மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் & ஓய்வூதியம் 4% உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான DA அளவை 42 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.மேலும் இந்த DA உயர்வு ஜூலை 1, 2023 முதல் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
மத்திய அரசு பணவீக்க அளவுகளை அடிப்படையாக வைத்து அரசு ஊழியர்களுக்கான DA அளவை உயர்த்துகிறது. வழக்கமாக மத்திய அரசு அகவிலைப்படி அளவை ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் திருத்தம் செய்யப்படும்.DA அளவை 42 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக உயர்த்துவது மூலம் 47 லட்ச மத்திய அரசு ஊழியர்களும், 68 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் அடைவார்கள். மேலும் இந்த 4 சதவீத அகவிலைபடி உயர்வு மூலம் 18000 ரூபாய் அடிப்படை சம்பளம் கொண்ட மத்திய அரசு ஊழியருக்கு கிடைக்கு 7560 ரூபாய் DA தொகை 8280 ரூபாயாக அதிகரிக்கும். சுமார் 720 ரூபாய் கூடுதலாக கிடைக்கும். இதேபோல் 56900 ரூபாய் அடிப்படை சம்பளம் கொண்ட மத்திய அரசு ஊழியருக்கு கூடுதலாக DA-வில் 2276 ரூபாய் கிடைக்கும்.
இது குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் "மத்திய அரசு பணியாளர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன் மூலம், 42 சதவீதமாக இருக்கும் அகவிலைப்படி 46 சதவீதமாக உயர்கிறது. இதன்மூலம், நாடு முழுவதும் உள்ள ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசுப் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன் பெற இருக்கிறார்கள். பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியானது சமீபத்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் தொழிலாளர் பணியகத்தால் வெளியிடப்படுகிறது.
இதற்கு முன் கடந்த மார்ச் மாதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. அதுவும் முன் தேதியிட்டு ஜனவரி மாதம் முதல் அகவிலைப் படி உயர்த்தப்பட்டது. அப்போதும் 4 சதவீதம் உயர்த்தப்பட்டது.டிசம்பர் 2022-இல் முடிவடைந்த காலத்துக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் 12 மாத சராசரியின் சதவீத அதிகரிப்பின் அடிப்படையில் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டு 42 சதவீமாக அதிகரிக்கப்பட்டது.
விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு மத்திய அரசின் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. இதேபோல், கெஜட்டட் அல்லாத ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளத்தை போனஸாக வழங்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் காரணமாக 11.07 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள்" என்று அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.