தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

வெள்ளிங்கிரி மலையை ஓர் ஆன்மிக குப்பைமலையாக்கி விட்டார்கள்1

06:24 PM May 13, 2024 IST | admin
Advertisement

ப்போதெல்லாம் வெள்ளிங்கிரி மலை ஆன்மிக ட்ரெக்கிங் பற்றி இரண்டுவிதமான செய்திகள்தான் வருகின்றன. ஒன்று அங்கே குவிந்து கிடக்கும் குப்பைகள். மற்றொன்று அங்கே மூச்சுத்திணறல் உண்டாகி மயக்கம்போட்டு மாண்டுபோகிறவர்கள் பற்றியது. பல நூறு டன் குப்பைகளை ஆண்டு தோறும் அகற்ற வேண்டியிருக்கிறது. வருடத்திற்கு பத்து முதல் இருபது பேர் வரை இறந்துபோகிறார்கள். கடந்த பத்தாண்டுகளாகத்தான் இந்த கூத்து. சென்ற ஆண்டு இந்த மலை ஏறினேன். சிறுவயதிலிருந்தே எனக்கு மிகவும் பிடித்த ஆன்மிக ட்ரெக்கிங் தளங்களில் ஒன்று இது. ஈஷா கட்டத்தொடங்குவதற்கு முன்பிருந்தே பூண்டி மலை பரிச்சயம். அந்த மலைக்கும் எனக்குமான நெருக்கம் பனிரெண்டு வயதில் தொடங்கியது. அப்போதிருந்து ஏறுகிறேன். ஒரே இரவில் மூன்று முறை ஏறி இறங்கியது கூட உண்டு. எப்போதும் அன்னதானம் போடுவார்கள். அவ்வளவு கூட்டம் இருக்காது.

Advertisement

சென்ற ஆண்டு மலை ஏறியபோதே இனிமேல் இந்தப்பக்கமே வரக்கூடாது என்கிற எண்ணம் வந்துவிட்டது. இரண்டு காரணங்கள் ஒன்று கட்டுக்கடங்காமல் வருகிற கூட்டம். சாதாரண நாட்களில் கூட திருப்பதி தரிசனம் போல க்யூவில் மலை ஏறுகிறார்கள். மன அமைதிக்கு பதிலாக மன அழுத்தம் வந்துவிடுகிறது. கசகசப்பும் நெரிசலும் திண்டாட்டமும்…! சித்திரை பௌர்ணமி அல்லது வாரயிறுதிகளில்தான் இத்தனை கூட்டம் ஏறும். இப்போது பக்தி முத்திப்போய் வாரம் முழுக்கவே கும்பல் கும்பலாக ஏறுகிறார்கள். வெள்ளிங்கிரியின் ஏழாவது மலையில் இருக்கிற கோயிலை இந்து அமைப்பு ஏதோ ஆக்கிரமித்து வைத்திருக்கிறார்கள். முன்பு மலையில் ஒரே ஒரு சிறிய சிவலிங்கம்தான் இருக்கும். அதற்கு முன்னால் ஒரு கற்பூரத்தை காட்டிவிட்டு வந்துவிடுவோம். இப்போது அதை பெரிய வணிகஸ்தலமாக மாற்றி வைத்திருக்கிறார்கள்! அர்ச்சனை பண்ணி மாலையை போட்டு… எங்கு பார்த்தாலும் ஆரஞ்சுகொடிகளை நட்டு அமர்க்களம் பண்ணுகிறார்கள். இந்த ஆரஞ்சு அணி ஆக்கிரமித்த எந்த இடம் உருப்பட்டிருக்கிறது.

Advertisement

யூடியூப் இன்ஸ்டாகிராம் தாக்கத்தால் கண்டமேனிக்கு வயது வித்தியாசம் இல்லாமல் மக்கள் வந்து குவிகிறார்கள். யாருக்கும் இந்த மலை பற்றி எதுவும் தெரிவதில்லை. ஏழு மலைப்பாதைகளை கொண்ட 6 கிலோமீட்டர் தொலைவுள்ள பயணம் இது. போக வர 12 கிலோமீட்டர். இந்த மலையை ஏறுவது எல்லோருக்கும் சாத்தியமற்றது. ஒரு மலையில் படிகள் இருக்கும், ஒரு மலையில் மண்பாதை, இன்னொன்றில் பாறைகள், இன்னொன்று நெட்டுக்குத்தலாக புஷ்பா அல்லுஅர்ஜூன் போல ஷோல்டரை தூக்கிக்கொண்டிருக்கும்! இதையெல்லாம் பெரும்பாலும் இரவில்தான் ஏறமுடியும். ஏப்ரல் மே மாத வெயிலில் ஏறினால் சூரிய தாக்குதலுக்கு ஆளாகி போய்ச்சேர வேண்டியதுதான். 12 கிலோமீட்டர் சும்மா நடந்தாலே நெஞ்சை பிடித்துக்கொள்ளுகிற ஆட்கள் மலையேறினால் தாங்க முடியுமா!

இந்த மலைகளில் முதலுதவி கூட கிடைக்காது. என் கண் எதிரே மாரடைப்பு வந்து சரிந்து விழுந்து இறந்து போனவர்களை பார்த்திருக்கிறேன். தொட்டில் கட்டி கீழே கொண்டு போவார்கள். ஆனால் இரவில் போனால் இன்ஸ்டா வீடியோ போடமுடியாது என்பதால் பகலில் நிறைய பேர் ஏறுகிறார்கள். வாழ்க்கையில் வாக்கிங் கூட போகாதவர்கள் இப்படி பகலில் மொட்டை வெயிலில் ஏறினால் முதல் பிரச்சனை டீஹைட்ரேஷன் வரும், அடுத்து வெயிலின் தாக்கம், அடுத்து மூச்சுத்திணறல் (கடல் மட்டத்திலிருந்து 5000 அடி உயரத்தில் இருக்கிற மலை இது). ஏற்கனவே உடல் நலக்குறைபாடு இருந்தால் ஆட்டம் க்ளோஸ். இதுபோக கூட்ட நெரிசல் ஒருபுறம், போதிய நீர் எடுத்துச்செல்ல முடியாது. எலக்ட்ரால் தேவைப்படும். இதில் ஷூ போட்டு மலையேறினால் இது ஆன்மீக பூமி இதுல ஷூபோடலாமா என வக்கனையாகக் கேட்பார்கள். ஆனால் அதே மலையைதான் மலங்கழித்த குப்பை மேடாக்கிவிட்டு வருவார்கள்! ஷூ போடக்கூடாது ஆனால் ஆய் போகலாமா?

இப்படி பெருகுகிற கூட்டத்தால் வெள்ளிங்கிரி மலையை ஓர் ஆன்மிக குப்பைமலையாக மாற்றிவிட்டார்கள். மரஞ்செடி கொடிகளைக்காட்டிலும் ப்ளாஸ்டிக் கழிவுகளும் மனிதக் கழிவுகளும் நிறைந்த ஒரு மாபெரும் அசுத்தக்கூடாரமாக வெள்ளிங்கிரி மாறிவிட்டது. தடுக்கிவிழுந்தால் மலத்திலோ மூத்திரத்திலோ கெட்டுப்போன உணவுகளிலோ ப்ளாஸ்டிக் பாட்டில்களிலோதான் விழவேண்டி இருக்கும். இரவு நேரங்களில் நடப்பவர்கள் சில நேரங்களில் நாம் மிதித்தது சோறா அல்லது வேறெதுவுமா என்கிற சந்தேகத்தோடுதான் நடக்கவேண்டியிருக்கும்! இது ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகிக்கொண்டே செல்கிறது. இதைக் கட்டுப்படுத்தவே முடியாது. இது இன்னும் மோசம்தான் ஆகும்.

இத்தனைக்கும் மலையேற துவங்கும்போதே ப்ளாஸ்டிக் குப்பைகளை வனத்துறை வாங்கிக்கொள்கிறது. அல்லது எத்தனை பாட்டில்கள் எனக் கணக்கு வைத்துக் கொண்டு திரும்ப வரும்போது பெற்றுக்கொள்கிறது. இருந்தும் எப்படி இத்தனை குப்பைகள். வெள்ளிங்கிரிமலையானுக்கே வெளிச்சம். ஒரு நாளைக்கு ஆயிரம் பேர் ஏறிக்கொண்டிருந்த மலையில் தினமும் பத்தாயிரம் இருபதாயிரம் பேர் ஏறினால் என்ன ஆகும். முதலில் காடுகள் பாதிப்புக்கு உள்ளாகும். அங்கிருக்கிற பல்லுயிரிகளுக்கு தொந்தரவு ஆகும். கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். ஊட்டி கொடைக்கானல் போல வெள்ளிங்கிரி மலைக்கும் ஈபாஸ் முறை கொண்டுவரலாம். அதில் மெடிக்கல் ரெகார்டுகளை சமர்பிக்க சொல்லலாம். அதன் அடிப்படையில் அனுமதி வழங்கலாம். இது உயிரிழப்புகளை தடுக்கும். இந்த ஆண்டு மட்டும் ஏப்ரல் மாதத்தில் 9 பேர் இறந்துபோயிருக்கிறார்கள்! இந்தமுறை மொத்த எண்ணிக்கை 13 என்கிறார்கள்! அடுத்த ஆண்டு இன்னும் அதிகம்தான் ஆகும்.

மஞ்ஞுமேல் பாய்ஸின் குணாகுகையை விட ஆபத்தானது இந்த வெள்ளிங்கிரி பாய்ஸின் பயணம். மலைமீது மருத்துவ உதவிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். குறைந்த பட்ச முதலுதவிகள் தரக்கூடிய மருத்துவ முகாம்களை பிப்ரவரி தொடங்கி ஜூன்வரைக்கும் வைக்கலாம். குப்பைகள் பிரச்சனையை சமாளிக்க வனத்துறையும் நிறைய நடவடிக்கைகள் எடுப்பதாக சொன்னாலும் எப்படி இவ்வளவு குப்பைகள் பெருகுகின்றன என்பது ஆச்சர்யம்தான். இதைத்தடுக்க குப்பைத்தொட்டிகள் அமைக்கலாம். ஆனால் மலைமீது ஆறுகிலோமீட்டருக்கு எவ்வளவு வைப்பது. அதை எப்படி அப்புறப்படுத்துவது என்கிற கேள்விகள் எழுகின்றன. மேலே கழிவறை வசதிகளும் இல்லை. இத்தனை லட்சம் பேர் ஏறக்கூடிய மலையில் கழிவறை இல்லாமல் போகும்பட்சத்தில் அவர்களெல்லாம் எங்கே மலஜலங்கழிப்பார்கள். காட்டுப்பகுதிதானே மண்ணுக்கு உரமாகும் என நினைக்கலாம்! ஆனால் இந்த மலஜலம் மற்ற விலங்குகளுக்கு நோய்களை பரப்பக்கூடியது. நாம் அசுத்தம் பண்ணுவது இந்த விலங்குகளின் வசிப்பிடம் என்கிற எண்ணம் இருக்கவேண்டும். யாருக்கும் அது கிடையாது.

மனிதர்கள் இரவுகளில்தான் அதிகமாக குற்றஞ்செய்யக்கூடியவர்களாக இருக்கிறார்கள். இரவு மனிதர்களை அறமிழக்கச்செய்கிறது. மலையை மட்டும் விட்டு வைப்பார்களா என்ன. வெள்ளிங்கிரிமலையில் பாம்பாட்டி சுனை, ஆண்டி சுனை, சித்தர் சுனை என நிறைய சுனைகள் உண்டு. அந்த இடங்களை எல்லாம் பார்த்தால் நான்கு நூற்றாண்டுகளாக கழுவிடாத கழிப்பறைகளை விடவும் மோசமான நிலையில் இருக்கின்றன. இரவெல்லாம் இங்குதான் அத்தனை மனிதர்களும் செய்யாத சேட்டைகளை எல்லாம் செய்வார்கள். இந்த நீரைதான் வனவிலங்குகள் எல்லாம் குடிக்கவேண்டும். அந்த மலமிதக்கும் சுனைகளில்தான் நம்ம மக்களும் நள்ளிரவில் என்ன ஏது என்று தெரியாமல் புனித நீராடிக்கொண்டிருப்பார்கள்!

இந்த சுனைகளை மனிதர்கள் பயன்படுத்த முடியாத படி வேலிகள் அமைத்து கட்டாயம் மூடிவைக்க வேண்டும். அந்தப்பகுதிகளில் மலங்கழிப்பதை தடுக்கவேண்டும்.
இரவுகளில் மலையேறுவதால்தான் இந்த தொந்தரவு எல்லாம். பகலில் மட்டுமே மலையேற அனுமதி என அறிவிக்க வேண்டும். ஆபத்துதான் என்றாலும் மலையை காக்க அதுவொன்றே வழி. அதற்கும் ஈபாஸ் முறை கொண்டுவரவேண்டும். ஆரோக்கியமானவர்களை உடல்நல பரிசோதனை செய்த பிறகு அனுமதிக்கலாம். மேலேயே மருத்துவ உதவிகள் மற்றும் குடிநீர் பந்தல்கள் வைக்கலாம். அடுத்து ஒருநாளில் இத்தனை பேர்தான் என குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே அனுமதி தரவேண்டும். மேலேயே மலையேறுகிற பக்தர்களை கண்காணிக்க அவர்கள் மோசமான காரியங்களில் ஈடுபடுகிறார்கள் அசுத்தம் பண்ணுகிறார்கள் என்பதை கண்காணிக்க உள்ளூர் மக்களை பயன்படுத்தலாம். பக்தியின் பேரால் சூறையாடப்படும் இந்த மலையை காக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதையெல்லாம் செய்வது மனிதர்களை காப்பாற்றுவதற்காக மட்டும் அல்ல. சிறுவாணியின் நீர்பிடிப்பு பகுதிகளை காப்பதற்காகவும் அங்கே வாழ்கிற மற்ற உயிரினங்களை காக்கவும்தான்!

அதிஷா

Tags :
crowdSpiritualUglyVellingiri hill
Advertisement
Next Article