For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

மருது சகோதரர்களுடைய நினைவு நாள் இன்று.

09:56 AM Oct 24, 2023 IST | admin
மருது சகோதரர்களுடைய நினைவு நாள் இன்று
Advertisement

நாட்டை காலனியாக வைத்திருந்து ஆதிக்கம் செலுத்திய வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இவர்கள் நடத்திய போராட்டம், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்கள் பங்களிப்புகளாக, தமிழகம் நினைவுபடுத்தி பார்க்க வேண்டியது அவசியம். 1748 ஆம் ஆண்டில் டிசம்பர் 15ஆம் தேதி உடையார்சேர்வை என்ற மூக்கையா பழனியப்பனுக்கும், ஆனந்தாயி என்ற பொன்னாத்தாளுக்கும் மகனாக இன்றைய விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டைக்கு அருகே உள்ள நரிக்குடியில் பெரிய மருது பிறந்தார். 5 ஆண்டுகள் கழித்து 1753-ல் சின்ன மருது பிறந்தார்.

Advertisement

சிவகங்கையில் விஜயரகுநாத சேதுபதி அரசராக இருந்தபோது, தகுதிவாய்ந்த இளவல்களை தேடியபோது, மருது சகோதரர்களை அனுப்பி வைத்தார்கள். 1761 ஆம் ஆண்டில் அவர்களை முத்து வடுகநாதரும், வேலு நாச்சியாரும் சிவகங்கை அழைத்து வந்தனர். வேட்டையாட சென்ற மன்னருக்கு உதவி செய்ய சென்ற மருது சகோதரர்கள், வேங்கையை எதிர்கொண்டு வீழ்த்தினார்கள்.

Advertisement

அரசி வேலு நாச்சியாருக்கு போர் பயிற்சியை கற்றுக் கொடுத்தவர் சின்ன மருது . ஆங்கிலேய படையுடன் புதுக்கோட்டை தொண்டைமான் படை உதவி செய்து ராமநாதபுரத்தை முற்றுகையிட்டது. அதன் பிறகு சிவகங்கை சீமையை கைப்பற்ற நவாப் சூழ்ச்சி செய்தான். முத்து வடுகநாதர் போரில் மரணமடைந்த நிலையில் வேலு நாச்சியாரை காப்பாற்ற மருது சகோதரர்கள் படை திரட்டுகிறார்கள். திண்டுக்கல் அருகே உள்ள விருப்பாட்சியில், ஹைதர் அலியை சந்திக்கிறார்கள். அவரது பாதுகாப்பில் வேலு நாச்சியாரை தங்கவைக்கிறார்கள். 1772 முதல் 1780 வரை தலைமறைவு வாழ்க்கை நடத்தி, மருது சகோதரர்கள் படை திரட்டுகிறார்கள்.
ஆற்காடு நவாப்பிற்கும், ஆங்கிலேயர்களுக்கும் எதிராக படை திரட்டும் மருது சகோதரர்கள் கட்டபொம்மன் தலைமையில், இணைப்பை ஏற்படுத்துகிறார்கள். ஹைதர் அலியின் உதவி அவர்களுக்கு கிடைக்கிறது.

ஊமத்துரையும், சின்ன மருதுவும் நெருக்கமான நண்பர்களாகிறார்கள். சிவகங்கை காட்டுப் பகுதி கிராமங்களில், அடிப்படை மக்களுடன் இரண்டறக் கலந்து வாழத் தெரிந்த மருது சகோதரர்கள், சுதந்திரப் படையைத் திரட்ட முடிகிறது. 1772 க்குப் பிறகு காட்டில் மறைந்து வாழ்ந்த மருது சகோதரர்கள் தமது கிளர்ச்சியை 1779ல் தொடங்கி ஆற்காடு நவாப், தொண்டைமான் மற்றும் கும்பினியர்களின் படைகளை வெற்றி கொண்டு 1780ல் சிவகங்கைச் சீமையை மீட்டு வேலு நாச்சியாரை மீண்டும் அரியணையில் அமர்த்தினர்.

இந்தப் போரில் பெரிய மருது மணலூர் வாயிலிலும், தளபதி சந்தனம் சேர்வை பூவந்தி வாயிலிலும், வேலு நாச்சியார் மேலூர் வாயிலிலும் முகாமிட்டு போரிட்டனர். அரசியாரின் போர் வியூகத்தையும், வீரத்தையும் வெளிப்படுத்தியது. மேற்கில் திண்டுக்கல்லிருந்து தக்க சமயத்தில் வந்த ஹைதர் அலியின் படையும் வெற்றிக்கு உதவியது. வேலு நாச்சியார் மீண்டும் ஆட்சியில் அமர்ந்த விழாவிற்கு ஹைதர் அலி நேரில் வந்திருந்து வாழ்த்து கூறினார். மருது சகோதரர்களை அரச பிரதிநிதிகளாக வேலு நாச்சியார் அறிவித்தார். காளையார்கோவிலை சீரமைத்ததிலும், குன்றக்குடி முருகன் கோவில், ஆவுடையார் கோவில், செம்பொன் நாதர் கோவில், சிங்கம்புணரி சேவக பெருமாள் கோவில் ஆகியவற்றின் சீரமைப்புகள் மருது சகோதரர்கள் செய்த ஒப்பற்ற சேவைகள்.

குன்றக்குடியில் அரண்மனை ஒன்றை கட்டியுள்ளனர். மருது பாண்டியர் அவையில் புலவர் குழு ஒன்றை அமைத்து, தமிழ்ச்சங்கம் மூலம் தமிழ் வளர்த்ததாகவும் கூறப்படுகிறது. மயூரி கோவை என்ற கவிதை நூல் அரங்கேற்றினார்கள். மேலும் பல பணிகளை செய்தார்கள்.. பெரிய மருது பிறந்த நரிக்குடியில் தாய் பொன்னாத்தாளுக்கு சத்திரம் கட்டியது. இயல் இசை நாடக கலையை வளர்க்க பாடுபட்டது என்று. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கும் ,காளையார் கோவில் அருகே உள்ள சருகனிக்கும் தேர் செய்து கொடுத்திருக்கிறார்கள்.

கயத்தாரில் கட்டபொம்மன் ஆங்கிலேயரால் தூக்கிலிப்பட்டபிறகு , கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரைக்கு சின்ன மருது அடைக்கலம் தருகிறார். அதற்காகவே 1801 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள், சிவகங்கை மீது தாக்குதல்களை தொடுக்கின்றனர். முதலில் ஆங்கிலேயர்களிடமிருந்து போராடி 3 மாவட்டங்களை மருது சகோதரர்கள் மீட்கின்றனர். மருது பாண்டியர்களுடைய போர் திறமையை அடக்குவதற்காக, ஆங்கிலேயர்கள் இங்கிலாந்திலிருந்து அதிகமான படை பலத்தைப் பெற்று வந்தார்கள். காளையார் கோவிலில் ஆங்கிலேயர்களுடைய படை மருது பாண்டியர்களுடைய படையை சுற்றி வளைத்த நிலையில், மருது சகோதரர்கள் தப்பிவிட்டனர்.

போர் வீரர்களாக மட்டுமில்லாமல், நிர்வாகத் திறமையையும் மருது சகோதரர்கள் நிரூபித்திருக்கிறார்கள். 1753லிருந்து 1801 வரை மக்களுக்கான நல்வாழ்வு திட்டங்களை செயல்படுத்தியிருக்கிறார்கள். பல்வேறு ஊரணிகளையும், குளங்களையும் கட்டியிருக்கிறார்கள். இன்றும் கூட அவை ஆதாரமாக அங்கே இருக்கின்றன. மருது சகோதரர்கள் காலங்களில் சிவகங்கை வட்டாரம், பசுமையாக இருந்தது என்று கூறப்படுகிறது.

மருது சகோதரர்களும், அவர்களது குடும்ப உறுப்பினர்களும் சோழபுரத்தில் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு, 1801 ஆம் ஆண்டில் அக்டோபர் 24ஆம் தேதி தூக்கிலிடப்படுகிறார்கள். அவர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து நடத்திய போர் களங்களை, மனலூர் போர், திருப்புவனம் போர், முத்தனேந்தல் போர், காளையார் கோவில் போர், சிவகங்கை போர், மங்களலம் போர், மானாமதுரை போர், மானாமதுரை போர், திருப்பத்தூர் போர், பார்த்திபனூர் போர், காரான்மலை போர் என்று பட்டியல் போட்டு நினைவு கூறப்பட்டுள்ளது.

அக்டோபர் 24ஆம் தேதி தூக்கிலிடப்பட்ட மருது சகோதரர்கள், அவர்களது விருப்பப்படி காளையார் கோவில் கோபுரத்திற்கு எதிரே அடக்கம் செய்யப்பட்டனர்.

நாட்டிற்காக இன்னுயிர் ஈந்த மன்னர்கள் என்பதாக அவர்கள் வழங்கப்படுகிறார்கள். 2004 ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் நாள் மருது சகோதரர்களின் படம் கொண்ட அஞ்சல் தலை இந்திய அரசால் வெளியிடப்பட்டது. 1857 ஆம் ஆண்டைத்தான் வட இந்தியாவில், சிப்பாய் கலகம் நடந்ததையொட்டி, இந்திய முதல் சுதந்திரப் போர் என்பதாக பதிவு செய்யப்பட்டது. ஆனால், அதற்கு 56 ஆண்டுகளுக்கு முன்பே 1801 ஆம் ஆண்டில் ஜூன் மாதம் 10ஆம் தேதி திருச்சியிலுள்ள ஸ்ரீரங்கம் கோவிலில் நின்றுகொண்டு, ஆங்கிலேயர்களுடைய ஆட்சிக்கு எதிராக சுதந்திரப் பிரகடனத்தை, மருது பாண்டியர்கள் அறிவித்தார்கள் என்ற செய்தி குறிப்பிடத்தக்கது.

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Advertisement