தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

மைசூர் தசரா வரலாறு இதுதான்!

06:54 PM Oct 09, 2024 IST | admin
Advertisement

ம் நாட்டில் நவராத்திரி திருவிழாவும் தசரா பண்டிகையும் இந்தியா முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டாலும் மைசூரில் கொண்டாடப்படுவதைப் போல வேறெங்கும் அவ்வளவு வண்ணமயமாக இருப்பதில்லை. இந்த விழா, நவராத்திரியின் முதல் நாளன்று துவங்கி, விஜயதசமி தினம் வரை நடைபெறுகிறது.கி.பி. 1610-ம் ஆண்டில் இருந்து மைசூருவை ஆண்ட உடையார் மன்னர்கள் போரில் வென்றதை நினைவுக்கூறும் வகையில் ஆண்டுதோறும் விஜயதசமி பண்டிகையின் போது 10 நாட்கள் தசரா விழாவை கொண்டாட தொடங்கினர். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, கர்நாடக அரசின் சார்பில் இந்த விழா ஆண்டுதோறும் அரசு திருவிழாவாக‌ பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது.414-வது ஆண்டாக மைசூரு தசரா விழா கடந்த 3-ம் தேதி மைசூருவில் கோலாகலமாக தொடங்கியது. வ‌ரும் அக்.12ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவை ஒட்டி மைசூருவில் உணவு திருவிழா, திரைப்பட திருவிழா, கிராமிய விழா, மலர்க் கண்காட்சி, பொருட்காட்சி, இசைக் கச்சேரி, இலக்கிய விழா, கன்னட கலை பண்பாட்டை பறைசாற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

கொஞ்சம் விரிவாகச் சொல்வதானால் விஜயநகரப் பேரரசின் ஒரு பகுதியாக மைசூர் இருந்த காலத்திலிருந்து இந்த விழா கொண்டாடப்படுகிறது. 1420ல் விஜயநகரப் பேரரசிற்கு வந்த நிகோலோ டி கோன்டி என்ற இத்தாலியப் பயணி, மகா நவமி என்ற பெயரில் இந்த விழா கொண்டாடப்படுவதை தனது பயண நூலில் குறிப்பிட்டிருக்கிறார். பெர்ஷியத் தூதர் அப்துல் ரசாக் 1443ல் இந்த விழாவை நேரில் பார்த்ததைக் குறிப்பிடுகிறார்.விஜயநகரப் பேரரசால்தான் முதன்முதலில் இந்த விழா கொண்டாடப்பட்டதா என்பதைச் சொல்ல சரியான ஆதாரங்கள் கிடையாது. ஆனால், தசரா மிகப் பெரிய சமூக - மத விழாவாக விஜயநகரப் பேரரசின் காலத்தில்தான் மாறியது.

Advertisement

இந்த காலகட்டங்களில் இந்த விழா எவ்வளவு விமரிசையாக, எப்படி கொண்டாடப்பட்டது என்பது குறித்த குறிப்புகள் மைசூர் அரண்மனையின் ஆவணங்களில் காணப்படுகின்றன. 1520ல் இங்குவந்த போர்ச்சுகீசிய குதிரை வியாபாரியான டொமினிகோ பயசும் இது குறித்து விரிவாகப் பதிவு செய்துள்ளார்.அவரது பதிவுகளின்படி, நவராத்திரிக்காக அரண்மனையில் மிகப் பெரிய பந்தல் அமைக்கப்படும். இங்கு ஒவ்வொரு நாளும் காலையில் மன்னர் பூஜையில் ஈடுபடுவார். பிறகு, அணிவகுப்புகள், நடனங்கள் ஆகியவை நடைபெறும்.பிற்பகலில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெறும். இதில் அழைப்பின் பேரில் மட்டுமே ஒருவர் பங்கேற்க முடியும். நடனம், மல்யுத்தம் போன்றவை நடக்கும். பத்தாவது நாள் மிகப் பிரம்மாண்டமான அணிவகுப்பு மரியாதை நடைபெறும். இந்தத் திருவிழா என்பது, ஒரு புதிய நிதியாண்டையும் குறித்தது. மன்னரின் கீழ் இருந்த குறுநில மன்னர்கள் தாங்கள் செலுத்த வேண்டிய திறையை இந்த காலகட்டத்தில்தான் செலுத்துவார்கள். மன்னருக்கான மரியாதைகளும் செலுத்தப்படும். இவையெல்லாம் பொது மக்களுக்கு மத்தியில் நடக்கும் என்பதால், ஒரு தர்பாரைப் பார்ப்பதுபோல காட்சியளிக்கும்.

1565வாக்கில் விஜயநகரப் பேரரசு சிதற ஆரம்பித்தது. அப்போது மைசூர் தனி அரசாக தன்னை பிரகடனம் செய்து கொண்டது. முதல் சுதந்திர அரசராக இரண்டாம் திம்மராஜ உடையார் முடிசூடிக்கொண்டார். அவருக்குப் பிறகு அரசரான, முதலாம் ராஜ உடையார் நாட்டை விரிவுபடுத்திக்கொண்டே சென்றார். தலைநகரம் மைசூரில் இருந்து ஸ்ரீரங்கப்பட்டணத்திற்கு 1610ல் மாற்றப்பட்டது. அப்போதிலிருந்து மைசூர் அரச குடும்பத்தினரால் 'தசரா' என்ற பெயரில் இந்த விழா ஸ்ரீரங்கப்பட்டணத்தில் கொண்டாடப்பட ஆரம்பித்தது. இந்த ஆண்டே, தசரா விழாவின் துவக்கமாகக் கருதப்பட்டு தற்போது 414 தசரா விழா கொண்டாடப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.இதற்கு சில காலத்திற்குப் பிறகு தசரா விழா மீண்டும் மைசூருக்குத் திரும்பியது. 1805ல் மூன்றாம் கிருஷ்ணராஜ உடையார் அரச தர்பாரை மீண்டும் துவங்கினார். இந்த காலகட்டத்தில்தான், தசரா விழா தற்போதைய நவீன வடிவத்தை எடுத்தது.

2013 டிசம்பரில் அப்போதைய மன்னரான ஸ்ரீகந்த உடையார் மரணமடைய, 2014ஆம் ஆண்டு நடந்த தசராவில், அவரது உடைவாளை அரியணையில் வைத்து விழா நடத்தப்பட்டது.2015ல் புதிய மன்னராக யதுவீர கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் பதவியேற்ற பிறகு, அவர் தசரா நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். மைசூர் அரண்மனை சார்ந்து தனிப்பட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

தசரா கொண்டாட்டம் நடக்கும் 10 நாட்களிலும் மைசூர் அரண்மனை லட்சக்கணக்கான விளக்குகளால் ஒளியூட்டப்படும். பல்வேறு கலை, கலாச்சார நிகழ்ச்சிகளை மைசூர் அரண்மனை வளாகத்தில் கர்நாடக அரசு நடத்துகிறது. பத்தாவது நாளான விஜயதசமியன்று அலங்கரிக்கப்பட்ட யானை மீது வைக்கப்பட்ட அம்பாரியில் சாமுண்டீஸ்வரியின் திருவுருவம் வைக்கப்பட்டிருக்கும். அதனை அரச குடும்பத்தினர் வணங்கிய பிறகு அந்த ஊர்வலம் நகரின் பிரதான வீதிகளில் வலம் வரும்.தசரா தினத்தில் மைசூர் மாளிகைக்கு எதிரேயுள்ள மைதானத்தில் மிகப் பெரிய பொருட்காட்சி நடத்தப்படும். 1880களில் பத்தாவது சாமராஜ உடையார் இந்த வழக்கத்தைத் துவங்கிவைத்தார். இப்போது இதனை மாநில அரசு நடத்துகிறது.

இவ்விழாவின் விஜயதசமி தினத்தன்று ஜம்பூ சவாரி எனும் யானைகள் அணிவகுப்பு சிறப்பானது. அலங்கரிக்கப்பட்ட தலைமை யானையில் சாமுண்டீஸ்வரி அம்மன் 750 கிலோ எடை கொண்ட தங்க மண்டபத்தில் பவனி வருவாள். அதன்பிறகு தீப ஒளி அணிவகுப்பு எனும் மாபெரும் விளக்கொளி வைபோகம், வாணவேடிக்கை, நடன நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், நாட்டுப்புற கலை போன்றவைகளால் நகரே தேவலோகம் போல் காட்சி தரும். முன்னரே சொன்னது போல் தசரா பொருட்காட்சி, தசரா திரைப்பட விழா, தசரா உணவு விழா, பாரம்பரிய நாட்டியங்கள் மற்றும் நடன நிகழ்ச்சிகள், மல்யுத்தப்போட்டி, மலர் கண்காட்சி, தசரா பட்டம் விடும் திருவிழா என எங்கு நோக்கினாலும் கேளிக்கை நிகழ்ச்சிகளால் நிரம்பி இருக்கும். ரங்கயானா எனும் புராண நாடகம் தசராவின் சிறப்பான அடையாளம். பத்து நாட்கள் விழாவுக்குப் பிறகு விழாவின் நிறைவாக தீப்பந்தம் ஊர்வலம் நடத்தப்படும்.

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

Tags :
dasaradhasaraMysoreMysuruதசரா விழாமைசூர் தசரா
Advertisement
Next Article