For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

உலகளாவிய குழந்தைகள் தினம்!

05:58 AM Nov 20, 2024 IST | admin
உலகளாவிய குழந்தைகள் தினம்
Advertisement

ர்வதேச அளவில் பல நாடுகள் குழந்தைகள் தினத்தை வெவ்வேறு தேதிகளில் கொண்டாடுகின்றன.இருந்தாலும் உலக குழந்தைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 20-ந்தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.குழந்தைகள் நலனை நாம் கட்டாயம் பேணிக் காக்க வேண்டும். கூட்டு முயற்சி மூலம் இதை நிறைவேற்ற முடியும். எனவேதான், ஒவ்வொரு ஆண்டும் நவ.19ம் தேதியை பெண் குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்பு தினமாக அறிவித்த யூனிசெப் நிறுவனம், அடுத்த நாளான நவ.20ம் தேதியை குழந்தைகள் தினமாக அறிவித்தது.

Advertisement

கொஞ்சம் விரிவாகச் சொல்வதானால் 1925-ம் ஆண்டு ஜெனீவாவில், குழந்தைகள் நல்வாழ்வு தொடர்பாக ஒரு சர்வதேச மாநாடு நடைபெற்றது. அதில் குழந்தைகளுக்கான அடிப்படை உரிமைகள் மற்றும் அவர்களுக்கான கல்வி உறுதி குறித்து அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. 1954-ம் ஆண்டு டிசம்பர் 14-ந் தேதி, ஐ.நா.,குழந்தைகளுக்கிடையேயான சகோதரத்துவம் மற்றும் புரிதலை மேம்படுத்தும் வகையிலும் குழந்தைகளின் நலனுக்காக ஐ.நா., சபையின் முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையிலும் சர்வதேச குழந்தைகள் தினத்தை கடைபிடிக்கும் படி உலக நாடுகளைக் கேட்டுக்கொண்டது. இதனை தொடர்ந்து 1959-ம் ஆண்டு குழந்தைகளின் உரிமைகளுக்கான பிரகடனம் செய்த நாள் மற்றும் 1989-ம் ஆண்டு குழந்தைகளின் உரிமைகளுக்கான மாநாடு நடத்தப்பட்ட நாளான நவம்பர் 20-ந்தேதியை சர்வதேச குழந்தைகள் தினமாக ஐ.நா., சபை ஏற்றுக்கொண்டது.

Advertisement

குழந்தைகளின் உரிமைகளை மேம்படுத்தவும், துஷ்பிரயோகம், சுரண்டல், பாகுபாடு போன்ற வடிவங்களில் வன்முறையை அனுபவிக்கும் உலகெங்கிலும் உள்ள குழந்தைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தொழிலாளர்களாக தள்ளப்படும் குழந்தைகளை மீட்டெடுக்கவும் இந்த குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

குழந்தைகளை வளர்க்கும்போது, பெற்றோரும் குழந்தைகளோடு, குழந்தைகளாக மாறினால் மட்டும்தான் அவர்கள் நாளைய வெற்றியாளராக உருவெடுப்பார்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கனவு இருக்கும். அதை தெரிந்துகொண்டு, நிறைவேற்ற பெற்றோர் முயற்சிக்க வேண்டும். குழந்தைகள் தினத்தில் பெற்றோர், ஆசிரியர்கள் தத்தம் குறைபாடுகளை நீக்கிவிட்டு, குழந்தைகளின் ஆர்வத்தையும், அனுபவத்தையும், ஆசைகளையும், அணுகுமுறைகளையும், மனநிலையையும் கூர்மையாக கவனிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்களுக்கு எப்படியெல்லாம் பாடத் திட்டங்கள் அமைய வேண்டும், எப்படி போதிக்க வேண்டும் என்பதை தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அந்த சிறப்பான அணுகுமுறையானது குழந்தைகளின் நாளைய ஆக்கப்பூர்வமான சாதனைகளுக்கு அடிப்படையாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை!

இனி பெற்றோர் தம் பிள்ளைகளை கையாள சில டிப்ஸ்:

1. குழந்தைகளுடன் உரையாடுவதற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள். குறைந்தது ஒரு மணி நேரமாவது அவர்கள் சொல்வதைக் கேளுங்கள்.

2. எப்போதும் படிப்பு குறித்தும், ‘அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே’ என்று எதிர்மறையாகப் பேசாதீர்கள்.

3. குழந்தைகளை உரையாட விட்டு அவர்களுடைய கற்பனைத் திறனை, இந்த உலகம் பற்றிய கருத்துகளை உள்வாங்கி அனுபவியுங்கள். உங்கள் கருத்துகளையோ, நம்பிக்கைகளையோ, உங்களுக்குத் தெரிந்த தகவல்களையோ, குழந்தைகளிடம் திணிக்காதீர்கள்.

4. அவர்களுக்கு மாதம் தோறும் ஒரு புத்தகமாவது வாங்கிக் கொடுங்கள். அதை அவர்களுடன் சேர்ந்து நீங்களும் வாசியுங்கள். குழந்தைகளுக்கென்று குட்டியான நூலகம் ஒன்றை ஏற்படுத்திக் கொடுங்கள்.

5. கதைகளை நீங்கள் வாசிக்கும்போதோ அல்லது சொல்லும்போதோ குழந்தைகளின் தலையீட்டை, கேள்விகளை உற்சாகப்படுத்தி வரவேற்று உரையாடுங்கள்.

6. குழந்தைகளின் அத்தனை கேள்விகளுக்கும் பொய்யாகவாவது பதில் சொல்லி விட வேண்டும் என்று நினைக்காதீர்கள். உங்களுக்கு தெரியாததை தெரிந்து கொண்டு வந்து சொல்கிறேன் என்று சொல்லுங்கள். குழந்தைகளிடமும், குழந்தைகள் முன்பும் பெரியவர்கள் தோற்றுப் போவதற்கு அச்சமோ வெட்கமோ படக்கூடாது.

7. குழந்தைகளிடம் உங்கள் முழுத் திறமையையும் காட்டி அவர்களை எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று நினைக்காமல் அவர்கள் வெற்றி பெறுவதை உற்சாகப்படுத்துங்கள். உங்கள் குழந்தைகள் தனித்துவமானவர்கள். எனவே, மற்ற குழந்தைகளுடன் ஒருபோதும் ஒப்பிடாதீர்கள்.

8. குழந்தைகளை எப்போதும் அழுத்தத்திலேயே வைத்திருக்காதீர்கள். எண்ணற்ற பயிற்சிகள் (இசை, நடனம், நீச்சல், விளையாட்டு, ஸ்போக்கன் இங்கிலீஷ்) என்று குழந்தைகளை விரட்டிக்கொண்டே இருக்காதீர்கள். ஒரே நேரத்தில் அத்தனை பயிற்சிகளையும் கொடுப்பதை விட, அவர்களுடைய ஆர்வத்தை அறிந்து கொண்டு ஏதாவது ஒன்றில் மட்டும் அவர்கள் ஈடுபடுமாறு செய்வது நல்லது.

9. குழந்தைகளை சுதந்திரமாக, மகிழ்ச்சியாக உணரச் செய்யுங்கள். அதற்கான காலம், நேரம், சூழலை உருவாக்கிக் கொடுங்கள். எங்கே குழந்தைகள் மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் உணர்கிறார்களோ அங்கே மட்டுமே அவர்களுடைய படைப்பாக்கம் மிகச் சிறப்பாக வெளிப்படும்.

10. கூட்டுச்செயல்பாடுகளில் (விளையாட்டு, கதை சொல்லுதல், பாடல் பாடுதல்) என்று குழந்தைகளை ஈடுபடுத்துங்கள். அதுதான் பின்னால் அவர்கள் சமூகத்தோடு இயைந்து வாழும் உணர்வை கொடுக்கும்.

11. எப்போதும் குழந்தைகளிடம் போட்டியுணர்வை வளர்க்காதீர்கள். முதலிடம் இரண்டாம் இடம் என்பதெல்லாம் வெறும் எண்ணிக்கை மட்டுமே குழந்தைகளின் ஆளுமையை போட்டிகளுக்குள் சுருக்கி விடக்கூடாது.

12. குழந்தைகள் குட்டி மனிதர்கள். அந்தக் குட்டி மனிதர்கள், சரியான, சமமான, சமத்துவமான வாய்ப்புகளையும் சூழல்களையும் கொண்ட உலகில் வாழ்வதற்கான அத்தனை சந்தர்ப்பங்களையும் நாம்தான் உருவாக்க வேண்டும்.

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

Tags :
Advertisement