துணைவேந்தர் என்னும் தலையில்லா பல்கலைகழகங்கள்!?
தமிழகம் உள்ளிட்ட எந்த மாநிலம் ஆனாலும் அறிவுசார் பிராந்தியமாகவும், ஆராய்ச்சியில் சிறந்ததாகவும் மாற வேண்டுமானால், அந்த மாநிலத்தில் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் திறமையான கல்வியாளர்களால் நிர்வகிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் உயர்கல்வி நிறுவனங்களான பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவிகள் கல்வியாளர்களைக் கொண்டு நிரப்பப்படாமல், அப்பதவியை ஏலத்தில் எடுக்கும் அளவுக்கு காசு பலம் கொண்டவர்களைக் கொண்டு நிரப்பப்படுகின்றன.அதுமட்டுமின்றி, துணைவேந்தர்களாக நியமிக்கப்படுபவர்கள் தங்களின் விரல் அசைவுக்கு வளைந்து ஆடுபவர்களாகவும் இருக்க வேண்டும் என்றும் ஆட்சியாளர்கள் விரும்புகின்றனர்.
இந்நிலையில் சென்னை பல்கலை., காமராஜர் பல்கலை. உட்பட 5 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் காலியிடம் நிரப்பாததால் மாணவர்கள் உயர் கல்வி பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. பொதுவாக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவி என்பது முக்கியமானது. ஆராய்ச்சி, உயர் கல்வி பயிலும் மாணவர்கள் நலன் உள்ளிட்ட பல்வேறு முடிவுகளை எடுக்க துணைவேந்தர் பணி அவசியம். தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட பல்கலைகள் செயல்பட்டாலும், கோவை பாரதியார் பல்கலைக்கு 2 ஆண்டாகவும், சென்னை பல்கலை, ஆசிரியர் கல்வியியல் பல்கலை.க்கு தலா ஓராண்டாகவும் துணைவேந்தர்கள் நியமிக்கவில்லை என்பது மாணவர் மற்றும் கல்வியாளர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணா, மதுரை காமராஜர் பல்கலைகளுக்கும் சுமார் 5 மாதத்திற்கு மேலாகியும் துணைவேந்தர் பணியிடம் காலியாக உள்ளது. திருச்சி பாரதிதாசன், சேலம் பெரியார் பல்கலைகளில் துணைவேந்தர் பதவிக்காலம் முடிந்தாலும், வேறு வழியின்றி ஏற்கெனவே இருந்த துணைவேந்தர்களுக்கு பணி நீடிப்பும் செய்திருப்பதாக கூறப்படுகிறது. துணைவேந்தர் இன்றி தொடர்ந்து பாதிக்கப்படுவதாக மாணவர்கள், பேராசிரியர்கள், ஓய்வூதியர்கள் புகார்களை எழுப்புகின்றனர்.
ஒரு பல்கலைக்கழகத்தின் உயிர்நாடியாக விளங்குபவர் துணைவேந்தர்தான். துணைவேந்தர் இல்லாத பல்கலைக்கழகம் தலையில்லாத பல்கலைக்கழகம் என்பதோடு இது பல்கலைக்கழகங்களின் முன்னேற்றத்தையும் கல்வித் தரத்தையும் கடுமையாக பாதிக்கும். எனவே ஆண்டுக் கணக்கில் துணைவேந்தர்களை நியமிக்காமல் இருப்பது என்பது உயர் கல்வியை பின்னுக்குத் தள்ளும் செயலாகும். பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை அப்போதைக்கப்போது நியமனம் செய்ய வேண்டிய பொறுப்பும் கடமையும் அரசுக்கு உண்டு என்பதை யார் நினைவூட்டுவது?.