இந்தியாவில் சுத்தமான காற்று கிடைப்பதில் திருநெல்வேலி முதலிடம்!
இந்தியா உட்பட பல நாடுகளில் காற்று மாசுக்கேடு ஒரு நிலையான பிரச்னையாக உள்ளது. மனித உடல் நலம், உணவு, உற்பத்தி, சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களையும் பாதிக்கின்றன.கண் எரிச்சல், தலைவலி, தொண்டைக்கட்டு, காய்ச்சல், புற்றுநோய் போன்ற பல நோய்களைக் காற்று மாசுபாடு ஏற்படுத்துகிறது. தொழிற்சாலைகளும் வாகனங்களும் ஏற்படுத்தும் புகையினால் தாவரங்கள், நிலம், நீர், நினைவுச் சின்னங்கள் மற்றும் கட்டடங்கள் முதலியவை பாதிக்கப்படுகின்றன. தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கந்தகம் மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடு போன்ற வாயுக்களால் ஏற்படுகிற அமில மழை, மண்ணின் அமிலத் தன்மையை அதிகப்படுத்துவது மட்டுமன்றி, தாவரங்கள் இலைகளை உதிர்த்தல், குளம் மற்றும் ஆறுகளில் உள்ள நீர்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுதல் போன்ற பாதிப்புகளுக்கும் காரணமாகிறது.ஒவ்வோர் ஆண்டும், 8 மில்லியன் மக்கள் காற்று மாசுபாட்டால் இறந்துகொண்டிருக்கின்றனர், பில்லியன் கணக்கான மக்கள் மோசமான காற்றின் விளைவுகளால் தேவையில்லாமல் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இதற்குச் சரியான நேரத்தில் காற்றின் தரத் தகவல் கிடைப்பதில்லை என்பது மட்டுமன்றி, சில நேரங்களில் காற்று மாசுபாடு கவனிக்கப்படாமல் போய்விடுகிறது என்கிற குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது.
அந்த வகையில் நம் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் காற்றின் தரம் அதிகளவு மாசடைந்து கொண்டே செல்கிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பெரும் பனிமூட்டத்தால் இருள் சூழ்ந்து காணப்படும் டெல்லியில், காற்று மாசுபாடும் கவலைக்குரிய விஷமாக உள்ளது. வட மாநிலங்களில் பெரும்பாலான நகரங்கள் காற்று மாசுபாட்டில் கவலைக்குரிய தரக்குறியீட்டையே பெற்றுள்ளது.
அதே வேளையில், நாடு முழுவதும் உள்ள அதிகம் பாதித்த மற்றும் தரமுள்ள காற்றை கொண்டிருக்கும் நகரங்களின் பட்டியல் கடந்த வாரம் வெளியானது. அதில், தரமுள்ள காற்று இருக்கும் நகரமாக தமிழகத்தைச் சேர்ந்த நெல்லை விளங்குகிறது. பசுமையால் சூழப்பட்ட மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு அருகில் அமைந்திருக்கும் நகரத்தின் காற்றின் தரம் அதன் இயற்கை நிலப்பரப்பு மற்றும் குறைந்தபட்ச தொழில்துறை மாசுபாட்டிலிருந்து பயனடைகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நிலையான நடைமுறைகள் மற்றும் ஒப்பீட்டளவில் குறைந்த வாகன அடர்த்தி ஆகியவற்றில் பிராந்தியத்தின் கவனம் அதன் அழகிய வளிமண்டலத்திற்கு மேலும் பங்களிக்கிறது. அந்த வகையில் கடந்தா 2ம் இடத்தில் இருந்த நெல்லை தற்போது இந்த வருடம் முதலிடம் பிடித்துள்ளது.
0 – 50 குறைவான தாக்கம்; 51 – 100 நோய் எதிர்ப்புதிறன் குறைவாக உள்ளவர்களுக்கு மூச்சு விடுவதில் சற்று சிரமம் இருக்கும்; 101 – 200 ஆஸ்துமா, இதயநோய், நுரையீரல் தொடர்பான நோய் உள்ளவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும்
5வது இடத்தில் தஞ்சை உள்ளது.
டாப் 10 இடங்களாக நெல்லை (தமிழகம்), நஹர்லாகன் (அருணாசல பிரதேசம்), மடிக்கேரி (கர்நாடகா), விஜயபுரா (கர்நாடகா), தஞ்சை (தமிழகம்), கோப்பல் (கர்நாடகா), வாரணாசி (உத்தரபிரதேசம்), ஹூப்ளி (கர்நாடகா), கண்ணூர் (கேரளா),சால் (சத்தீஸ்கர்) ஆகிய நகரங்கள் உள்ளன.
அதேபோல, காற்று மாசுபாடு அதிகம் உள்ள நகரங்களின் பட்டியலில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. காஷியாபாத் (உத்தரபிரதேசம்), பைரனிஹாட் (மேகாலயா), சண்டிகர் (பஞ்சாப்), ஹபூர் (உத்தரபிரதேசம்), தனபாத்(ஜார்க்கண்ட்), பாடி (ஹிமாச்சல பிரதேசம்), கிரேட்டர் நொய்டா (உ.பி.,)குஞ்சேமுரா (மஹாராஷ்டிரா), நொய்டா (உ.பி.,) ஆகிய நகரங்கள் இடம்பிடித்துள்ளன.