நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி தொடங்கப் போகுது!
ஏதோ ஒரு காரணத்துக்காகக் கூட்டப்பட்டு ஒரு நாள் முன்னதாகவே நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடந்து முடித்து வைக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 22 ஆம் தேதி வரை நடைபெறும் என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார். இதன்படி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் 15 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த கூட்டத் தொடரில் முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து , மத்திய நாடாளுமன்றத்திற்கான விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், வரும் டிசம்பர் 4-ம் தேதி நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத் தொடர் டிசம்பர் 4-ம் தேதி தொடங்கி, டிசம்பர் 22-ம் தேதி வரை நடைபெறும். குளிர்கால கூட்டத் தொடரான இந்த கூட்டத் தொடரில் மொத்தம் 15 அமர்வுகள் நடைபெற உள்ளன என தெரிவித்தார்.
இந்த கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் சார்பில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரதமர் மோடி பிரச்சாரம் செய்த விவகாரம், பணவீக்கம், விலைவாசி உயர்வு, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை கொண்டு எதிர்க்கட்சிகளை முடக்குவது போன்ற பிரச்சனைகளை எழுப்பக்கூடும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் 5 மாநில தேர்தல் முடிவுகள் வந்த மறுநாளே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்குவதால், இந்த கூட்டத்தில் தேர்தல் முடிவுகள் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்கு பணம் பெற்ற புகார் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இருந்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகுவா மொய்த்ராவை வெளியேற்றுவதற்கு வழங்கிய பரிந்துரை வரைவு அறிக்கையை மக்களவை நெறிமுறைகள் குழு ஏற்றுக் கொண்டுள்ளது அறிக்கைக்கு ஆறு பேர் ஆதரவாகவும் நான்கு பேர் எதிராகவும் வாக்களித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது