இது அடல்ஸ் ஒன்லி படம்.. சிறுவர்கள் இந்தப் படத்திற்கு வர வேண்டாம்; :- 'ரா .. .ரா .சரசுக்கு ராரா...' படத்தின் தயாரிப்பாளர் ஓப்பன் டாக்!
லேடீஸ் ஹாஸ்டலை மையமாக வைத்து 'ரா..ரா.. சரசுக்கு ரா..ரா..' என்றொரு படம் உருவாகி இருக்கிறது. இது ஒரே இரவில் நடக்கும் கதை.படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இந்தப் படத்தை ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஏ ஜெயலட்சுமி தயாரித்துள்ளார். இயக்கியிருப்பவர் கேஷவ் தெபுர். படத்திற்கு இசை ஜி. கே. வி , ஒளிப்பதிவு ஆர் .ரமேஷ். இப்படத்தில் கார்த்திக், காயத்ரி பட்டேல் , KPY ஒய் பாலா , மாரி வினோத், காட்பாடி ராஜன், விஸ்வா, ரவிவர்மா ,அபிஷேக், பெஞ்சமின், சிம்ரன், தீபிகா, காயத்ரி ,சாரா, ஜெயவாணி, அக்ஷிதா,விஜய் பிரசாத், ஆகியோர் நடித்துள்ளனர்.
படத்தின் கதை?
யதேச்சையாக நடந்த ஒரு கொலையில் மூன்று பெண்கள் மாட்டிக்கொண்டு அதிலிருந்து தப்பிக்க அவர்கள் படும் சிரமங்களைச் சொல்கிறது கதை. பரபரப்பாகவும் காமெடியாகவும் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.இப்போது பரவி வரும் கால்பாய் கலாச்சாரத்தால் ஏற்படும் சிக்கல்கள் நகைச்சுவையுடன் சொல்லப் பட்டுள்ளன. பரபரப்பான விறுவிறுப்பான கிளுகிளுப்பான சம்பவங்கள் நிறைந்து க்ரைம், ஆக்சன், ஹாரர் அனைத்தும் நிரம்பிய ஒரு கதையாக இது இருக்கும். படத்தில் லேடீஸ் ஹாஸ்டலில் இக்கால இளைஞர்களும் யுவதிகளும் பேசும் அரட்டைகளையும் , சுதந்திரமான காட்சிகளையும் பார்த்த சென்னை மண்டல அதிகாரி இந்த படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் தர முடியாது என்று சொல்லி விட்டார் அதனால் மும்பை ரிவைசிங் கமிட்டிக்கு சென்று அறுவது கட்களோடு ஏ சர்டிபிகேட் வாங்கினோம்.
படம் பற்றித் தயாரிப்பாளர் ஏ.ஜெயலட்சுமியிடம் கேட்டபோது....
"இந்தப் படத்தின் கதை பிடித்துப் போனதால் தான் நான் தயாரிக்க முடிவெடுத்தேன். படத்தில் சமகாலத்தைச் சித்தரிக்கும் காட்சிகள் உள்ளன.இக்காலத்தின் கலாச்சாரத்தையும் இளைஞர்களின் மன உணர்வுகளையும் சொல்லத்தான் வேண்டும்.அப்படிப்பட்ட கதையாகத்தான் இது உருவாகியுள்ளது.இயக்குநர் கேட்டபடி நடிப்புக் கலைஞர்கள் ஆகட்டும் தொழில்நுட்ப வசதிகளாகட்டும் அனைத்தையும் நான் செய்து கொடுத்தேன்.அதன்படியே இந்தப் படம் உருவாகி உள்ளது.
இந்தப் படம் வயது வந்தவர்களுக்கான ஒரு படம் தான். இதைச் சொல்வதில் எனக்குத் தயக்கம் இல்லை. இது 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள்தான் பார்க்க வேண்டிய படம். இளைஞர்கள் மட்டுமல்ல பெரியவர்களும் பார்க்கலாம். இப்போது வருகிற படங்கள் யூஏ சான்றிதழ் பெற்றுக் கொண்டு குடி, புகை,கொலை, குத்து வெட்டு, ரத்தம் , ஆபாசம் எல்லாம் கலந்து வெளி வருகின்றன. படத்தின் தரம் தெரியாமல் சிறுவர்களை அழைத்துப் போகின்ற கொடுமை நடக்கிறது.படத்தைப் பார்க்க ஆரம்பித்த பிறகு குழந்தைகளுடன் சென்ற பெற்றோர் தர்ம சங்கடத்தில் நெளிகிற நிலைமையை நாம் பார்க்கிறோம்.
ஆனால் நாங்கள் "இது ஒரு ஏ படம்" தான் என்று சொல்லியே விளம்பரப்படுத்துகிறோம். சிறுவர்கள் இந்தப் படத்திற்கு வர வேண்டாம் .இது அனைவருக்குமான படம் அல்ல.பொய் சொல்லி ஏமாற்றுவது மிகவும் தவறு. அதில் எங்களுக்கு விருப்பமில்லை."என்கிறார் தயாரிப்பாளர்.
9 V ஸ்டுடியோஸ் வெளியிடும் இப்படம் நவம்பர் 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது.