For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

இப்படியுமோர் சந்திப்பு நடக்கிறது!

05:38 PM Jun 17, 2024 IST | admin
இப்படியுமோர் சந்திப்பு நடக்கிறது
Advertisement

தேன் மிட்டாயும், கமர்க்கட்டும் எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு சாப்பிட்டேன். என்.சி.மோகன்தாஸ் & திருமதி மோகன்தாஸ் சில மாதங்களாக ஒரு சிறப்பான சேவை செய்துவருகிறார்கள். தனக்குத் தெரிந்த / தெரியாத பல துறைகளில் சாதித்த / சாதிக்கப் போகிற 15 நபர்களை தன் இல்லத்திற்கு வாஞ்சையுடன் அழைக்கிறார். இராணுவ கண்டிப்புடன் அவர்களை வரிசைப்'படுத்தி' நிற்கவைத்து படமெடுத்த பிறகு இல்லம் அழைத்துச் செல்கிறார்.மேஜை முழுதும் தேடித்தேடி வாங்கிய கொறிப்ஸ் அடுக்கிவைத்து சிற்றுண்டி ( நியாயமாக அது பேருண்டிதான்!) வழங்குகிறார்.அதன் பிறகு முகம் பார்க்க சதுரமாக அமரவைத்து அவரவரையும் குட்டியாக அறிமுகம் செய்துகொள்ளச் சொல்கிறார். சிலர் குட்டியாகவும், சிலர் நேரத்தைச் சுட்டிக்காட்ட வேண்டிய அளவும் பேசினோம்.முகமாகவும், பெயராகவும் மட்டுமே அறிந்த பலரின் பின்னணி உண்மைக் கதைகள் அறிய அரிய வாய்ப்பு. ஒவ்வொருவரின் வாழ்விலிருந்தும் டேக் ஹோம் மெசேஜ்கள் வந்துகொண்டேயிருந்தன.

Advertisement

லேனாவின் பேனாவின் சாதனைகளில் ஒரு துளியாவது அவர் தலையில் ஏறியிருக்க வேண்டுமே.. மனிதர் எப்போதும் போலவே எளிமையான வலிமையான பேச்சில் மனம் தொட்டார்.

Advertisement

குங்குமம் ஆசிரியர் கே.என் சிவராமன் தான் மூன்றாம் வகுப்பு படித்தபோதே தன் லட்சியம் பத்திரிகைத் துறைதான் என்று தீர்மானித்ததாகச் சொன்னதும், 5 படங்களில் தன் பெயரில்லாமல் திரைக்கதை அமைத்திருப்பதாகச் சொன்னதும் புருவம் உயர்த்தவைத்தது.

கிரிஜா ராகவன் தன் வாழ்க்கையில் படிப்படியாக போராடி முன்னேறிய கதையை அத்தனை சுவாரசியமாகச் சொன்னார். 'உன்னால் முடியாது' என்று யாராவது சொன்னால் அதை முடித்தேத் தீருவேன் என்றதில் மிளிர்ந்தது அவரது வைராக்கியமும், தன்னம்பிக்கையும்.

ராதிகா அவர்களின் ராடன் நிறுவனத்தில் தயாரிப்பு செயல் வீராங்கனையாகத் திகழும் சுபா வெங்கட் தன் தாய் வீடான விகடன் குறித்தும், மீடியாவில் கற்றதும், பெற்றதும், இழந்ததும் எல்லாம் சொன்னார்.

ராணி இதழின் ஆசிரியர் ஜி.மீனாட்சி சிறிய கிராமத்தில் பிறந்து பத்திரிகைத் துறையில் ஆர்வம்கொண்டு வளர்தொழிலில் துவங்கி, பங்கு மார்க்கெட், தினமணி, புதிய தலைமுறையின் கல்வி, கல்கி என்கிற தன் நீண்ட போராட்டத்தையும்,சிவசங்கரியின் சுயசரிதையை அவர் சொல்லச் சொல்ல சூரிய வம்சமாக எழுதிய அனுபவத்தையும் அழகாக விவரித்தார்.

வேதா கோபாலன் தன் நினைவில் இருப்பது படி 1500 கதைகள் எழுதியிருப்பதாகச் சொல்லத் துவங்கியதுமே பலத்த கைத்தட்டல். குமுதம் நிறுவனத்தோடு தனக்கும் தன் கணவர் பாமா கோபாலனுக்கும் இருந்த உன்னதமான பந்தத்தை பெருமையாக சொன்னார். ஜோதிடக் கலை கற்ற தன் தந்தை எழுதி வைத்திருந்த ஜோதிடக் குறிப்புகளைப் படித்துத் தேர்ந்து தற்போது ஜோதிடக் கலையிலும் தீவிரமாக செயல்படுவதைச் சொன்னார்.

ஹார்ட்வேர் மற்றும் பெயிண்ட் தொழிலில் இயங்கும் அமுதா பாலகிருஷ்ணன் மாதம் 50 ரூபாய் சம்பளத்தில் ஒரு கடையில் சேர்ந்து தொழில் கற்று, அதில் சேமித்த ஆயிரத்து சொச்ச ரூபாயை முதலீடாகப் போட்டு சிறிய கடை ஆரம்பித்து வளர்ந்த கதையைச் சொன்னபோது சிலிர்ப்பாக இருந்தது. (என் அப்பாவும் இப்படித்தான் வளர்ந்தார் என்பதால் அப்பாவின் ஞாபகம் வந்தது. அந்தக் கால எஸ்.எஸ்.எல்.சி முடித்ததும் 17 வயதில் வீட்டின் வாசலிலேயே அவர் துவங்கிய கண்ணன் ஸ்டோர்ஸ் என்னும் கடையில் முதல் நாள் நடந்த வியாபாரம்..வெறும் ரூபாய் ஏழு மட்டுமே.)

இவர்களைத் தவிர இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட பத்திரிகையாளர்கள் ஜாசன், தாய் பிரபு, எழுத்தாளர்கள் ராஜாமணி, உமா பாலசுப்பிரமணியம், க்ருத்திகா, மடிப்பாக்கம் வெங்கட், தயாளன் இவர்களுடனான முதல் சந்திப்பு இது.

பொதுவான ஓர் அம்சம்:

எல்லோருக்குமே பல வருடங்கள் பழகிய நண்பர்களின் மற்றும் ஒரு சந்திப்பு என்பது போன்ற நட்புணர்வு மேலோங்கியிருந்தது. என்.சி.மோகன்தாஸ் அழைத்தும் முதலிரண்டு சந்திப்புகளில் நான் ஊரில் இல்லாத காரணத்தால் கலந்துகொள்ள இயலாமல் போனது. இந்த முறை கலந்துகொண்டதில் நிறைவான மகிழ்ச்சி. நட்புப் பாலங்களை அவர் தொடர்ந்து கட்டட்டும். வாய்ப்பு அமையும் போதெல்லாம் கலந்துகொள்வேன்.

பட்டுக்கோட்டை பிரபாகர்

Tags :
Advertisement