உபி:`பெண்களுக்கு ஆண் டெய்லர் அளவெடுக்க & ஜிம்மில் ஆண் டிரைனரை அனுமதிக்க வேண்டாம்''!
உத்தரப்பிரதேசத்தில் ஆண் தையல்காரர்கள் இனி பெண்களின் உடல் அளவீடுகளை எடுக்கக்கூடாது என்றும், பெண்களுக்கு தலைமுடி திருத்தம் செய்யும் பணியை ஆண்கள் செய்யக்கூடாது என்றும், பெண்களுக்கு ஆண்கள் ஜிம், யோகா பயிற்சி அளிக்கக்கூடாது என்றும் மகளிர் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. பரிந்துரைகளுக்கு சிலர் வரவேற்பளித்தாலும், பலரும் உபி அரசு தாலிபான் கொள்கைகளை நகலெடுப்பதாக விமர்சித்துள்ளனர். மகளிர் ஆணையம் பிற்போக்கு கருத்துகளைக் கொண்ட பரிந்துரைகளை வழங்கியிருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக, அக்டோபர் 28 ஆம் தேதி மகளிர் ஆணையக்கூட்டத்தில் ஒரு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில், பெண்கள் பாதுகாப்பு குறித்து சட்டம் இயற்றுமாறு அம்மாநில அரசை மகளிர் ஆணையம் வலியுறுத்தி இருந்தது. இந்தவகையில், பெண்களின் பாதுகாப்பை மேலும், அதிகரிப்பதற்கான வழிமுறைகள் என்று, அம்மாநில மகளிர் ஆணையம் சில பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது.
பபிதா சவுகான் தலைமையிலான UPSWC, இதுகுறித்தான அறிக்கையில், பொது மற்றும் வணிக இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்க பள்ளி பேருந்துகளில் பெண் பாதுகாப்புப் பணியாளர்களை நியமிக்க வேண்டும், பெண்களுக்கான துணிக்கடைகளில் பெண் ஊழியர்களை பணியமர்த்த வேண்டும் என பரிந்துரைத்துள்ளது. மேலும், யோகா, உடற்பயிற்சி கூடங்களிலும் ஆண் பயிற்சியாளர்கள் பெண்களுக்கு பயிற்சி அளிக்கக்கூடாது; முடி திருத்தம் செய்யும் இடங்களில் பெண்களுக்கு ஆண்கள் முடி திருத்தம் செய்யக்கூடாது போன்ற பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
பயிற்சி நிலையங்களில், சிசிடிவி கேமராக்கள் மற்றும் பெண்களுக்கான ஓய்வறைகள் இருக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.
இது குறித்து, UPSWC உறுப்பினர் மனீஷா அஹ்லாவத் தெரிவிக்கையில், "ஜிம்களில், பெரும்பாலான பயிற்சியாளர்கள் ஆண்கள்தான். இவர்களால் பெரும்பாலும் பெண்கள் தவறான நடத்தையை எதிர்கொள்கிறார்கள். அதை அவர்கள் வீட்டில் கூட பகிர்ந்து கொள்ள முடிவதில்லை. இதனை கருத்தில் கொண்டு சில பரிந்துரைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த திட்டங்களின் சாத்தியக்கூறுகள் இன்னும் ஆராயப்படவில்லை. அவை ஆராயப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டவுடன், முன்மொழிவுகள் செயல்படுத்துவதற்கான ஒரு கொள்கை வரைவு மாநில அரசிடம் சமர்ப்பிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
கூடுதலாக சமீபத்தில் கான்பூரில், ஜிம் பயிற்சியாளரால் பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய சூழலில் பெண்களின் பாதுகாப்பு குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.