பைக் டாக்சிக்கு தடையில்லை-போக்குவரத்து அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் பைக்குகளை இன்று முதல் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை, மண்டல அலுவலர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு போக்குவரத்துத் துறை ஆணையர் பிறப்பித்துள்ளார். மோட்டார் வாகன சட்ட விதிமுறைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க, சிறப்பு வாகன தணிக்கை மேற்கொள்ள கள அலுவலர்களுக்கு ஆணையிட்டுள்ளார்.மேலும் சென்னை போக்குவரத்து ஆணையரும் இதையொட்டி ஒரு உத்தரவு பிறப்பித்து இருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் பைக் டாக்ஸி இயக்கலாம். பைக் டாக்ஸிகளில் பயணம் செய்வோரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆய்வு செய்து வருகிறோம். பைக் டாக்ஸி பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது என தமிழக போக்குவரத் துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
தனிநபர் பயன்பாட்டிற்காக பொதுமக்கள் பயன்படுத்தும் இருசக்கர வாகனமானது, தற்போது சில முக்கிய நகரங்களில் வணிக நோக்கத்திற்காக ‘பைக் டாக்சி’ எனும் பெயரில் பலர் இயக்கி வருகின்றனர். 4 சக்கர வாகனத்திற்கே வெள்ளை, மஞ்சள் நிற நம்பர் பிளேட்கள் கொடுக்கப்பட்டு இது சொந்த பயன்பாட்டு வாகனம், இது வணிக நோக்கத்திற்காக வாகனம் என இருக்கும் போது பைக் டாக்சி நடைமுறை விதிமுறைகளை மீறுகிறதா என்ற கேள்விகளும் எழுகிறது. கூடவே ஆட்டோ டிரைவர்கள் இது போன்ற ஈ பைக் சர்வீஸால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கிறது என்றும் குரல் கொடுத்து வருகிறார்கள்..!
இச்சூழலில், போக்குவரத்து விதிமுறைகளை மீறி பைக் டாக்சி ஒட்டப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய தமிழக அரசு, போக்குவரத்துத்துறைக்கு உத்தரவிட்டது. மேலும் இது தொடர்பாக தினமும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த பைக் டாக்சி விவகாரம் குறித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், ” மக்கள் வாழும் காலசூழ்நிலைக்கு ஏற்ப சட்டதிட்டங்கள் மாறுபடும். “பைக் டாக்ஸி விவகாரத்தில் மத்திய அரசுடன் இணைந்து முடிவெடுக்க வேண்டியுள்ளது. மத்திய அரசு இந்தியா முழுவதும் பைக் டாக்சிகள் இயக்க சில விதிமுறைகளை வழங்கி உள்ளது. இது குறித்து குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பைக் டாக்ஸிகளில் பயணம் செய்வோரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆய்வு செய்து வருகிறோம்.இப்படியான பைக் டாக்சி நடைமுறையில் உள்ள சாதக பதக்கங்களை ஆய்வு செய்ய குழு அமைத்துள்ளோம். அந்த உயர அதிகாரிகள் கொண்ட குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்த பிறகு பைக் டாக்சி பற்றி முடிவு செய்யப்படும். ” என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
மேலும், ''பைக் டாக்ஸி பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. அதே சமயம் ஆட்டோ டிரைவர்கள் பாதிக்கப்படுவதாகவும் கருத்து நிலவுகிறது. பைக் டாக்ஸிக்கு ஒரு புறம் வரவேற்பு, மறுபுறம் எதிர்ப்பு இருந்தாலும் இதில் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பு கருதியே கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வாடகை அல்லாத வாகனங்களில் ஒருவர் பயணம் செய்வதை சட்டம் ஏற்றுக் கொள்ளாத சூழல் உள்ளது. இதனால் சிறு விபத்து ஏற்பட்டால் கூட நீதிமன்றத்தால் நிவாரணம் மறுக்கப்படுகிறது.தமிழகத்தில் பைக் டாக்ஸி இயக்கலாம். ஆனால் விதி மீறலில் ஈடுபடக் கூடாது. வாகனத்துக்கு காப்பீடு, மூன்றாம் நபர் காப்பீடு இருக்க வேண்டும். ஓட்டுநருக்கு லைசென்ஸ் இருக்க வேண்டும். வாகனம் எப்படி பதிவு செய்யப்பட்டு உள்ளதோ அதன்படி மட்டுமே இயக்கப்பட வேண்டும். மோட்டார் வாகன சட்டத்தின் அனைத்து விதிமுறைகளும் முழுமையாக பின்பற்றப்பட வேண்டும்” என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.