குற்றால அருவிகளில் குளிப்பதற்கு நேரக் கட்டுப்பாடுகள்!- கலெக்டர் தகவல்!
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் : கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்ததை தொடர்ந்து, குற்றாலம் உள்ளிட்ட பல்வேறு அருவிகளில் தண்ணீர் கொட்டிய நிலையில், அதில் பொதுமக்கள் குளித்து மகிழ்ச்சி அடைந்து வந்தனர். இந்த நிலையில், திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மேலும், 17 வயது சிறுவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தது தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது.. இதை அடுத்து பிரதான அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டது. அந்தத் தடை 7-வது நாளாக வியாழக்கிழமையும் நீடித்தது.
இந்நிலையில், குற்றால அருவிகளில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், மாவட்ட வன அலுவலர் முருகன் உள்ளிட்டோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர். குற்றாலம் பிரதான அருவியில் ஆய்வு பணிகளை மேற்கொண்ட நிலையில் வெள்ளத்தின் போது அபாய ஒலிகளை முன்கூட்டியே ஒலிக்கச் செய்வது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், பேரூராட்சி சார்பில் கட்டப்பட்டு வரும் பெண்கள் உடை மாற்றும் அறை, தரைத்தளம் அமைக்கும் பணிகளையும் பார்வையிட்ட ஆட்சியர் அந்தப் பணிகளை விரைவாக முடித்திட உத்தரவிட்டார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் “அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அருவிகளில் குளிக்க அனுமதிப்பது தொடர்பாக பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து அருவிகளிலும் காவல் துறையினர் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அருவியின் மேல் பகுதியில் வெள்ளப்பெருக்கைக் கண்காணிக்க வனத்துறை அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
குற்றாலம் பிரதான அருவியில் பெண்கள் உடை மாற்றும் அறை கட்டும் பணி, தரைத்தளம் அமைக்கும் பணி உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரதான அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு ஓரிரு நாட்களில் அனுமதிக்கப்படும். பழைய குற்றால அருவியில் வெள்ளத்தின் போது சுற்றுலா பயணிகளை அடித்துச் செல்லாதவாறு பாதுகாப்பு கம்பிகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், பழைய குற்றால அருவியைப் பொருத்தவரை சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை மட்டுமே குளிக்க அனுமதிக்கப்படும். மேலும், வெள்ளத்தை முன்கூட்டியே கணிக்க கூடிய early warning system குறித்த ஆய்வுகள் நடைபெற்று அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விபத்துக்கள் ஏற்பட்டால் உடனடியாக முதல் உதவி செய்யும் வகையில் அனைத்து அருவிகளிலும் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது”, என்றார்.