For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்!

08:11 AM Feb 11, 2024 IST | admin
சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்
Advertisement

தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்...இந்தியாவில் முதன்முதலில் மே தினத்தைக் கொண்டாடியவர்... இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் மாநாட்டுக்குத் தலைமை தாங்கியவர், மதிய உணவுத் திட்டத்தின் முன்னோடி. எனப் பல பெருமைகளை தன்னகத்தே கொண்டவர் சிங்கார வேலர்!  மீனவ சமூகத்தைச் பிறந்து, தனது அறிவாலும் சமூகம் மீதான அக்கறையாலும் அசாத்தியமான உழைப்பாலும் சிறந்த வழக்கறிஞராக, தொழிற்சங்கத்தின் முன்னோடியாக, சுதந்திரப் போராட்ட வீரராக, சிந்தனைச் சிற்பியாக உயர்ந்தவர் ம.சிங்காரவேலர்மயிலாப்பூர் சிங்காரவேலு செட்டியார் என்ற முழுப்பெயர் கொண்ட இவர் பொதுவுடைமைச் சிந்தனைகளை தமிழ்நாட்டில் பரப்ப ஆற்றிய பணிகளுக்காக "சிந்தனைச் சிற்பி" எனப் போற்றப்படுகிறார்.

Advertisement

வசதியான குடும்பத்தில் பிறந்த இவர் தனது பள்ளிக்கல்வியை முடித்த பின் மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். வாதிடுவதில் சிறந்து விளங்கிய சிங்காரவேலர், தனது உழைப்பின் மூலம் குறுகிய காலத்திலேயே பெரும் செல்வ வளம் ஈட்டினார். 1889-ல் திருமணம் நடந்தது. அதே சமயம் வறிய வர்கள் மீதான அக்கறை அவருக்குள் அதிகரித்தது. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அயோத்தி தாசர், 1890-ல் சாக்கிய புத்த சமூகத்தை நிறுவினார். அவரது கொள்கைளால் ஈர்க்கப்பட்ட சிங்காரவேலர், புத்த மதத்தின் மீதும் பெரும் ஈடுபாடு கொண்டார். பின்னர், மகாபோதி சங்கத்தை நிறுவினார். தனது வீட்டிலேயே அச்சங்கத்தின் அலுவலகத்தையும் நடத்தினார். ஆழ்ந்த வாசிப்பு கொண்ட அவர், தனது வீட்டில் 20,000-க்கும் மேற்பட்ட நூல்களை வைத்திருந்தார்.

Advertisement

சுதந்திரப் போராட்டத்தில் முனைப்புடன் ஈடுபட்ட அவர், நேரு உள்ளிட்ட தேசத் தலைவர்களிடம் நட்புகொண்டிருந்தார். சென்னை வந்த தலைவர்கள், அவரது இல்லத்தில் தங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். 1919-ல் நடந்த ஜாலியன் வாலாபாக் படு கொலையைக் கண்டித்து, ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி தொடங்கியபோது, அதில் பங்கெடுத்தார். 1921-ல் பிரிட்டிஷ் அரசையும் நீதிமன்றங்களையும் கண்டிக்கும் வகையில், பொதுமேடையில் வழக்கறிஞர் கவுனைத் தீ வைத்து எரித்தார். அன்று முதல், வழக்கறிஞர் தொழிலையும் கைவிட்டார்.

முன்னதாக 1917-ம் ஆண்டு ரஷ்ய மண்ணில் புரட்சி வெடிக்கிறது. கம்யூனிஸ்ட்கள் ஆட்சியைக் கைப்பற்றுகின்றனர். இதைப் பத்திரிகைகளிலும் நூல்களின் வாயிலாகவும் அறிந்துகொண்ட சிங்காரவேலர் மனதிலும் புரட்சிகரச் சிந்தனை துளிர்விடத் தொடங்குகிறது. இயல்பிலேயே, பொதுவுடமை, சமத்துவம், சுய மரியாதை ஆகிய கருத்துகளில் நாட்டம் கொண்ட சிங்காரவேலருக்கு, அதை விஞ்ஞான வழியில் வெளிப்படுத்தும் மார்க்சியத் தத்துவத்தின் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. தாஷ்கண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1920-ம் ஆண்டு எம்.என்.ராய் என்பவரால் தொடங்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்னதாகவே இந்தியாவில் மூன்று கம்யூனிஸ்ட்கள் இருந்தனர். பம்பாயில் எஸ்.ஏ.டாங்கே, கல்கத்தாவில் முஷாபர் அகமது, தமிழ்நாட்டில் நம் சிங்காரவேலர். கம்யூனிஸ்ட் இயக்கக் கருத்துகளை இந்தியாவில் அவருக்கு யாரும் கற்பிக்கவில்லை. யார் மூலமாகவும் அவர் தெரிந்துகொள்ளவில்லை. தன் தேடுதல் வழியாக அவர் கண்டடைந்த தத்துவம்தான் கம்யூனிசம். மார்க்ஸ், லெனின் கருத்துகளை எவரின் பரிந்துரையுமின்றி இந்தியாவின் தெற்கு மூலையில் ஒரு மீனவக் கிராமத்திலிருந்து உள்வாங்கியவர் சிங்காரவேலர். எனில் அவரின் அறிவுத் தேடலும் அரசியல் தேடலும் எந்தளவுக்கு வேட்கை நிறைந்தது என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். அதனால்தான் அவர் சிந்தனைச் சிற்பி என்றும் முன்னோடிகளில்லா முன்னோடி எனவும் அழைக்கப்படுகிறார். இதை அடுத்து தொழிலாளர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தார். 1918-ல் இந்தியாவில் முதல் தொழிற் சங்கத்தை உருவாக்கியவரும் சிங்காரவேலர்தான். 1923 மே1-ல் முதன்முறையாக தொழிலாளர் தினத்தைக் கொண்டாடினார். இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக் கத்தைத் தொடங்கிய முன்னோடிகளில் இவரும் ஒருவர்.

அதோடு, லேபர் கிசான் கெஜட்’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் வார இதழையும், `தொழிலாளன்’ என்ற தமிழ் வார இதழையும் ஆசிரியராக இருந்து பதிப்பித்து வெளியிட்டார்.

பெரியாரின் சுயமரியாதை இயக்கத்திலும் பங்கேற்றார். கம்யூனிஸ்ட் இயக்கமும் சுயமரியாதை இயக்கமும் இணைந்து செயல்பட வேண்டும் என்று பெரியாரிடம் வலியுறுத்தியவர் சிங்காரவேலர். `காந்தியின் தலைமையில் அமைந்த காங்கிரஸ் பேராயக் கட்சியைக் கண்டு நாம் அஞ்ச வேண்டியதில்லை. சிங்காரவேலர் தலைமையில் அமைந்துள்ள இந்துஸ்தான் லேபர் கிசான் கட்சி உண்மையில் சிறியதாக இருந்தாலும் உறுப்பினர் மிகுதியாக இல்லையென்றாலும் அரசு அஞ்ச வேண்டியது அந்தக்கட்சிக்குத்தான்'' என சிங்காரவேலர் கட்சி தொடங்கிய நாளில் காவலர்கள் எழுதி வைத்த ரகசியக் குறிப்புகள் இவை. எனில் சிங்காரவேலர் மீதான வெள்ளையர்களின் அச்சத்தை இதன் மூலமாக நாம் புரிந்துகொள்ள முடியும்.

1928-ல் ரயில்வே நிர்வாகத்தின் அடக்குமுறைகளைக் கண்டித்து, ரயில்வே தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தில் அவர்களுக்குத் துணை நின்றார். அந்தப் போராட்டத்தில் பங்கேற்றதன் காரணமாகக் கைதுசெய்யப்பட்ட சிங்காரவேலருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், அந்தத் தண்டனை குறைக்கப்பட்டு ஆகஸ்ட் 1930-ல் விடுதலை செய்யப்பட்டார். சிறையிலிருந்து வெளியே வந்த அவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்தார். அப்போதும், மார்க்சியம், கம்யூனிசம் தொடர்பான கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வந்தார் சிங்காரவேலர். தந்தை பெரியார் 1931-ம் ஆண்டு உலக நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது பெரியாரின் வேண்டுதலுக்கு இணங்க குடியரசில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தார் சிங்காரவேலர். அதுமட்டுமன்றி கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையையும் தமிழில் மொழிபெயர்த்து குடியரசில் வெளியிட்டார். 1945 ஜூன் 24-ம் தேதியன்று சென்னை அச்சுத் தொழிலாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு எழுச்சிமிகு உரையாற்றினார். அதுவே அவர் கடைசியாகக் கலந்துகொண்ட மாநாடு.

தமிழ் ஆங்கிலம் மட்டுமல்லாது, இந்தி, உருது, பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலி ஆகிய மொழிகளையும் கற்றுத் தேர்ந்திருந்தார். ஆனாலும், தமிழ் மொழிக்காகப் பெரிதும் பாடுபட்டார். தமிழை ஆட்சி மொழியாக்கும் கோரிக்கையை வலியுறுத்தினார் மதிய உணவுத் திட்டத்தின் முன்னோடியும் அவரே, சென்னை மாமன்ற உறுப்பினராக இருந்தபோது அதைக் கொண்டு வந்தார் சிங்காரவேலர். வெறும் தத்துவங்களைப் படித்து அதை அப்படியே நடைமுறைப்படுத்த முயலாமல் இந்த மண்ணுக்கு ஏற்றவகையில் அதை மாற்றி மக்களிடம் கொண்டு சேர்த்ததே சிங்காரவேலரின் தனித்தன்மையாக இன்றளவும் போற்றப்படுகிறது.பன்முகத் தன்மை கொண்ட தலைவராகத் தன் வாழ்நாள் முழுதும் செயலாற்றிய சிங்காரவேலர், 1946-ல் இதே பிப்ரவரி 11ஆம் நாளில் தனது 85-வது வயதில் மரணமடைந்தார்.

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Advertisement