நிலவின் துருவப் பகுதிகளில் தரைக்கடியில் தண்ணீர் - இஸ்ரோ கண்டுபிடிப்பு
அகமதாபாத்தை மையமாக கொண்டு செயல்படும் இஸ்ரோவின் ஸ்பேஸ் அப்ளிகேஷன் சென்டர் பிரிவு, சந்திராயன் திட்டத்தின் தரவுகளை ஐஐடி கான்பூர், யூனிவர்சிட்டி ஆஃப் சதன் கலிபோர்னியா ஆகிய பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆராய்ச்சி செய்து வருகிறது. முன்னதாக நிலவின் துருவப் பகுதிகளை ஆராய்ச்சி செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் கடந்த ஆண்டு சந்திரயான் 3 திட்டம் செயல்படுத்தப்பட்டு, அதில் விக்ரம் லாண்டர் நிலவின் தென் துருவப் பகுதியில் தரையிறங்கி சாதனை படைத்தது.
இந்த ஆய்வில் துருவப் பள்ளங்களின் மேற்பரப்பில் உள்ளதை காட்டிலும் அதற்கு கீழுள்ள சப்-சர்ஃபேஸ் பகுதியின் முதல் இரண்டு மீட்டர்களில் பனியின் அளவு ஐந்து முதல் எட்டு மடங்கு வரை பெரிதாக உள்ளதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இரண்டு துருவப் பகுதிகளிலும் இது காணப்படுவதாக தகவல்.வரும் நிலவு பயணங்களில் அந்த பனியின் மாதிரியை சேகரிக்கும் நோக்கில் சந்திரனில் துளையிடுவது முதன்மையான நோக்கமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மனிதர்கள் அங்கு தங்குவதற்கான சாத்தியக்கூறு அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், வட துருவப் பகுதியில் உள்ள பனியின் அளவு தென் துருவப் பகுதியை காட்டிலும் இரண்டு மடங்கு அதிகம் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இம்ப்ரியன் கால எரிமலை அவுட்-கேஸிங் (வாயு) ஏற்பட்ட போது துருவப் பகுதியில் பனியின் ஆதாரம் உருவாகி இருக்கலாம் என கருதப்படுகிறது. இதற்கு சுமார் ஏழு கருவிகளை ஆய்வுக் குழுவினர் பயன்படுத்தி உள்ளனர்.
சந்திரயான்-2ன் ட்யூயல் ஃப்ரீக்வென்ஸி சிந்தட்டிக் அப்பர்ச்சர் ரேடார் கருவியின் போலரிமெட்ரிக் ரேடார் தரவைப் பயன்படுத்தி துருவப் பள்ளங்களில் நீர் பனி இருப்பதற்கான சாத்தியக்கூறு குறித்து சுட்டிக்காட்டிய முடிவையும் இந்த ஆய்வு ஆதரிக்கிறது.
அதாவது இவ்வாறு நிலவில் தண்ணீர் இருப்பது 380 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் நிலவில் பூமியைப் போல் எரிமலை வெடிப்புகள் இருந்ததற்கான சாத்தியக் கூறுகளையும் உறுதி செய்திருப்பதாக அந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சந்திரயான் 4 திட்டத்தில் சந்திரனின் துருவப் பகுதியில் தரைப்பகுதியை துளையிட்டு ஆராய்ச்சி செய்ய இஸ்ரோ திட்டமிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
.