவித்தார்.
முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்றிரவு மூத்த அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும், போதுமான தீயணைப்பு வாகனங்களை அனுப்பவும் உத்தரவிட்டார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரு.5 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியும் இந்த தீ விபத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்தை நெஞ்சை பதறவைப்பதாக கூறிய பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000ம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.