ட்விட்டர் (X)-தளம் வழியாக பண பரிமாற்றம் செய்யும் வசதி!..
ஹைடெக் மற்றும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் நடவடிக்கைகளால் மக்களிடையே ஆன்லைன் பண பரிமாற்றம் தொடர்பான சேவைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏற்கனவே சம்பந்தப்பட்ட வங்கிகளின் செயலிகள் மட்டுமல்லாது கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட செயலிகள் பண பரிமாற்றம் செய்ய பயன்பாட்டில் இருந்து வருகிறது. இப்படியான நிலையில் வாட்ஸ்அப் செயலி மூலம் பண பரிமாற்றம் செய்யும் வசதியானது செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் ட்விட்டர் (X)-இல் செய்யலாம் பண பரிமாற்றம் செய்ய வழி செய்யப்பட்டு வருகிறதாம்..!
பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர் (எக்ஸ்) தளத்தை வாங்கியதிலிருந்து அதனுடைய உரிமையாளரான எலான் மஸ்க் பல அதிரடியான மாற்றங்களை கொண்டு வருகிறார். குறிப்பாக ட்விட்டர் என்று பெயர் இருந்த நிலையில், அதனை (எக்ஸ்) என்று பெயரை மாற்றம் செய்தார்.ட்விட்டரின் அடையாளமாக திகழ்ந்த நீல நிற பறவை நீக்கப்பட்டது. தொடர்ந்து பணம் செலுத்தினால் மட்டுமே அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கு அளிக்கப்படும் ப்ளூ டிக் கொடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் இவர்கள் மட்டுமே 10,000 எழுத்துகள் வரை ட்வீட் செய்யலாம் என பல வசதிகளை அறிமுகம் செய்தார்.
மேலும் அரசு பிரதிநிதிகள், அரசாங்கம் தொடர்பான கணக்குகளுக்கு தனித்தனியாக நிறங்களில் அதிகாரப்பூர்வ கணக்கு வழங்கப்பட்டது. அதேசமயம் எக்ஸ் செயலியில் உணவுகளை ஆர்டர் செய்தல், பணம் அனுப்புதல் போன்றவற்றை ஒரே செயலியில் மேற்கொள்ளும் வகையில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வர திட்டங்கள் கொண்டு வரப்படும் என தெரிவித்திருந்தார். அதேசமயம் பிற சமூக வலைத்தளங்களில் இருக்கும் ப்ளாக் செய்யும் வசதி விரைவில் நீக்கப்பட இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்தது மிகப்பெரிய அதிருப்தியை உண்டு பண்ணியது.
அதனை தொடர்ந்து தற்போது எக்ஸ் வலைதளத்தின் மூலம் எலான் மஸ்க் பணம் பரிமாற்றம் செய்யும் வசதியை கொண்டு வரவுள்ளதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே, எக்ஸ் வலைதளத்தின் மூலம் பணம் பரிமாற்றம் செய்யும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி கொண்டிருந்த நிலையில், தற்போது எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய எலான் மஸ்க் ” எக்ஸ் தளத்தின் மூலம் பயனர்கள் பண பரிமாற்றம் செய்யும் வசதியை கொண்டு வரவுள்ளோம். இதற்கான உரிமம் பெற அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். அரசாங்கம் ஒப்புதல் தந்தவுடன் எங்களுடைய எக்ஸ் தளத்தின் மூலம் மற்றவர்களுக்கு பண பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.சரியாக சொல்லவேண்டும் என்றால் அடுத்த ஆண்டு (2024) அரசு ஒப்புதல் கொடுக்கும் எனவே, அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் இருந்து பயனர்கள் எக்ஸ் செயலி மூலம் பண பரிமாற்றம் செய்த் கொள்ளலாம்” என கூறியுள்ளார். வழக்கமாக மக்கள் பணம் பரிமாற்றம் செய்து கொள்ள கூகுள் பே, போன் பே போன்ற செயலிகளை பயன்படுத்தி வருகிறார்கள். எனவே, அந்த பண பரிமாற்றம் தற்போது எக்ஸ் தளத்திலேயே கொண்டுவரவுள்ளதால் பயனர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.