For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

தமிழ் தாத்தா உ. வே. சாமிநாதையர் மறைந்த நாளின்று!

06:15 AM Apr 28, 2024 IST | admin
தமிழ் தாத்தா உ  வே  சாமிநாதையர் மறைந்த நாளின்று
Advertisement

மிழ் மொழியின் பழம்பெருமையைப் பலர் அறியாமல் வாழ்ந்து வந்த காலத்தில், அதாவது 19-ஆம் நூற்றாண்டின் நடுவில், தமிழுக்கு புத்துயிர் ஊட்ட, பலர் தோன்றினார்கள். அவர்களில் பெருமைக்குரியவராகத் திகழ்பவர்தான் தமிழ்த் தாத்தா என்று அழைக்கப்படும் பேராசிரியர் உ.வே. சாமிநாதன் என்கிற உ.வே.சா.! அதாவது அழிந்துக்கொண்டுயிருந்த சங்ககால நூல்களை, ஓலைச்சுவடிகளாக இருந்தவற்றை தேடித்தேடி கண்டறிந்து அதை பதிப்பித்த உரைநடை ஆசிரியர், பதிப்பாசிரியர், தமிழறிஞர் என்பதால் அவரை தமிழ் தாத்தா என தமிழ் அறிஞர்கள் அவரை அழைக்கிறது. தமிழின் ஈடு இணையற்ற இலக்கியப் படைப்புகளை இன்றைக்கு நாம் வாசிக்கிறோம் என்றால், அதற்கு அடிகோலியவர் `தமிழ்த் தாத்தா' உ.வே.சாமிநாத ஐயர். காலத்தால் போற்றிப் பாதுகாக்கத்தக்க பொக்கிஷப் படைப்புகள் பலவும் கரையான் அரிப்புக்கும், தீயின் நாக்குக்கும், செல் பாதிப்புக்கும் இரையானது தமிழ் மொழிக்கு ஏற்பட்ட பேரிழப்பு. இழந்தவை போனாலும், எஞ்சிய செல்வங்களைக் காப்பாற்றி இன்றைய தமிழ்த் தலைமுறையின் பார்வைக்கு எடுத்து வந்தவர் நம் `தமிழ்த் தாத்தா' அவர்களே! கல்தோன்றும் காலத்து முன்தோன்றிய மூத்த தமிழ் மொழி, இன்றைக்கும் இளமை குன்றாமல் இருப்பதற்கு தமிழ் அறிஞர்களின் தமிழ் மொழி மீதான அர்ப்பணிப்புதான் முக்கியக் காரணம். தமிழுக்காகவே தன்னை வார்த்துக் கொண்ட அறிஞர் பெருமக்களில் தனித்து நிற்பவர் உ.வே.சா. தமிழின் தொன்மைக்கும் உண்மைக்கும் உ.வே.சா. அவர்களின் தீவிரமான தேடுதலில் விளைந்த படைப்புகளே ஆதாரங்கள். இன்றைய தமிழ்த் தலைமுறைப் பிள்ளைகளுக்கான பெரும் சொத்துக்களைத் தேடித்தந்த உ.வே.சா.

Advertisement

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகிலுள்ள உத்தமதானபுரம் என்கிற கிராமத்தில் வேங்கடசுப்பையா – சரஸ்வதி தம்பதியரின் மகனாக 1855 பிப்ரவரி 19ந்தேதி பிறந்தார் வேங்கடநாதன். பிற்காலத்தில் திருவாடுதுறை ஆதின மடத்தில் பயிலும்போது சாமிநாதன் என பெயர் மாற்றினார் ஆசிரியர். அது பின்னர் ஊர் பெயரையும், தந்தை பெயரையும் முன்னெழுத்துக்களாக இணைக்கும் வழக்கப்படி உ.வே.சாமிநாதன் ஆனார். அதனை சுருக்கி உ.வே.சா என அழைத்தனர்.

Advertisement

தொல்காப்பியம் தொடங்கி சங்க இலக்கியங்கள் வரை அத்தனை இலக்கியங்களையும் இன்று நம்மால் டிஜிட்டலிலேயே படிக்க முடிகிறது. ஆனால், இவை அத்தனையும் இவ்வளவு தூரம் கடந்துவந்திருப்பதற்குப் பின்னால் நமக்குத் தெரியாத எத்தனையோ அறிஞர்களின் உழைப்பு இருக்கிறது. பழைய ஓலைச்சுவடிகள் முதல் இன்றைக்கு கேட்ஜெட்களில் பயன்படுத்தும் யுனிகோடு எழுத்துருக்கள் வரை அத்தனைக்கும் இது பொருந்தும். அப்படி நம் தமிழ் இலக்கியங்கள் காலவோட்டத்தில் கரைந்துபோகாமல் நம் கைகளுக்கு கொண்டுவந்து சேர்த்தவர் உ.வே.சா. இத்தனைக்கும் அக்காலத்தில் நூல்கள் அனைத்தும் ஏட்டுச் சுவடிகளில் (பனை ஓலையில்) எழுதப்பட்டிருந்தன. இந்நிலையில் இவர், இதுபோன்ற ஏட்டுச்சுவடிகளை ஆராய்ந்து பின்பு நூல் வடிவிலே பதிப்பிக்கும் பொருட்டு திருவாவடுதுறை, திருப்பனந்தாள், தருமபுரம் போன்ற தமிழ் வளர்த்து வரும் ஆதீனங்களில் சுவடிகளைத் தேடி அலைந்தார். அங்கு அருமையான சுவடிகள் பல கரையான்கள் அரிக்கப்பட்ட நிலையில் இருக்கக் கண்டு மனம் புண்பட்டார். அப்போது ஆங்கிலேயர் ஆட்சி நம் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்நாளில் பழந்தமிழ் சுவடிகளைக் கற்பவரும் இல்லை, அவற்றை பாதுகாக்க நினைப்பவரும் இல்லை என்ற நிலை நாட்டில் நிலவியது.

இந்நிலையிலும் இவரது தமிழ் ஆர்வத்தைக் கண்டு வியந்த தருமபுரம் ஆதீனத்தின் தலைவராக இருந்த ஸ்ரீ மாணிக்கவாசகர் தேசிகர் ஆதீனத்தில் இருந்த 50-க்கும் மேற்பட்ட சுவடிகளை உ.வே. சாமிநாதருக்கு கொடுத்து உதவினார். அந்த ஏட்டுச் சுவடிகளை நூலாக வெளியிட, இவருக்கு வேண்டிய உதவிகளை செய்ய கும்பகோணத்தில் முன் சீப்பாக இருந்த ராமசாமி என்பவர் முன்வந்தார். பின்னர் ராமசாமியின் உதவியால் உ.வே.சா. முதன் முதலில் பதிப்பித்த நூல் "சீவகசிந்தாமணி'. அடுத்து சங்க இலக்கியங்களுள் ஒன்றான "பத்துப்பாட்டு' என்ற நூலை உ.வே.சா. அச்சிட்டு வெளியிட்டார். அதன் பிறகு ஐம்பெருங்காப்பியங்களில் "சிலப்பதிகாரம்', "மணிமேகலை' போன்ற நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டார். இன்றளவும் சங்க இலக்கிய நூல்களில் சிறந்த உரை நூலாக உ.வே.சா எழுதிய மணிமேகலையை குறிப்பிடுகின்றனர்.

அடுத்து "குறுந்தொகை' என்ற இலக்கியத்திற்கு உரை எழுதி வெளியிட்டார். இதைத் தொடர்ந்து எண்ணற்ற நூல்களை வெளியிட்டு தமிழுக்கு அரும்பணியாற்றினார். இவர் பதிப்பித்த நூல்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். "சங்க நூல்கள்', "பிற்கால நூல்கள்', "இலக்கண நூல்கள்', "திருவிளையாடற் புராணம்' போன்ற காவிய நூல்களாகும். ஆகமொத்தம் ஏட்டுச் சுவடிகளைப் பதிப்பித்து நூலாக வெளியிட உ.வே.சா. பட்ட இன்னல்கள் கணக்கில் அடங்காதவை.

இவர் தொடக்கக் கல்வியை திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பயின்றார். பின்னர் தனது 17 வயதில் திருவாவடுதுறை ஆதீனத்தில் திவானாகப் பணியாற்றிய மீனாட்சி சுந்தரத்திடம் ஆறு ஆண்டுகள் தமிழ் கற்றார். பின்னர் கும்பகோணம் கல்லூரியில் 23 ஆண்டுகளும், சென்னை மாநிலக் கல்லூரியில் 16 ஆண்டுகளும் பேராசிரியராகப் பணியாற்றினார். இவர் மாநிலக் கல்லூரியில் பணிபுரிந்த போது, சென்னை திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரன் பேட்டைக்கு நிரந்தரமாகக் குடி பெயர்ந்தார். 1906-ஆம் ஆண்டு சென்னை அரசாங்கம் இவரது தமிழ்த் தொண்டை பாராட்டி "மகா மகோ பாத்யாயர்' என்ற பட்டத்தை வழங்கியது. 1932-ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகம் இவருக்கு "தமிழ் இலக்கிய அறிஞர்' என்ற விருதை வழங்கிக் கௌரவித்தது.

1937-ஆம் ஆண்டு சென்னையில் மகாத்மா காந்தி தலைமையில் நடைபெற்ற இலக்கிய மாநாட்டில் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்து உ.வே.சா. உரை நிகழ்த்தினார். இந்த உரையை கேட்ட மகாத்மா, "இந்த பெரியவரின் அடிநிழலில் இருந்தவண்ணம் நான் தமிழ் கற்க வேண்டுமென்ற ஆர்வமிகுதிதான் என்னிடம் எழுகிறது' என்றார். இம் மாநாட்டின் போது அனைவராலும் "தமிழ்த் தாத்தா' என்று அழைக்கப்பட்ட உ.வே. சாமிநாதன் காந்தியடிகளைவிட பதினைந்து வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் 1940-ஆம் ஆண்டு "என் சரித்திரம்' என்ற நூலை எழுதத் தொடங்கினார். இந்நூலில் தமிழ் வளர்ச்சி, தமிழ் நாட்டின் வரலாறு, அவர் காலத்தில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள், புரவலர்கள், ஆதீனத் தலைவர்கள் ஆகியோரின் வரலாற்றுக் குறிப்புகள் அடங்கியிருந்தன. இந்நூல் முழுமையடைவதற்கு முன்னரே 1942-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 28-ஆம் நாள் இரு நூற்றாண்டைக் கண்ட பெருமிதத்தோடு உ.வே.சா. இவ்வுலகை விட்டு மறைந்த போதிலும், காலமெல்லாம் வாழும் தமிழ்மொழிபோல் தமிழ்த் தாத்தாவாக என்றென்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

Tags :
Advertisement