பாஜக எனும் பூதம் வளரப் பார்க்கிறது என்பதை நிரூபித்த திருப்பரங்குன்றம்!
திருப்பரங்குன்றத்தில் இந்துத்வா சாதித்தா? என கேள்வி எழுப்பினால், ‘ஆம்’ என்பதை தவிர வேறு பதில் இல்லை. இதனால், தேர்தலில் பாஜக வெற்றி பெறவா போகிறது? என சால்ஜாப்பு கேள்வியை முன்வைத்தால், இதுபோன்ற பல சம்பவங்களின் தொகுப்பு, பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் உட்கார வைத்துவிடும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.ஆளும் தரப்பு மீது எழும் கடுமையான அதிருப்தியால், மாற்று கட்சியை மக்கள் தேடத் தொடங்கும் போது ‘குருக்க இந்த கவுசிக் வந்தா’ என பாஜக வருமானால், மக்கள் அதை ஏற்கத் தயங்கமாட்டார்கள். அதனால், இது பாஜகவுக்கு ஒருவகையில் வெற்றி தான் என்ற எதார்த்தத்தை மனம் முன்வந்து ஏற்கதான் வேண்டும்.
இங்கு இன்னொன்று சொல்ல கடமைப்பட்டுள்ளேன். ஆண்டாடு காலமாக இருக்கும் நடைமுறையை கேள்விக்கு உட்படுத்தி, இந்து - முஸ்லிம் பிரச்சனையை கிளப்பி பாஜக எனும் பூதம் வளரப் பார்க்கிறது என்ற எதார்த்தை மக்கள் புரிந்துகொள்ள திருப்பரங்குன்றம் விவகாரத்தை கவனிக்கலாம். வளருவதற்கே இப்படியான பிரிவினையை கையில் எடுக்குமானால், வளர்ந்த பிறகு தன்னை தக்கவைக்க பாஜக என்னவெல்லாம் செய்யும் என யோசிக்க வேண்டும். வட மாநிலங்களில் பாஜக செய்துகொண்டிருக்கும் அட்டூழியங்களை கொஞ்சம் கவனித்தால் போதும்.
இந்துத்வ சக்தி இப்படியாக மதநல்லிணக்கத்தை தின்று செமிக்கும் போது திராவிடர் கழகம் உள்ளிட்ட சமூக இயக்கங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறது என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. தனிப்பட்ட முறையில் அனைத்து திராவிடர் இயக்கங்களையும் கேள்வி கேட்கவில்லை. கீ.வீரமணி தலைமையிலான திராவிடர் கழகம் உண்மையில் எதற்கு இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. சமூக சீர்த்திருத்த நடவடிக்கைகளில் கொஞ்சம் கூட கவனம் செலுத்தாமல் இருக்கும் இந்த திராவிடர் கழகத்தை நம்பிக்கொண்டிருப்பது வீண் வேலை. தமிழ்நாடு இந்த அளவுக்கு முன்னேறி இருப்பதற்கு காரணமே பெரியாரும் அவரது திராவிடர் கழகமும் தான். ஆனால், அதே கழகம் இன்று தனக்கான அடையாளத்தை இழந்து பாதுகாத்துக்கொள்ளும் நோக்கில் மௌனம் விரதம் எடுத்துக்கொண்டு இருக்கிறது.
இந்த சூழலில் தான் பலரும் திருப்பரங்குன்றம் விவகாரத்தை முன்வைத்து திமுகவை சாடுகின்றனர்.அதற்கு திமுக பதில் சொல்லட்டும். நான் எனது கேள்வியை இயக்கங்கள் பக்கம் வைக்கிறேன்.ஆனால், ‘பாஜக உள்ளே வந்துரும்’ என்ற பிரச்சாரத்தை முன்வைக்கும் தகுதியை திமுக இழந்து வருகிறது. இதற்கு திமுகவுடன் பெரியாரிய இயக்கங்களும் பொறுப்பு ஏற்க வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது.நாம் தமிழரின் மறைமுக ஆதரவாளர்கள், பெரியாரிய ஆதரவாளர்களைப் பார்த்து, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கள்ள மௌனம் கடைப்பிடிப்பதாக குற்றம்சாட்டுகின்றனர். அப்படி எல்லாம் இல்லை. பெரும் இயக்கங்களை தவிர மற்ற அனைவரும் இதற்கு எதிரான பிரச்சாரத்தை செய்தே வருகின்றனர்.
ஆனால், உங்களிடம் நான் கேட்கும் கேள்வி, பெரியாரை சீமான் சீண்டும் போது நீங்கள் ஏன் கள்ள மௌனம் கடைப்பிடித்தீர்கள்? அப்போதே நீங்கள் மறைமுக ஆதரவாளர் இல்லை நேரடி ஆதரவாளர் என உங்கள் நெற்றியில் நருக் என பச்சைக்குத்திக்கொண்டீர்.திமுகவை நோக்கி கேள்வி எழுவதற்கு காரணமே பெரியாரிய இயக்கங்கள் தான். திமுகவுக்கு ஆதரவு தருகிறேன் என நிலைப்பாடு எடுத்து ஆதரவு என்பது முட்டுக்கொடுப்பதாக மாறி இப்போது திமுக முதுக்குக்கு பின்னால் ஒளிந்துகொண்டீர்கள்.
அதாவது அனைத்திலும் திமுகவை முன்னிலைப்படுத்தி இயக்கங்கள் பின்னடைவை சந்தித்துவிட்டன. இதன் காரணமாகவே, திமுக பல கேள்விகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. இதற்கு திமுகவும் காரணம் என்பதால், கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயமும் அவர்களுக்கு ஏற்படுகிறது. திமுக ஆட்சியில் இருக்கும் போது கூட சுதந்திரமாக செயல்படாத பெரியாரிய இயக்கங்கள், குறிப்பாக கீ.வீரமணி தலைமையிலான திராவிடர் கழகம் எப்போது செயல்பட போகிறது? எதையும் செய்யாத இயக்கம் ஏன் தேவை என்ற கேள்விக்கு பதில் கிடைக்குமா? உண்மையில் இது வெங்காயமாக மாறிவிட்டது. உரிக்க உரிக்க ஒன்றுமில்லை.