பொது சிவில் சட்டம் - உத்தராகண்ட் சட்டப்பேரவையில் தாக்கல்!
நம் நாட்டைப் பொறுத்தவரை கிரிமினல் சட்டம் என்பது பொதுவானது. அதன்படி கொலை, கொள்ளை போன்ற குற்றவியல் தொடர்பான சட்டங்கள் அனைத்தும் பொதுவானவையே. இருப்பினும் அக்கிரிமினல் சட்டத்திலுள்ள உரிமையியல் சார்ந்த சட்டங்களான சிவில் சட்டங்கள் அதாவது குழந்தை தத்தெடுப்பு, திருமணம், விவாகரத்து போன்றவை மட்டும் தனிநபர் மற்றும் மதநம்பிக்கைகளுக்கு ஏற்றவாறு மாறுபடும். இதையொட்டி இந்தியா சுதந்திரம் அடைந்தது முதலே விவாதிக்கப்பட்டு வரும் சட்டம், பொது சிவில் சட்டமாகும். இந்த சட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பும், ஒரு தரப்பினரின் ஆதரவும் நிலவி வருகிறது. இந்தியாவில் வசிக்கும் சிறுபான்மையினர், பொது சிவில் சட்டத்தை தங்களது உரிமைகளை பறிக்கும் ஒன்றாகவே கருதுகிறார்கள். அதே சமயம் நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்கான பணிகளை சட்ட ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சுதந்திர இந்தியாவில் முதல் மாநிலமாக உத்தரகாண்ட் தனது சட்டப்பேரவையில் பொது சிவில் சட்டத்தை தாக்கல் செய்துள்ளது.
சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே கோவாவில் பொது சிவில் சட்டம் நடைமுறையில் உள்ளது. அங்கு போர்ச்சுக்கீசியர்களின் ஆட்சிக் காலத்தில் தொடங்கிய பொது சிவில் சட்ட நடைமுறை தொடர்ந்து அமலில் உள்ளது. சுதந்திரத்துக்குப் பிறகு முதல்முறையாக உத்தரகாண்ட்டில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த பொது சிவில் சட்டம் திருமணம், விவாகரத்து, சொத்துரிமை, குழந்தைகளை தத்தெடுப்பது உள்ளிட்ட பல்வேறு தனி நபர் உரிமைகள் தொடர்பாக அந்த நபர்களின் மதத்திற்கு ஏற்ப இயற்றப்பட்டிருக்கிறது.
2 ஆண்டுகளுக்கு முன் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த தீர்மானிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், பொது சிவில் சட்ட மசோதாவை தயாரிக்க உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான 5 பேர் கொண்டு குழு ஒன்று நியமிக்கப்பட்டது.
இந்த குழுவினர், பல்வேறு ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான வரைவு மசோதாவை தயார் செய்து முதல்வரிடம் அறிக்கையாக தாக்கல் செய்தனர். இந்த வரைவு மசோதாவுக்கு மசோதாவுக்கு மாநில அமைச்சரவை கடந்த 4ஆம் தேதி ஒப்புதல் வழங்கியது. இதனையடுத்து, பொது சிவில் சட்ட மசோதாவை உத்தரகாண்ட் சட்டசபையில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி இன்று (06-02-24) தாக்கல் செய்தார். இந்த பொது சிவில் சட்ட மசோதா மீது உத்தரகாண்ட் சட்டசபையில் விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த பொது சிவில் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்திலும் பதற்றம் நிலவுகிறது. அதனால், உத்தரகாண்ட் சட்டசபை வளாகப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், வளாகத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
இந்த பொது சிவில் சட்ட மசோதா வாக்கெடுப்பிற்கு பின்னர் நிறைவேற்றப்பட உள்ளது. மேலும், மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். ஆளுநர் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் அந்த மாநிலத்தில் அது சட்டமாக அமலுக்கு வரும். இதன் மூலம், சுதந்திரத்திற்கு பின், நாட்டிலேயே முதல் முறையாக பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் மாநிலமாக உத்தரகாண்ட் மாறும்.
ஆனால் இந்த மசோதா குறித்து ஆய்வு செய்ய போதுமான கால அவகாசம் கொடுக்காமல் நிறைவேற்ற அரசு திட்டமிடுவதாகவும், இது சட்ட நடைமுறைக்கு எதிரானது என்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் யஷ்பால் ஆர்யா குற்றம் சாட்டியுள்ளார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதை அடுத்து குறுக்கிட்டுப் பேசிய சபாநாயகர் ரிது கந்தூரி, இந்த மசோதா குறித்து ஆய்வு செய்ய போதுமான கால அவகாசம் வழங்கப்படும் என்றும், அதன் பிறகே மசோதா வாக்கெடுப்புக்கு விடப்படும் என்றும் உறுதி அளித்தார். இதையடுத்து, எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் சமாதானம் அடைந்தனர்.