தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

தமிழகத்தில் நடந்து முடிந்த 2024 மக்களவைத் தேர்தலில் 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளது!

06:43 AM Apr 20, 2024 IST | admin
Advertisement

மிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பார்லிமெண்ட் தேர்தல் வாக்குப்பதிவு நேற்றுறு காலை 7 மணிக்கு தொடங்கியது. 39 மக்களவைத் தொகுதிகளில் அமைக்கப்பட்ட 68,321 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், அரசியல் பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள், பொதுமக்கள் என அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருந்து , ஆர்வமுடன் வாக்களித்தனர். இந்நிலையில், மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. சில வாக்குச்சாவடி மையங்களில் 6 மணிக்குள் வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தத் தேர்தலில் 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது..!

Advertisement

நம் நாட்டின் 18-வது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக, தமிழகத்தின் 39 தொகுதிகள், புதுச்சேரி தொகுதி உட்பட நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகத்தில் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலும் நேற்று நடந்தது. இங்குள்ள 39 தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இத்தேர்தலில், 3.06 கோடி ஆண்கள், 3.17 கோடி பெண்கள், 8,467 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 6.23 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இதில் 10.52 லட்சம் பேர் முதல்முறை வாக்காளர்கள் ஆவர். வயது முதிர்ந்தவர்கள், மாற்றுத் திறனாளிகள் எளிதாக வந்துவாக்களிக்கும் வகையில், அனைத்துவாக்குச்சாவடிகளிலும் சாய்தளம், சக்கர நாற்காலிகள், அதை இயக்க தன்னார்வலர்கள் மட்டுமின்றி, நிழற்பந்தல், குடிநீர், கழிப்பறை, குழந்தைகள் பாதுகாப்பு மையம் உள்ளிட்டஅடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. பதிவு அடிப்படையில், மாற்றுத் திறனாளிகள், முதியவர்களுக்கு அரசு சார்பில் போக்குவரத்து வசதியும் செய்து தரப்பட்டது.

Advertisement

190 கம்பெனி துணை ராணுவத்தினர், காவல் துறையினர், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற காவல் துறையினர், வெளி மாநில காவல் துறையினர், ஊர்க்காவல் படையினர் என 1.30லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பதற்றமான 8,050 மற்றும் மிக பதற்றமான 181 வாக்குச்சாவடிகளில் இணைய கேமரா, துணை ராணுவப் படையினர், நுண் பார்வையாளர் தேவைக்கேற்ப பயன்படுத்தப்பட்டனர். இதுதவிர, 44,801 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தி, ‘வெப் ஸ்ட்ரீமிங்’ முறையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்த கட்டுப்பாட்டு அறையில் இருந்து அதிகாரிகள் நேரலையாக கண்காணித்தனர். தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவும் நேரில் சென்று கண்காணித்தார்.

39 மக்களவை, விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த 68,321 வாக்குச்சாவடிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. முன்னதாக, அதிகாலை 5.30 மணிக்கே வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில், அதிகபட்சம் 50 வாக்குகள் வரை பதிவு செய்யப்பட்டு ஒத்திகை நடத்தப்பட்டது. பின்னர் அந்த வாக்குகள் அழிக்கப்பட்டு, விவிபாட் இயந்திரத்தில் பதிவானவாக்குகள் எடுத்து சரிபார்க்கப்பட்டு, தனியாக உறைகளில் பத்திரப்படுத்தப்பட்டன. பின்னர், இயந்திரம், சீலிடப்பட்டு, வாக்குப்பதிவுக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டது.

சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒருசில இடங்கள் உட்பட தமிழகத்தில் சுமார் 20 வாக்குச்சாவடிகளில் இயந்திரங்கள் பழுது ஏற்பட்டு, அவை சரிசெய்யப்பட்டன. இதனால், அரை மணி நேரம் வரை தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. சென்னை லயோலா கல்லூரியில் 2 மணி நேரம் தாமதமாக தொடங்கியது. அனைத்து இடங்களிலும் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிந்தது.

நேற்று வெப்ப அலை வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், காலை 6.30 மணி முதலே பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஜனநாயக கடமையாற்றினர்.

மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடியும் நேரத்தில், வரிசையில் காத்திருந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, அவர்கள் அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால், சில வாக்குச்சாவடிகளில் இரவு 7.30 மணி வரை வாக்குப்பதிவு நீடித்தது.

வாக்குப்பதிவு முடிந்ததும், முகவர்கள் முன்னிலையில், பதிவான வாக்குகள், பதிவேட்டில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை சரிபார்க்கப்பட்டு, அதன்பின், மின்னணுஇயந்திரம் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாக பெட்டியில் வைக்கப்பட்டது. பின்னர், வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, பாதுகாப்பு அறையில் (‘ஸ்டிராங் ரூம்’) வைக்கப்பட்டன.இங்கு துணை ராணுவம், உள்ளூர் போலீஸார், ஆயுதப் படையினர் என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நேற்று இரவு 7 மணி நிலவரப்படி, தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் 72.09 சதவீதம், விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 64.54 சதவீதம் வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீதமும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 67.35 சதவீதமும் வாக்குகள் பதிவாகியிருந்தன. இறுதி நிலவரமாக 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது. அதிகப்படியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால், எவ்வித சட்டம் - ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படாமல், தமிழகத்தில் தேர்தல் சுமுகமாக, அமைதியாக நடந்ததாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று வாக்குப்பதிவு முடிந்த நிலையில், 7மணி வரையில் தொகுதிகள் வாரியாக பதிவான வாக்குகள் குறித்த விவரம் இதோ:

கள்ளக்குறிச்சி - 75.67%,

தர்மபுரி - 75.44%,

சிதம்பரம் - 74.87%,

பெரம்பலூர் - 74.46 %,

நாமக்கல் -74.29 %,

கரூர் - 74.05%,

அரக்கோணம் - 73.92%,

ஆரணி - 73.77%,

சேலம் - 73.55%,

விழுப்புரம் - 73.49%,

திருவண்ணாமலை - 73.35%,

வேலூர் - 73.04%,

காஞ்சிபுரம் - 72.99%,

கிருஷ்ணகிரி - 72.96 %,

கடலூர் - 72.40%,

விருதுநகர் - 72.29%,

பொள்ளாச்சி - 72.22%,

நாகப்பட்டினம் - 72.21%,

திருப்பூர் -72.02 %,

திருவள்ளூர் - 71.87%,

தேனி - 71.74%,

மயிலாடுதுறை - 71.45%,

ஈரோடு - 71.42%,

திண்டுக்கல் - 71.37%,

திருச்சி - 71.20%,

கோவை - 71.17%,

நீலகிரி - 71.07%,

தென்காசி - 71.06%,

சிவகங்கை -71.05%,

தூத்துக்குடி - 70.93%

ராமநாதபுரம் - 71.05%,

திருநெல்வேலி - 70.46%,

கன்னியாகுமரி - 70.15%

தஞ்சாவூர் - 69.82%,

ஸ்ரீபெரும்புதூர் - 69.79 %,

வடசென்னை - 69.26%,

மதுரை - 68.98 %,

தென்சென்னை - 67.82%,

மத்திய சென்னை -67.35 %,

Tags :
electionLokSabhaElections2024parliment electionPolling percentagetamilnadutnTN2024ElectionVote Percentage
Advertisement
Next Article