இந்திய வங்கிகளில்உரிமை கோரப்படாத வைப்புத்தொகை ரூ.42,270 கோடியாம்!
வங்கி கணக்கு விவரத்தை குடும்பத்தினரிடம் தெரிவிக்காமல் இறந்தவர்கள், காசோலை புத்தகம், வங்கி புத்தகத்தை தொலைத்து கணக்கை மறந்தவர்கள் என பல பிரிவுகளில் உரிமை கோரப்படாமல் வங்கிகளில் தொகை இருக்கிறது. அப்படி நம் இந்திய வங்கிகளில் உரிமை கோரப்படாத வைப்புத்தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு வங்கிகளில் உரிமை கோரப்படாத வைப்புத் தொகை 28 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதாவது, வங்கிகளில் உரிமை கோரப்படாமல் உள்ள பணத்தின் மதிப்பு ரூ.42,270 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 2021-22ம் நிதியாண்டில், பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் உரிமை கோரப்படாத வைப்புத் தொகை 32,934 கோடி ரூபாயாக இருந்தது. அதுவே, 2022-23ம் நிதியாண்டின் மார்ச் மாத இறுதியில் 42,270 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
கடந்த மார்ச் மாத நிலவரப்படி, 36,185 கோடி ரூபாய் பொதுத்துறை வங்கிகளிலும், 6,087 கோடி ரூபாய் தனியார் துறை வங்கிகளிலும் உரிமை கோரப்படாமல் உள்ளன. பொதுத் துறை வங்கிகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக உரிமை கோரப்படாமல் உள்ள வைப்புத்தொகைகள், ரிசர்வ் வங்கி பராமரித்து வரும் ‘டெபாசிட்டர் கல்வி, விழிப்புணா்வு நிதி’க்கு மாற்றப்படும்.
இந்தத் தொகைகள் குறித்த விவரங்கள் ’உத்கம் (UDGAM)’ என்ற இணையதளத்தில் பதிவேற்றப்படும். பொதுமக்கள் இதன் மூலம், உரிமை கோரப்படாமல் உள்ள தங்களது வைப்புத் தொகை பணம் குறித்து அறிந்து, சம்பந்தப்பட்ட வங்கிகளை அணுகி அவற்றை உரிமை கோரமுடியும். அதாவது Unclaimed Deposits Gateway to Access Information என்பது அதன் விரிவாக்கம் ஆகும். ஆகஸ்ட் 17-ம் தேதி 7 வங்கிகளுடன் இணைந்து தொடங்கப்பட்ட இணையத்தளத்தில் இதுவரை பல வங்கிகள் இணைந்து இருக்கின்றன. கைவிடப்பட்ட டெபாசிட் கணக்குகள் பற்றி விவரங்களை வங்கிகள் இந்த இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றன. அதில் தேடுதல் வாய்ப்பு தரப்பட்டுள்ள இடத்தில் கேட்கப்படும் சில விவரங்களை பதிவிட்டு தேடும் வசதி உள்ளது.
உரிமை கோரப்படாத சுமார் ரூ42,000 கோடியும் 90% அளவிற்கு இந்த இணையதளத்தில் வங்கிகள் பதிவேற்றி இருக்கின்றன. 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் இயக்கப்படாத கைவிடப்பட்ட கணக்குகளில் இருந்த தொகையை ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் ஒப்படைத்துள்ளன. முதலீட்டாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதி என்ற பெயரில் வைக்கப்பட்டுள்ள இந்த தொகையை கணக்கை கைவிட்டவர்கள் வாரிசுதாரர்கள் பணத்தை திரும்பப்பெற வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.