தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

கொளுத்தும் கோடை வெயிலை சமாளிக்க உதவும் டிப்ஸ்!

09:27 AM May 06, 2024 IST | admin
Advertisement

ருவகால மாற்றம் மற்றும் வெப்பமயமாதலால் இன்றைக்கு பல்வேறு விதமான நோய்கள் ஏற்படுகின்றன. எனவே, கோடைகாலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் மட்டுமல்ல, அத்தியாவசியமானதுமாகும். வெப்பம் அதிகரிக்கும் போது நீரின் தேவை அதிகரிக்கும். ஆனால், நம்மில் பெரும்பாலானோர் வழக்கம் போலவே நீர் அருந்துவோம். அதே போலத் தான் திட உணவுகளையும் சாப்பிடுவோம். உடலும், குடலும் எச்சரிக்கை மணி அடித்தும்கூட நாம் கண்டும் காணாமல் இருப்போம். எனவே, கோடை துவங்கியதும் நீர்ச்சத்துள்ள காய்கறிகளை அதிகமாக உண்ண வேண்டும். வெள்ளரிப் பிஞ்சு, வெள்ளரிக்காய், வெள்ளரிப்பழம், முலாம்பழம், பனைநுங்கு, பதநீர், இளநீர், தர்பூசணி மட்டுமன்றி பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கன்காய் போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

Advertisement

குறிப்பாக நீர் அருந்தும் விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வெறும் நீராக அருந்தாமல் மண்பானையில் ஊற்றி இயற்கையாக குளிர்விக்கப்பட்ட நீரை அருந்துவது நல்லது. மண்பானையில் ஊற்றிய நீருடன் வெட்டி வேரைப்போட்டு ஊறியதும் அந்த நீரை அருந்தலாம். நன்னாரி சர்பத் அருந்துவதும் மிகவும் நல்லது. நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் நன்னாரி வேரினை வாங்கி வந்து இரண்டு, மூன்று நன்னாரி வேர்த் துண்டுகளை நசுக்கிப் போட்டு நீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். சூடு நன்றாக ஆறியதும் அதனுடன் எலுமிச்சைச் சாறு, தேன், தேவைப்பட்டால் சர்க்கரை மற்றும் தேவையான அளவு நீர் சேர்த்து அருந்தலாம். நன்னாரி சர்பத் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல், சிறுநீர் கழிப்பதில் ஏற்படும் சிரமம், நீர்ச் சுருக்கு போன்ற பிரச்சினைகள் வராமல் பார்த்துக்கொள்ளும்.

தினமும் நன்னாரி சர்பத் அருந்துவதைவிட மோர் அருந்துவது நல்லது. குறிப்பாக, மோர் உடல் சூடாகாமல் பார்த்துக் கொள்ளும். வெறும் மோராக இல்லாமல் அதனுடன் கொஞ்சம் மல்லித்தழை, கறிவேப்பிலை, சிறிது இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்துச் சாப்பிட சுவையாகவும் இருக்கும், செரிமான சக்தியையும் கொடுக்கும். மதிய உணவில் தயிர் சேர்ப்பதற்குப் பதிலாக மோர் சேர்த்துக்கொள்ளலாம். கோடை காலங்களில் கோவில் திருவிழாக்களின்போது நீர் மோர் வழங்குவார்கள். அதேபோல் நற்பணி மன்றங்கள், தொண்டு நிறுவனங்கள் சார்பில் சாலையோரங்களில் பந்தல் அமைத்து நீர் மோர் ஊற்றுவார்கள். தாகம் தணிக்கும் இந்தச் செயலை புண்ணியமாகக் கருதுவார்கள்.

Advertisement

நன்னாரி சர்பத், நீர் மோர் தவிர பானகம் அருந்துவதும்கூட நல்லது. விலை குறைவானது மட்டுமல்ல, எல்லோரும் அருந்தக்கூடிய பானகம் அல்லது பானகரத்தை நாமே தயாரிக்கலாம். புளியை நீரில் ஊற வைத்து நன்றாகக் கரைத்து கருப்பட்டி சேர்த்து தயாரிக்கப்படுவதே பானகம். வயிற்றில் குளிர்ச்சியை ஏற்படுத்தி வெப்பத்தைக் குறைக்கும் இந்த பானகத்துக்கு ஈடு இணை ஏதுமில்லை. இன்றைக்கும் தென்தமிழகத்தில் பலரது வீடுகளில் பானகரம் எனப்படும் இந்த பானகத்தை தயாரித்து அருந்துகிறார்கள். காலப்போக்கில் இந்த பானகம் ஏழைகளின் உணவாக பார்க்கப்பட்டதால் அதை அருந்துவது குறைந்துவிட்டது.

நம் அனைவரின் வீட்டிலும் எளிய முறையில் கிடைப்பது சுக்கு. சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை - சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை என்பர். நாம் செய்ய வேண்டியது சுக்குடன் தேவையான அளவு நீர் சேர்த்து கொதிக்க வைத்து, வடிகட்டி, அதனுடன் சிறிதளவு பனைவெல்லம் சேர்த்து தேநீர் வடிவில் அருந்தலாம். அகத்தில் உள்ள அக்கினியை சீர்செய்யும் சீரகத்தை தேநீர் செய்து பருகலாம். இதன்மூலம் உடலின் உஷ்ணம் குறைவதோடு, வயிறுமந்தம் நீங்கி, உடல் பலப்படுத்துகிறது.

புதினா, கொத்துமல்லி போன்றவற்றையும் தனித்தனியே முறையாக தேநீர் செய்து பருகினால், உடல் வெப்பம் தணிவதோடு சிறந்த நோய்த்தடுப்பு காரணியாகவும் செயல்படும். கோடைகாலத்தில் உண்டாகும் மந்தத்தை போக்கி பசியை தூண்டும்.

பன்னீர் ரோஜா, செம்பருத்தி இதழ்: சர்பத் வடிவில் பருக நினைபவர்கள், பன்னீர் ரோஜா இதழ் 100 கிராமினை, பாத்திரத்திலிட்டு 250 மிலி நீர் சேர்த்து கொதிக்கவைத்து வடிகட்டி அதில் சிறிதளவு எலுமிச்சை பழச்சாறு, பனைவெல்லம், சப்ஜா விதை சேர்த்து பருகினால், உடலின் நீரிழப்பை தடுப்பதோடு, செரிமானத்தை சீர்செய்து, அடிவயிற்றில் ஏற்படும் வலியையும், பிடிப்பையும் குறைக்கும். நன்னாரி, வெட்டிவேர், செம்பருத்தி இதழ் முதலியவற்றையும் தனித்தனியே சர்பத் செய்து அருந்தலாம். இயற்கை தந்த கொடைகளில் இளநீரும், கற்றாழையும் கோடைக்கால பாதிப்பான உடல் உஷ்ணம், வாய்ப்புண், வயிற்றுப்புண் ஆகியவற்றை போக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது. இவற்றில் விட்டமின்களும், தாது உப்புக்களும் உடலுக்கு தேவையான அளவில் இருப்பதால் உடலின் நீரிழப்பை தடுப்பதோடு, மனதுக்கு உற்சாகத்தை தருகிறது.

இளநீர், நுங்கு, கற்றாழை: கோடையின் வெப்பத்தை தாங்கி நிற்கும் பனையிலிருந்து கிடைக்கும் நுங்குடன், பொடாசியம் சத்து நிறைந்த இளநீரை சேர்த்து பருக உடலின் சூடு தணிந்து, உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும். கற்றாழையின் மேற்தோலை நீக்கி, உள்ளிருக்கும் சோற்றுப் பகுதியை குழகுழப்பு நீங்கும் வரை சுத்தமான நீரில் அலசிய பின் அரைத்து சிறிதளவு எலுமிச்சை பழச்சாறு, தேன், தேவையான அளவு நீர் சேர்த்து அருந்தலாம்.

முதுமையை தடுத்து என்றும் இளமையோடு இருக்கச் செய்யும், அதியமானுக்கு அவ்வை கொடுத்த அமிர்தத்துக்கு ஒப்பான நெல்லிக்கனியின் விதையினை நீக்கி சிறிது நீர் சேர்த்து விழுதாக அரைத்து, அதனுடன் தேவையான அளவு தேன், உப்பு, நீர் சேர்த்து அருந்தினால், உடலின் அடிப்படை தத்துவமான உயிர் தாதுக்களை (வாதம், பித்தம், கபம்) சமநிலையில் வைத்திருப்பதோடு கோடைகாலத்தில் உடலில் மிகுதியாகும் வெப்பத்தை தன்னிலைப்படுத்தி புத்துணர்ச்சி தரும்.

ஊறல் நீர்: வெப்ப காலத்தில் வீசும் அதிகப்படியான வெப்ப அலைகளின் தாக்கத்தில் இருந்து நம்மை பாதுகாக்க, மண்பானையில் நீருடன் வெட்டிவேர் சேர்த்து ஊறல் நீராக அருந்தலாம். இதேபோன்று நெல்லிக்கனி, தேற்றான்விதை, சீரகம் இவற்றையும் தனித்தனியே ஊறல்நீர் செய்து அருந்தலாம். கோடைகாலத்தில் பூக்கும் தன்மை உடைய வேம்பின் மலர்களை நீர்விட்டு ஊறவைத்து ஊறல்நீராக பருக உடலின் சூட்டை தணிப்பதோடு, தாகத்தை தணித்து நாவறட்சியை போக்கும். வேப்பங்கொழுந்துடன் சிறிது மஞ்சள் சேர்த்தரைத்து உண்ணும்போது, கோடைகாலத்தில் பரவும் அம்மை போன்ற வைரஸ் தொற்று நோய்கள் வராமல் நம்மை பாதுகாப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யலாம்.

வெந்தய நீர்: இரவு வெந்தயத்தை நீரில் ஊறவைத்து, அதிகாலை வெந்தயம் ஊறிய நீருடன் வெந்தயத்தையும் சேர்த்து வெறும் வயிற்றில் அருந்தலாம். பதிமுகம் மற்றும் செம்மரம் இவற்றின் பட்டைகளை நீரிலிட்டு கொதிக்க வைத்து, இளஞ்சிவப்பு நிறமானதும் வடிகட்டி ஆறவைத்து அருந்தினால், கிருமிகளால் உண்டாகக் கூடிய சிறுநீர் உபாதைகளை தடுக்கலாம். தேவையற்ற கழிவுகளை வெளியேற்றி, உடலுக்கு பொலிவை தரும். அதேபோல், பானகம், பழையசோறு, கஞ்சிகள், கூழ், கீரைகள், பழங்கள், நீர்மோர், காய்கறிகள் ஆகிய நீர் பானங்கள் மற்றும் உணவுகளை கடைபிடித்து சுட்டெரிக்கும் வெயிலினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

டாக்ட செந்தில் வசந்த்

Tags :
beat the heatfruitsHeat wavejuice
Advertisement
Next Article