For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

திருச்செந்தூர்: கந்த சஷ்டி விழா தொடங்கியது!

01:46 PM Nov 13, 2023 IST | admin
திருச்செந்தூர்  கந்த சஷ்டி விழா தொடங்கியது
Advertisement

திருச்செந்தூர் சுப்பிரமணியர் சுவாமி கோயில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் வீடாகப் போற்றப்படுகிறது. இங்கு கந்த சஷ்டி விழா இன்று காலை முதல் தொடங்கியது. இதனால் கோயில் திருநடை இன்று அதிகாலை ஒரு மணிக்கே திறக்கப்பட்டது. தொடர்ந்து யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி விழா தொடங்கியது.

Advertisement

முருகப்பெருமான் , சூரனை வதம் செய்த சூரசம்ஹார நிகழ்வு வரும் நவம்பர் 18ஆம் தேதி கந்தசஷ்டி திருவிழாவாக முருகனின் அறுபடை வீடுகளில் கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கோலாகலமாக கொண்டாடப்படும்.

Advertisement

சூரசம்ஹார நிகழ்வை முன்னிட்டு, அறுபடை வீடுகளில் 2ஆம் வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று (ஐப்பசி மாதம் 27ஆம் தேதி) முருகன், வள்ளி, தெய்வானை முன் யாகசாலை நடத்தப்பட்டு கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது.இன்று முதல் முருக பக்தர்கள் சஷ்டி விரதமிருக்க துவங்கி விட்டனர். 5 நாள் விரதம் இருக்கும் பகதர்கள் சூரசம்ஹார நிகழ்வு முடிந்த பிறகு தங்கள் விரதத்தை கலைப்பர். இந்த 5 நாளும் வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் தங்கி இருப்பர்.

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் தற்போது கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால், கோவில் வளாகம் வெளியே பகதர்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்வான சுவாமி சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி வரும் 18ம் தேதி திருச்செந்தூர் கடற்கரையில் நடக்கிறது. வழக்கமாகவே சூரசம்ஹாரத்திற்கு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவது வழக்கம். அதிலும் நிகழாண்டில் சூரசம்ஹாரம் சனிக்கிழமை வருகிறது. அதனால் கூடுதல் பக்தர்கள் வருவதற்கு வசதியாக பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருச்செந்தூருக்கு சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

தொடர்ந்து 19ம் தேதி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி திருக்கல்யாணம் நடக்கிறது. அதோடு கந்த சஷ்டி விழா நிறைவடைகிறது.

பொதுவாக குழந்தை வரம் வேண்டுபவர்களே சஷ்டி விரதம் இருப்பார்கள் என்று சொல்வார்கள். ஆனால் வாழ்வில் வளம் பெற மேன்மை அடைய, என்றும் வெற்றி பெற, நல்ல தமிழ் பெற சஷ்டி விரதம், இருந்து வழிபட்டால் முருகப் பெருமானின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது பலரும் அனுபவ ரீதியாக கண்ட உண்மை.

கந்த சஷ்டி விரத முறைகள் என்று பல கடைபிடிக்க்கப்படுகிறது. சிலர் ஆறு நாட்களும் வெறும் நீர் மட்டுமே அருந்தி சூரசம்ஹாரம் முடிந்த உடன் கோயிலில் கொடுக்கும் பிரசாதத்தை உண்டு விரதத்தை முடிப்பார்கள். சிலர் 6 நாட்களும் பால், பழம் பானக்கம் மட்டுமே அருந்தி விரதம் மேற்கொள்வார்கள். சிலர் ஒரு பொழுது மட்டும் குறிப்பாக இரவு சாப்பிட்டு விரதம் மேற்கொள்வது வழக்கம். சிலர் 6-வது நாள் பெரிய சஷ்டி சூரசம்ஹாரம் அன்று மட்டும் எதையும் சாப்பிடாமல் இருந்து மறு திருக்கல்யாணம் பார்த்து விரதம் முடிப்பார்கள். சிலர் மதியம் மட்டும் பச்சை அரிசி தயிர் சாதம் சாப்பிட்டு ஆறு நாளும் விரதம் இருப்பார்கள்.

விரதம் என்பது அவரவர் நம்பிக்கை மற்றும் உடல் நலம் பொறுத்து மட்டுமே கடைபிடிக்க வேண்டும். ஆறு நாளும் உங்கள் நிலைக்கு ஏற்ப உணவு உண்டோ, இல்லை உணவின்றியோ முத்துக்குமரன் நாமத்தை உங்கள் அன்றாட பணி உடன் தொடர்ந்து சிந்தித்து வந்தாலே அதுவே ஆகச் சிறந்த கந்தர் சஷ்டி விரதம் ஆகும். ஆறு நாளும் உண்ணா நோன்புடன் விரதம் என்பது மேற்கொள்ள மன வலிமை மற்றும் உறுதி வேண்டும். உடல் நலமும் அவசியம்.

ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கொடுத்து, உடலைப் புதுப்பிப்பதே விரதத்தின் மற்றும் ஓரு நோக்கமாகும். விரதம் இருக்கும் நாட்களில் உடலியக்கம் சீராவதாகவும், ரத்த ஓட்டம் சீராவதாகவும், கெட்ட கொழுப்புக்கள் குறைவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நீரழிவு என்கிற சர்க்கரை நோய், உயர் மற்றும் குறை இரத்த அழுத்தம், நீண்ட நாள் மருத்துவ சிகிச்சை மற்றும் உயர் அறுவை சிகிச்சை உள்ளவர்கள் சஷ்டியை வெறும் பாராயணம் மற்றும் இருக்கும் இடத்தில் இருந்து தியானம் மூலம் மேற்கொள்வது போதுமானது.

விரதம் மூலம் நோய் எதிர்ப்பு கூடுகிறது. உடலில் உள்ள செல்கள் புத்துயிர் பெறுவதனால், உங்களது நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. இது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
உடல் எடை குறைகிறது. மன நிலை மேன்மையடையும். ஞாபக திறன் அதிகரிக்கிறது, ஒரு முகச் சிந்தனைகளில் ஈடுபட வைக்கிறது.

ஆனால் இந்த கந்த சஷ்டியின் அடிப்படை நோக்கம் ஆறு நாட்கள் ஒற்றைக் குவியச் சிந்தனை என்கிற இறை உணர்வே ஆகும். உணவு துறப்பு அவரவர் பணி மற்றும் உடல் மற்றும் மன வலிமையைப் பொறுத்தது.

நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இருதாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.

முடிந்தவர் உங்களால் இயன்ற வகையில் சஷ்டி விரதம் இருங்கள்.
இருந்து பாருங்கள் முருகன் அருள்வான்

Tags :
Advertisement