For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

கோட்சேவின் பேரன்களுக்கு எதிராக பெரியாரின் பேரன்கள் !-இருசக்கர வாகன பேரணியை தொடங்கி வைத்த உதயநிதி- வீடியோ

10:00 PM Nov 15, 2023 IST | admin
கோட்சேவின் பேரன்களுக்கு எதிராக பெரியாரின் பேரன்கள்   இருசக்கர வாகன பேரணியை தொடங்கி வைத்த உதயநிதி  வீடியோ
Advertisement

திமுக இளைஞர் அணி 2வது மாநில மாநாடு சேலத்தில் டிசம்பர் 17ம் தேதி நடக்கிறது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 10 லட்சம் இளைஞர்கள் பங்கேற்கின்றனர். இதையொட்டி திமுக இளைஞர் அணி பைக் பிரசார பேரணி கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் இன்று காலை தொடங்கியது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பேரணியை தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மனோதங்கராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். உதயநிதி ஸ்டாலினும் பைக் பேரணியில் சிறிது தூரம் கலந்து கொண்டார். இந்த பேரணியில் 188 பைக்குகளில் இளைஞர் அணியினர் பங்கேற்கின்றனர்.

Advertisement

இந்த இளைஞரணி இருசக்கர வாகனப் பேரணியைத் தொடங்கி வைத்தது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் “கோட்சே தூக்கிலிடப்பட்ட இந்நாளில், கோட்சேவின் பேரன்களுக்கு எதிராக பெரியாரின் பேரன்கள் கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து புறப்படுகிறோம்! மாநில உரிமை மீட்புக்கான கழக இளைஞர் அணியின் 2 ஆவது மாநில மாநாடு சேலத்தில் டிசம்பர் 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த முக்கியத்துவமிக்க மாநாட்டின் முழக்கத்தை, தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் சேர்க்கின்ற விதமாக, 188 இரு சக்கர வாகனங்களைக் கொண்ட #DMKriders-ன் வாகனப் பேரணியை கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை எதிரே இன்று தொடங்கி வைத்தோம். 13 நாட்கள் - 234 தொகுதிகள் - 504 பிரச்சார மையங்கள் - 8,647 கிலோமீட்டர் என லட்சோப லட்ச இளைஞர்களை சந்திக்கவுள்ள இந்த இருசக்கர வாகனப் பேரணி, கழக வரலாற்றில் என்றைக்கும் நிலைத்திருக்கும். இந்தப் பயணத்தை மேற்கொள்ளும் கழக இளைஞர் படைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்! பாசிஸ்ட்டுகளை விரட்டி - மாநில உரிமைகள் மீட்க உறுதியேற்போம். ” என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement

இன்று முதல் வரும் 27ம் தேதி வரை 13 நாட்களில் 8 ஆயிரத்து 647 கி.மீ தூரத்தை கடக்கும் வகையில் பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மேலும் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் 504 பிரசார மையங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணிந்து, கறுப்பு-சிவப்பு நிற சீருடை அணிந்த இளைஞர் அணியினர் இந்த பயணத்தில் ஈடுபட்டுள்ளனர். பைக்கில் கறுப்பு-சிவப்பு நிற கொடிகளை கட்டியிருந்தனர். இந்த பேரணி தமிழ்நாடு முழுவதும் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலங்களிலும் செல்கிறது. 2வது இளைஞர் அணி மாநாட்டில் இணைவோம், மாநில உரிமை மீட்போம் என்ற வாசகம் தொடக்கவிழா நடைபெற்ற இடத்தில் பெரிய எழுத்துகளில் பொறிக்கப்பட்டிருந்தது. உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளான நவம்பர் 27ம் தேதி சென்னையில், பயணம் நிறைவு பெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் உதயநிதி பேசிய போது, “தி.மு.க. இளைஞரணி சார்பில் 2-வது மாநில உரிமை மீட்பு மாநாடு சேலத்தில் நடைபெறுகிறது. மத்திய அரசு நமது உரிமைகளை பறித்து வருகிறது. உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தி நடைபெறும் மாநாட்டில் திரளான நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும். கருப்பு-சிவப்பு சட்டை அணிந்து போர் வீரர்கள் போல் கலந்து கொள்ள வந்துள்ள அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இருசக்கர பேரணியில் கலந்து கொண்டுள்ள நிர்வாகிகள் மாவட்டம் தோறும் சென்று லட்சக்கணக்கான மக்களை சந்திக்க உள்ளீர்கள்.

நீங்கள் நமது அரசினுடைய கொள்கைகளை, சாதனைகளை எடுத்து கூற வேண்டும். கடந்த 9 ஆண்டுகளில் மத்திய அரசு மக்களுக்கு பல்வேறு இன்னல்களை செய்து உள்ளது. இதை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும். கல்வி உரிமையை விட்டுக்கொடுத்து உள்ளோம். நீட் தேர்வின் அவல நிலையை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். நாம் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்து வாங்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம். தற்பொழுது இணையதளம் மூலமாக 9 லட்சம் பேரும், போஸ்ட் கார்டு மூலமாக 10 லட்சம் பேரும் கையெழுத்திட்டுள்ளனர். ஒரு மாதத்தில் 50 லட்சத்தை தாண்டி கையெழுத்து வாங்க வேண்டும்.

கடந்த 9 ஆண்டுகளில் தமிழக அரசு இதுவரை ஒன்றிய அரசுக்கு ரூ. 25 ஆயிரம் கோடி கொடுத்துள்ளோம். ஆனால், ஒன்றிய அரசு நமக்கு ரூ.2000 கோடி தான் தந்துள்ளது. நமது உரிமைகளை மீட்க நாம் போராட வேண்டும். பா.ஜ.க தமிழ்நாட்டுக்குள் நுழைய வேண்டும் என எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் அதனால் நுழையவே முடியாது.

மதுரையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாநாடு எப்படி நடந்தது என்று அனைவருக்கும் தெரியும். ஒப்புக்கு செப்பாக மாநாடு நடத்தப்பட்டது. சேலத்தில் நடைபெறும் இளைஞரணி எழுச்சி மாநாடு வரலாற்று சிறப்புமிக்க மாநாடாக அமைய வேண்டும். நமது மாநாடு குறித்து வரலாறே பேச வேண்டும். சேலம் மாநாடு மத்திய அரசு திரும்பி பார்க்கும் வகையில் அமைய வேண்டும். தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் சொன்னதை மட்டும் இன்றி சொல்லாத பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி உள்ளது.

குறிப்பாக 4 திட்டங்களை நினைவுகூர்கிறேன். இலவச மகளிர் பேருந்து திட்டம் முதல் திட்டமாக கையெழுத்திடப்பட்டது. இதன் மூலமாக ஒரு மகளிர் மாதம் ஆயிரம் ரூபாய் மிச்சப்படுத்த முடியும். ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் மிச்சமாகலாம். தேர்தல் வாக்குறுதியில் சொல்லாத திட்டமான புதுமைப்பெண் திட்டம் மூலமாக அரசு பள்ளியில் படித்து உயர் கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.ஆயிரம் வழங்கப்படுகிறது. 1 முதல் 5-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 31 ஆயிரம் பள்ளிகளில் 17 லட்சம் மாணவர்கள் இந்த திட்டத்தால் பயன் அடைந்து வருகிறார்கள். பக்கத்து மாநிலங்கள் இந்த திட்டங்களை வியந்து பார்க்கும் அளவிற்கு அரசு செயல்பட்டு வருகிறது. செப்டம்பர் 15-ம் தேதி அண்ணா பிறந்தநாளில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஒரு கோடியே 18 லட்சம் மகளிர் இதன் மூலமாக பயன்பெறுகிறார்கள்.

தற்பொழுது இருசக்கர வாகன பேரணி மேற்கொண்டுள்ள நிர்வாகிகள் 15 நாட்கள் 8,400 கிலோ மீட்டர் பயணம் செய்ய உள்ளீர்கள். நீங்கள் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள வேண்டும். விதிமுறைகளை பின்பற்றி பயணத்தை மேற்கொள்ளுங்கள். உங்களது குடும்பத்தினர் உங்களுக்காக காத்திருக்கிறார்கள். நான் சேலத்தில் உங்களுக்காக காத்திருப்பேன். இந்த பயணம் வெற்றி பயணமாக அமைய வேண்டும். இந்த பேரணியில் கலந்து கொண்டுள்ள 188 பேரும் தமிழகம் முழுவதும் 3 லட்சம் பேரை சந்திக்க உள்ளீர்கள். நீங்கள் பொதுமக்களிடம் நமது சாதனைகளை எடுத்துக் கூற வேண்டும்.” என்று பேசி வழி அனுப்பினார்.

Tags :
Advertisement