திருப்பம் தரும் திருப்பரங்குன்றமும், மதுரை எழுச்சியும்!
மதுரை மக்கள் தெளிவாக உள்ளார்கள். மதுரை மக்களுக்கு பாடமெடுக்க வேண்டிய அவசியமே இல்லை. கையில் அதிகாரத்தை வைத்துக்கொண்டு தேவையில்லாத விவகாரங்களை ஊதி ஊதிப் பெரிதாக்கிவிட்டு, கேட்டால் "பாஜக உள்ளே வந்துவிடும்" என்று சொல்லி தொடர்ந்து பூச்சாண்டி காட்டப்பட்டது. இன்று மதுரை மண்ணில் கலவரத்தை தூண்ட முயற்சி செய்து அவர்கள் தரப்பு கூட்டத்தை கூட்டியும் காண்பித்து உள்ளார்கள். இது அப்பட்டமான ஆளும் வர்க்கத்தின் சித்தாந்த தோல்வியின் வெளிப்பாடாகத் தான் பார்க்க வேண்டும். திராவிடம், பெரியார் என்று இவர்களின் "பேனர்" அரசியலை ஊடக லாபத்திற்கு பயன்படுத்தி வருகிறார்கள். பன்னெடுங்காலமாக இருக்கும் ஒரு நடைமுறையை திடீரென்று பிரச்சனைக்கு உள்ளான விவகாரமாக மாற்ற முடிவெடுத்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்று இருக்கிறது வலதுசாரி அரசியல்.
ஊடகங்களில் அமர்ந்து கொண்டு லாபி மூலம் பத்திரிகையாளர் அடைமொழியை போட்டுக்கொண்டு மக்களுக்கு அறிவுரை சொல்லும் அறிவிலிகளை என்னவென்று கேட்பது? எந்த அடிப்படை அறமும் இல்லாமல், வயதான ரிட்டயர்டு வலதுசாரிகள் கிடைத்தால் அவர்களை அடித்துவிட்டு "நானும் ரவுடிதான்" என்று காலரை தூக்கிவிட்டு சுற்றித் திரியும் தற்குறி கூட்டத்திடம் இதைத்தான் எதிர்பார்க்க முடியும். கடந்த மாதமே தமிழ்நாடு காவல்துறை அப்பகுதியில் எப்படி காவித் துறையாக செயல்பட்டு அங்கு இருக்கும் ஒரு இஸ்லாமிய குடும்பத்தை தர்காவுக்கு செல்லாமல் தடுத்து நிறுத்தி இந்த பிரச்சனையை பெரிதாக்கியது என்பதை "மக்கள் அதிகாரம்" உள்ளிட்ட பல அமைப்புகள் அம்பலப்படுத்தினார்கள். (வினவு தளத்தில் ஜனவரி 30 வெளிவந்த கட்டுரையை பார்க்கவும்) தொடர்ச்சியாக இன்னொரு "இந்து முன்னணியாகவே" அப்பகுதியின் காவல்துறை செயல்பட்டார்கள் என்ற விமர்சனத்தை அனைத்து முற்போக்கு சக்திகளும் முன்வைத்தார்கள். ஆனால், அந்தக் காவல்துறையில் இருக்கும் காவி கும்பலை களையெடுக்க வக்கற்று இருந்ததன் விளைவுதான் இன்று "இந்து சக்தியே ஒன்று கூடுங்கள்" என்று இவர்கள் கூட்டம் போடுவதற்கு அடிப்படையை அமைத்திருக்கிறது.
நாம் தமிழரை அடிக்க வேண்டும் ஏனென்றால் பாஜக உள்ளே வந்துவிடும்..நிர்வாக பிரச்சனைகளை பிறகு பார்க்கலாம்.. ஏனென்றால், பாஜக உள்ளே வந்துவிடும்..!எதிர்க்கட்சிகள் அப்படித்தான் அரசியல் செய்வார்கள்.. அதற்கு முக்கியத்துவம் கொடுத்தால் பாஜக உள்ளே வந்துவிடும் .,என்று தொடர்ச்சியாக இவர்கள் காட்டிய பாஜக பூச்சாண்டி பாஜகவை எப்படி குறிப்பிட்ட இடங்களில் வளர்த்திருக்கிறது என்பதற்கு இந்த கூட்டம் ஒரு சிறு உதாரணம் தான். இந்த நேரத்தில் தமிழ்த்தேசியம், தமிழ்க்கடவுள் என்று முன்னெடுக்கும் நாம் தமிழர் கட்சி போன்றோர் அதே இடத்தில் முருகனுக்கு படையலுக்காக நேர்த்திக்கடனை இஸ்லாமிய சகோதரர்களுடன் சேர்ந்து செலுத்தி அந்த இடத்தில் சமய நல்லிணக்க போக்கை நிலைநாட்ட செயல்பாடுகளில் இறங்க வேண்டும். தர்காவுக்கு இவர்களும் இதனை செய்ய வேண்டும்.
முருகன் தமிழ்க் கடவுள், நாங்கள் இந்துக்கள் இல்லை என்று உரத்த குரலில் பேசும் நாம் தமிழர் கட்சி வீரியமாக இந்த நேரத்தில் செயல்பட வேண்டும். சைவ மலையை அசுத்தம் செய்கிறார்கள் என்ற வலதுசாரி குரல் எவ்வளவு ஆபத்தானது என்பதை அம்பலப்படுத்தி "குறிஞ்சி நிலத் தலைவன் முருகன்" என்ற உண்மை வடிவத்தை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று இந்துத்துவ கும்பலை அப்புறப்படுத்தி ஏற்கனவே இருக்கும் அதே சகோதரத்துவ நிலைமையை மேலும் வலிமைப்படுத்தும் வேலையை செய்ய வேண்டும்.
இது தவறான உத்தியாக மாறும் என்ற எண்ணம் இருந்தால் வேங்கைவயலில் காட்டிய காவல்துறை கெடுபிடியை அங்கு காட்டியிருக்க வேண்டும். மாறாக, காவல்துறை அங்கு பாஜகவின் பிரிவாக செயல்பட்டு இருக்கிறது. அதைப் பற்றி கேள்வி கேட்கவும், திருத்தவும் சுய விமர்சனம் செய்யாமல் எதிரில் கம்பு சுற்றுவதும் அழிவுக்கு வழி வகுக்கும். சித்தாந்த எதிரியை வீழ்த்த என்னதான் செய்யப் போகிறார்கள் என்பதை மக்கள் பார்க்கத்தான் போகிறார்கள் !