கைவிடப்பட வேண்டிய நரகம்தான் இந்த சென்னை!
30 லட்சம் பேர் வரை வாழும் கொள்ளளவு கொண்ட ஒரு நரகத்தில் , சுமார் 1 கோடி மக்கள் நிரந்தரமாக வசிப்பதும் தினசரி சுமார் 20லட்சம் பேர் மாநரகத்தின் உள்ளே வந்து செல்வதும் ஆகமொத்தம் 1.2கோடி பேரை தாங்க வேண்டும் என்றால் அது எப்படி சாத்தியம்?
1990களில் உலகசந்தைமயமாதலுக்கு தேசம் திறந்துவிடப்பட்ட பிறகு சென்னையின் பல்தொழில் வளர்ச்சி மிகப்பெரிய பாய்ச்சலை அடைந்தது.. அதனையொட்டி தமிழகத்தின் ஏனைய பகுதிகளின் மக்கள் மிகவேகமாக சென்னையில் குடியேற ஆரம்பித்தனர்.. 2000களில் மென்பொருள் துறை அசுர வளர்ச்சி அடையத் தொடங்கிய பின்னர் சென்னையில் குடியேறுவோரின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்தது...! உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி கற்போர் எண்ணிக்கை மாநிலம் முழுவதும் அதிகரிக்க அதிகரிக்க .. அவற்றுக்கு இணையாக வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்தில் வந்து தொடங்கப்பட்ட தொழில்களை மாநிலம் முழுவதும் பரவலாக்காமல் தங்களது சொந்த நலன்களுக்காக சென்னையிலேயே முடக்கினர்... விளைவு தமிழகம் முழுவதும் படித்தவர்கள் வேலை தேடி இந்த நரகத்துக்கே வரவேண்டிய நெருக்கடி...!
20 ஆண்டுகளுக்கு முன்பு தாம்பரத்தில் தொடங்கிய மாநரகம் கூடுவாஞ்சேரி, வண்டலூர் எல்லாம் தாண்டி காட்டாங்குளத்தூரிலேயே தொடங்கும் அளவு விரிவடைந்து விட்டது... இதில் காஞ்சிபுரம் வரை சேர்த்து கிரேட்டர் சென்னை ஆக்கப்போகின்றனராம்... மக்கள் தொகை பெருகப்பெருக அதற்கேற்ப மின்சாரதடம், தொலைதொடர்புதடம், குடிநீர்குழாய், மெட்ரோ, வடிகால் என்று சென்னை நரகத்தின் சாலைகள் வருடக்கணக்கில் தோண்டப்பட்டுக் கொண்டே இருக்கும் நிலைமை...
நீர்நிலைகளை அரசியல், பணபலம் மிக்கவர்கள் சொந்தமாக்கிக்கொள்ள, நீர்வழித்தடங்களை எளிய மக்கள் எடுத்துக்கொள்ள... பூமி தோன்றிய காலம்தொட்டே பெய்யும் மழைநீர் தன்வழித்தடம் காணாமல் திகைத்து தேங்கி நிற்க..
இவற்றுக்கெல்லாம் காரணமானவர்கள் ஒருவரையொருவர் குற்றம் சொல்லிக்கொண்டு நிற்க..
வருடத்தின் மூன்றுமாத மழைக்காலம் கடந்துவிடுகிறது... அதன்பிறகு மழையை மறந்து அவரவர் வேலைகளைபார்க்க கிளம்பி விடுகின்றனர்..
சென்னையின் மழைநீர் வடிகால் பிரச்சினையும் சரி.. தீபாவளி பொங்கலுக்கு ஏற்படும் பயண நெருக்கடிகளும் சரி ஒருபோதும் தீர்க்க முடியாதவை...
மனிதர்கள் வாழும் தகுதியை இழந்துவிட்ட.. ஒரு கைவிடப்பட வேண்டிய நரகம்தான் சென்னை. இந்த வரிகளுக்காக பதிவர் விமர்சிக்கப்படலாம்.. ஆனால் செங்கல்பட்டுக்கு தெற்கே ஏதோ ஒரு ஊரில் பிறந்து 20 வயதுவரை வாழ்ந்து பின்னர் சென்னை சென்றவர்களை கேட்டுப்பார்த்தால் இந்த வரிகளின் உண்மை விளங்கும்..
..
ஐடி உள்ளிட்ட சேவை நிறுவனங்களை திருச்சி, தஞ்சை, மதுரை உள்ளிட்ட.. நகரங்களிலும், ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த தொழில்களை கடலூர், நாகை, தூத்துக்குடி உள்ளிட துறைமுக நகரங்களிலும் அமைத்தால் சென்னையை காப்பாற்றலாம்.. இல்லையென்றால் இந்நகரை இயற்கையே கைவிட வைக்கும்...!!
யோசி நல்லா யோசி!
நிலவளம் ரெங்கராஜன்