தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

இதுதாங்க உலக வல்லரசுகளின் பரப்புரை தந்திரம்!

09:09 PM Oct 03, 2024 IST | admin
Advertisement

ருபதாம் நூற்றாண்டிலும். 21ஆம் நூற்றாண்டிலும் சரி, உலக மக்களுக்கு, ‘எது தெரிய வேண்டும்? எது தெரியக் கூடாது?’ என்பதையெல்லாம் வல்லரசு நாடுகளே முடிவு செய்கின்றன. வல்லரசு நாடுகளின் விருப்பத்தின்படி, அவர்களது பவர்புல்லான பரப்புரை, ‘வெட்டிங், கட்டிங், ஒட்டிங்’ வேலைகளுக்குப் பிறகே, பல நிகழ்வுகள் மக்களின் பார்வைக்கு வைக்கப்படுகின்றன. ‘தெரியக் கூடாத விடயங்கள்’ திரைமறைவில் ஒதுக்கப்படுகின்றன.

Advertisement

எடுத்துக்காட்டாக ஒரு நிகழ்வைப் பார்ப்போம்.

1936ஆம் ஆண்டு ஜெர்மனியின் தலைநகரமான பெர்லின் நகரில் ஓர் ஒலிம்பிக் போட்டி நடந்தது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ‘அந்த ஒலிம்பிக்கை சர்வாதிகாரி ஹிட்லர், ஆரிய இனத்தின் பெருமையை, நாஜி கட்சியின் சிறப்பை வெளிக்காட்டும் பரப்புரை நிகழ்ச்சியாக பயன்படுத்தினார்’ என்றும் படித்திருப்பீர்கள். ‘ஆரியர்களே உயர்ந்த இனம்’ என்ற ஹிட்லரின் கோட்பாட்டை அந்த ஒலிம்பிக்கில் ஜெஸ்சி ஓவன், என்ற அமெரிக்க கருப்பின தடகள வீரர் முறியடித்தார் என்றும் கேள்விப்பட்டிருப்பீர்கள்.ஜெஸ்சி ஓவன் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் தொடரோட்டம், நீளம் தாண்டுதல் ஆகிய நான்கு போட்டிகளில் நான்கு தங்கங்களை வென்று, ஹிட்லர் உள்பட அனைத்து ஜெர்மானியர்களையும் அப்போது வாய் பிளக்க வைத்தார். ஜெஸ்சி ஓவன் ஒரே நாளில் 4 தங்கப் பதக்கம் வென்றதுடன் 2 ஒலிம்பிக் சாதனைகள், கூடவே ஓர் உலக சாதனையையும் நிகழ்த்திக் காட்டினார் என்பதெல்லாம் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

Advertisement

அப்போது  பெர்லின் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீரர்களுடன் கைகுலுக்கிய ஹிட்லர், ஜெஸ்சி ஓவனுடன் கைகுலுக்கவில்லை. ஜெஸ்சி ஓவன் 2ஆவது தங்கப் பதக்கத்தை வென்றதும் ஹிட்லர், ஏமாற்றத்துடன் ஒலிம்பிக் அரங்கத்தை விட்டு புறப்பட்டு விட்டார். ‘மழை வருவதுபோல இருக்கிறது, ஹெர் ஹிட்லருக்கு நிறைய வேலை இருக்கிறது’ என்று ஜெர்மன் அரசுத்தரப்பு இதற்கு விளக்கம் வேறு அளித்தது.இப்படித்தான் வரலாற்றில் இதுவரை நாம் படித்திருப்போம்.

இதெல்லாம் மக்களின் நடுவே புழக்கத்துக்கு விடப்பட்ட, பவர்புல்லாக பரப்புரை செய்யப்பட்ட தகவல்கள்.

சரி. இதைத்தாண்டி, இதற்கு பின்னர் நடந்த, மக்களின் கவனத்துக்கு வராத தகவல்கள் என்னென்ன?அதைப்பற்றியும் இப்போது பார்க்கலாம்.அமெரிக்க கருப்பின வீரர் ஜெஸ்சி ஓவன் பெற்ற ஒலிம்பிக் வெற்றி, உண்மையில் ஆரிய பெருமை வடிவில் ஜெர்மனியில் ஏற்பட்ட தடைகளைத் தாண்டி அவர் பெற்ற வெற்றிதான். ஆனால், அதேவேளையில், சொந்த நாடான அமெரிக்காவில், கறுப்பின மக்கள் மீதிருந்த இனவெறி, கருப்பின மக்களுக்கு இருந்த தடைகளையும் மீறி, ஓவன் பெற்ற மகத்தான வெற்றி அது!ஆனால் அந்த காலத்தில் இது பேசு பொருளாகவில்லை. மறைக்கப்பட்டு விட்டது.

ஹிட்லர், ஜெஸ்சி ஓவனை மதிக்கவில்லை என்று அந்த காலத்தில் பலமான பரப்புரை செய்யப்பட்டது. சரி. அப்போதிருந்த அமெரிக்க அதிபர் ஃபிராங்ளின் ரூஸ்வெல்ட், ஜெஸ்சி ஓவனை மதித்தாரா என்றால், ம்ஹூம்.ஜெஸ்சி ஓவனின் சாதனையை மெச்சி அமெரிக்க அதிபர் அறிக்கை எதையும் வெளியிடவில்லை. அதிபரின் அதிகாரபூர்வ குடியிருப்பான வெள்ளை மாளிகைக்கு ஜெஸ்சி ஓவன் அழைக்கப்படவில்லை. ஓவனுடன், ஃபிராங்ளின் ரூஸ்வெல்ட் கைகுலுக்கவில்லை. விருந்து, பாராட்டுக்கடிதம் எதையுமே தரவில்லை.

ஆக, ஜெஸ்சி ஓவனுக்கு எதிராக ஹிட்லர் நடந்து கொண்ட விதம்தான் இன்றளவும் உலக வரலாற்றில் பேசப்படுகிறது, வறுத்துக் கொட்டப்படுகிறதே தவிர, அமெரிக்க அதிபர் ஃபிராங்ளின் ரூஸ்வெல்ட், ஜெஸ்சி ஓவனிடம் எப்படி நடந்து கொண்டார் என்பது பற்றி யாருக்கும் தெரியாது. அதை அப்படியே ஜமுக்காளத்துக்கு அடியில் போட்டு மூடிமறைத்து விட்டார்கள்.

இதுதாங்க உலக வல்லரசுகளின் பரப்புரை தந்திரம்.அதாவது, உங்களுக்கு எது தெரிய வேண்டுமோ அது மட்டும் தெரிந்தால் போதும், ‘தேவையற்ற’ விடயங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாம் என்பதுதான் வல்லரசு நாடுகளின் ஊடக அறம், பரப்புரை திறம்.இஸ்ரேல்-ஈரான் போர் மூண்டுவிட்ட இந்த பரபரப்பான நேரத்தில் இதை ஏனோ எழுதத் தோன்றியது.

மோகன ரூபன்

Tags :
ஒலிம்பிக்ஜெஸ் ஓவன்ஹிட்லர்
Advertisement
Next Article