ட்விட்டர் இணைய முகவரி ‘எக்ஸ்’ ஆனது!
சர்வதேச அளவில் முன்னணி சமூக வலைத்தளமான ட்விட்டரை எலான் மஸ்க் விலைக்கு வாங்கியதில் இருந்து அத் தளத்தில் அன்றாடம் ஏதாவதொரு மாற்றங்களை மேற்கொண்டு வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். முன்னதாக் பணியாளர்கள் குறைப்பு, பயனர்களுக்கான கட்டண விகிதங்கள், லோகோ மற்றும் பெயர் மாற்றம் என நித்தம் பல அதிரடி மாற்றங்களை நிகழ்த்தி வந்தார். உள்ளடக்கத்திலும் பல உற்சாகமான மாற்றங்களை செய்தார். பதிவின் நீளம் முதல், வீடியோக்களின் பல மணி நேர ஓட்டம் வரை அந்த மாற்றங்கள் தொடர்ந்தன. பல்வேறு கட்டண அடிப்படையில் பயனர்களை எக்ஸ் தளம் இழுத்தடித்தாலும், பயனர்களுக்கும் தங்கள் வருவாயில் குறிப்பிட்ட பங்கினை தர ஆரம்பித்தன. இதனால் யூடியூப் பாணியில், கிரியேட்டர்களும் களமிறங்கி, வருவாய் ஈட்டினார்கள். ட்விட்டர் என்பதை அனைத்துக்குமான செயலி அல்லது தளமாக அவர் மாற்றினார்.அந்த வகையில் நிறுவனத்தின் சின்னமான பறவை சின்னத்தை புதிய X லோகோவுடன் மாற்றிய பின்னரும் அதன் யுஆர்எல் மாற்றப்படவில்லை. அந்த மாற்றம் தற்போதுதான் நிகழ்ந்துள்ளது.
ஆம் பயனர்கள் இன்று twitter.com ஐப் பார்வையிட்டபோது, அவர்கள் x.com தளத்திற்கு திருப்பி விடப்பட்டனர்.பிரௌசர் வழியாக மைக்ரோ பிளாக்கிங் தளத்தை அணுகுபவர்களை ஒரு பாப்-அப் அறிவிப்பு வரவேற்றது. அதில், “x.com க்கு வரவேற்கிறோம்! நாங்கள் எங்கள் URL ஐ மாற்றுகிறோம் என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம். ஆனால் உங்கள் தனியுரிமை மற்றும் தரவுப் பாதுகாப்பு அமைப்புகள் அப்படியே இருக்கும்” என்று தெரிவித்துள்ளது.
மேலும் இதுதொடர்பாக எலான் மஸ்க் வெளியிட்டுள்ள பதிவில், முன்பு ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட தளம் x.com க்கு முழுமையாக இடம்பெயர்ந்துள்ளதாக எலான் மஸ்க் பகிர்ந்து கொண்டார். அதில், “அனைத்து முக்கிய அமைப்புகளும் இப்போது x.com இல் உள்ளன." நீல நிற வட்டத்தில் வெள்ளை எக்ஸ் கொண்ட லோகோவின் படத்தையும் அவர் வெளியிட்டார். லோகோவில் இரண்டு நீல நிற நிழல்கள் உள்ளன. இந்த பிளாட்ஃபார்மின் லோகோ மீண்டும் மாற்றப்படுமா? என்பது தெளிவாகத் தெரியவில்லை.