டிராகன் = விமர்சனம்!
ஒரு சினிமா என்றால் கொஞ்சம் கலகலப்பு, தக்கணூண்டு காதல், அளப்பறிய நகைச்சுவை, திகட்டாத சென்டிமென்ட், ரசிகனே விரும்பும் திடீர் திருப்பம், சகலருக்கும் பிடித்த பாடல்கள் போக விருந்தில் அப்பளம் போல் ஒன்றிரண்டு சண்டைகள் என இருந்தால் அது படம்,. அதுதான் சினிமா என்கிற எண்ணத்தை மறுபடியும் நிரூபித்துள்ள படமே 'டிராகன்' அதிலும் கல்லூரி வாழ்க்கையை, ஈடன் தோட்டம் எனும் சொர்க்கத்தில் ஆனந்தமாய் திரிந்த ஆதாம், ஏவாளுக்கு இணையாக ஃபீல் பண்ணி திரியும் இளசுகளுக்கு ஒரு ஆக்கப்பூர்வமான மெசெஜ் சொல்லும் சினிமா என்று சொல்வதும் மிகையல்ல.
நாயகன் பிரதீப் ரங்கநாதன் காலேஜூல் தன் பெயரான டி.ராகவன் என்பதை ‘டிராகன்’ என்று சுருக்கிச் சொல்லிக் கொண்டு அலப்பறை செய்து பொழுதை கழித்து வருகிறார். ஒரு சூழலில் காலேஜ் பிரின்ஸ்பாலுடன் (மிஷ்கின்) ஏற்பட்ட பிரச்சினையால் 43 அரியர்களுடன் காலேஜை விட்டு பாதியிலேயே வெளியேறுகிறார். அதைத் தொடர்ந்து பல மாதங்களாக வேலை வெட்டி எதுவும் செய்யாமல் ஃப்ரண்ட்ஸூகளிடம் பணம் வாங்கி பெற்றோரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். அவரின் இந்த ஊதாரித்தனத்தால் அவரது காதலி (அனுபமா பரமேஸ்வரன்) பிரேக் அப் செய்து வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார்.
அந்த காதலியால் ஏற்பட்ட அவமானத்தை போக்கி வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டுமென குறுக்கு வழியை தேர்ந்தெடுத்து போலியாக டிகிரி ஒன்றை வாங்கி பெரிய நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து கை நிறைய சம்பாதிக்கிறார். இதனையடுத்து அவருக்கு பெரிய தொழிலதிபரின் (கே.எஸ்.ரவிக்குமார்) மகளை (கயாடு லோஹர்) திருமணம் செய்வதற்கான வரன் தேடி வருகிறது. வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருக்கும் வேளையில் திடீரென சிக்கல் ஒன்று முளைக்கிறது. அதாவது ஹீரோவை அரியர்களுடன் காலேஜை விட்டு துரத்திய பிரின்ஸ்பாலை எதிர் கொள்ள் நேருகிறது? அதை அடுத்து என்ன என்பதை புதுமையாகச் சொல்லி முடித்திருப்பதே டிராகன் படக் கதை.
48 அரியர் வைத்து தெனாவெட்டாக உலா வரும் காலேஜ் ஸ்டூடண்டாக பர்பெக்டாக பொருந்தி போகிறார் பிரதீப் ரங்கநாதன். இவரின் ரகளைகளை ரசிக்கும் அனுபமா அவர் மீது காதல் கொண்டு சுற்றினாலும் எப்படியும் இந்த காதல் ஒர்க்கவுட் ஆகாது என்று முதலிலேயே தெரிந்து விடுகிறது. டூப்ளிகேட் சர்டிபிகேட் கொடுத்து அமெரிக்க கம்பெனியில் சேர்ந்து விக்ரமன் பட பாணியில் ஒரே பாடலில் பணக்காரன் ஆவது போல் பெரும் பணக்காரர் ஆகி விடுவதெலலம் ஓவர்தான் என்றாலும் சகல சந்தோஷத்தையும், வருத்தத்தையும் துள்ளிக் குதித்து,கூச்சலிட்டு வெளிப்படுத்தும் பிரதீப்பின் வித்தியாசமான மேனரிசம் இளசுகளை கவர்வவதோடு, அவரிடம் இருந்த தனுஷின் பாதிப்பை மழுங்கடித்து விடுவதில் ஜெயித்து விடுகிறார்.
நாயகி அனுபமா பரமேஸ்வரன், அள்ள அள்ள குறையாத இளமையோடு வலம் வருகிறார். விரட்டி விரட்டி காதலித்தவன் வீணாப்போனப் பிறகு, என்னை எவ்வளவு வேண்டுமானாலும் அடி, ஆனால் விட்டுவிடு..,என்று கேட்கும் கட்சியில் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்.மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் காயடு லோஹர், கவர்ச்சி மற்றும் நடிப்பி இரண்டையும் அளவாக வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்கிறார்.
பிரின்ஸிபாலாக நடித்திருக்கும் மிஷ்கின் தனிக் கவனம் பெறுகிறார். கெளதம் மேனன், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், பி.எல்.தேனப்பன், மரியம் ஜார்ஜ், இந்துமதி என அனைவரும் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி டிராகனை மெருக்கேற்றி இருக்கிறார்கள்.விஜே சித்து, ஹர்ஷத் கான் போர்ஷங்கள் ரசிக்க வைக்கின்றன. நாயகியின் அப்பாவாக வரும் ஜார்ஜ் மரியான் வழக்கம்போல தனது கச்சிதமான நடிப்பை தந்திருக்கிறார்.
மியூசிக் டைரக்டர் லியோன் ஜேம்ஸ்இது பக்கா எண்டெயின்மெண்ட் படம் என்றாலும் மிதமான பின்னணி இசையையும், பாடல்களையும் கொடுத்து படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார் . கேமராமேன் நிகேத் பொம்மியின் லென்ஸ் வழியே ஒவ்வொரு காட்சிகளும் கலர்ஃபுல்லாக லவ்லியாக ஆகியிருக்கின்றன.
ஹீரோ ஸ்மோக் பண்ணுவது, நாயகி சரக்கடிப்பது, டயலாக்குகளில் எல்லை மீறல், ஒரே பாட்டில் ஓஹோ ஆவது என்பது உள்பட சில குறைகள் இருந்தாலும் பக்காவான கமர்சியல் மூவி லிஸ்டில் சேர்ந்து விட்டதென்னவோ நிஜம்,
மார்க் 3.5/5