விண்ணில் மிதக்கும் சுனிதா வில்லியம்ஸ் மீட்பில் அரசியல்: டிரம்ப் குற்றச்சாட்டு!
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் விடப்பட்டதற்குப் பின்னால் அரசியல் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வெள்ளை மாளிகையில் தனியார் தொலைக்காட்சிக்கு அமெரிக்க அதிபர் டிரம்பும், அரசு செயல்திறன்துறை தலைவர் எலான் மஸ்க்கும் பேட்டி அளித்தனர். அப்போது பேசிய டிரம்ப், சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட விண்வெளி வீரர்களை பைடன் கைவிட்டதாக குற்றம் சாட்டினார். பட்ச் வில்மோர், சுனிதா வில்லியம்ஸ் ஆகிய விண்வெளி வீரர்களை மீட்க நடவடிக்கை துரிதமாக எடுக்கப்பட்டு வருவதாகவும் இருவரும் தெரிவித்தனர்.
கடந்தாண்டு ஜூன் மாதம் 5-ஆம் தேதி சிலநாட்கள் விண்வெளி பணிகளுக்காக சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சுனிதா வில்லியம்ஸ் சென்ற ஸ்டார்லைனர் விண்வெளி வாகனத்தில், பழுது ஏற்பட்டதால் அவர் பூமிக்குத் திரும்ப முடியாமல் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திலேயே சிக்கிக் கொண்டுள்ளார்.
8 மாதங்களாக அந்தரத்தில் சுழன்று வரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸை அடுத்த மாதம் 19-ஆம் தேதி பூமிக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.