“வாட்டர் கேட்” 💥ஊழல் அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் பதவி இழந்த நாளின்று👀
அமெரிக்காவில் ஜனாதிபதியின் பதவிக்காலம் 4 ஆண்டுகளே. ஒருவர் இருமுறை பதவி வகிக்கலாம். 1968 முதல் 1974 வரை ஜனாதிபதியாக இருந்தவர் நிக்சன். குடியரசு கட்சியைச் சேர்ந்த அவர் தன்னுடைய 55_வது வயதில் 1968_ல் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு 1972_ல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் நிக்சன் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது அவர் மீது ஊழல் புகார் ஒன்றை எதிர்க்கட்சியினர் கூறினர். ஜனநாயக கட்சி (எதிர்க்கட்சி) தலைமையகம் இயங்கும் “வாட்டர் கேட்” மாளிகையில் ரகசியமாக ஒலிப்பதிவு கருவிகளைப் பொருத்தி, அந்த கட்சியினரின் உரையாடல்களைப் பதிவு செய்து, அவர்களுடைய தேர்தல் வியூகம் பற்றி தெரிந்து கொண்டார் என்பதே நிக்சன் மீதான குற்றச்சாட்டு ஆகும். இந்த விவகாரம் 1974_ம் ஆண்டு மத்தியில் விசுவரூபம் எடுத்தது. இந்த குற்றச்சாட்டை தொடக்கத்தில் நிக்சன் மறுத்து வந்தார்.இதுபற்றி பூர்வாங்க விசாரணை நடத்திய பாராளுமன்ற குழு “நிக்சன் குற்றவாளி! அவரை பதவியில் இருந்து நீக்க, அமெரிக்க சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரலாம்” என்று சிபாரிசு செய்தது.
அமெரிக்க அரசியல் சட்டப்படி, ஜனாதிபதியை பதவியில் இருந்து நீக்க வேண்டுமானால், அதற்கான தீர்மானம் பாராளுமன்றத்தில் பாதிக்கு மேற்பட்டவர்களின் ஆதரவுடன் நிறைவேற வேண்டும். அதன் பிறகு மேல்_ சபையில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற வேண்டும். அப்போதுதான் ஜனாதிபதியை பதவியில் இருந்து நீக்க முடியும். ஆனால் நிக்சனை பதவியில் இருந்து நீக்காமல், அவருடைய போக்கை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றினால் போதும் என்று ஒரு பகுதியினர் முயற்சி மேற்கொண்டனர். ஆனால், பாராளுமன்றத்தில் உள்ள நிக்சனின் ஆதரவாளர்கள் பலரும், அவர் பதவி விலகுவதுதான் நல்லது என்று கருத்து தெரிவித்தனர். அதன் மூலம்தான், நிர்வாகத்தில் ஏற்பட்ட குறையை போக்க முடியும் என்றும் கூறினார்கள். இந்த நிலையில் நிக்சன் திடீர் என்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், “நான் குற்றவாளி” என்றும் ஒப்புக்கொண்டார்.
நிக்சனின் அறிக்கை வருமாறு:-
“இந்த ஊழல் வழக்கில் நான் குற்றவாளி. நடைபெற்ற தவறுகளுக்கெல்லாம் நான்தான் பொறுப்பு. அதற்காக வருந்துகிறேன். எதிர்க்கட்சி தேர்தல் அலுவலகத்தில் ஒட்டு கேட்கும் வேலை என் அனுமதியுடன்தான் நடந்தது. இந்த ஊழல் பற்றி ரகசிய போலீசார் விசாரணை தொடங்கியபோது அதை தடுக்கவும் திட்டமிட்டோம். எல்லா உண்மைகளையும் என் வக்கீலிடமும், என் உதவியாளர்களிடமும் மறைத்துவிட்டேன். இந்த குற்றத்திற்காக என்னை பதவி நீக்கம் செய்வது நியாயம் அல்ல.” இவ்வாறு நிக்சன் கூறியிருந்தார். இந்த திடீர் அறிவிப்பு நிக்சனின் தீவிர ஆதரவாளருக்கு பெரும் அதிர்ச்சியூட்டியது.
“நான் குற்றவாளி” என்று நிக்சன் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து மந்திரிசபையின் அவசர கூட்டத்தை அவர் கூட்டினார். மந்திரிசபை கூட்டத்தில் நிக்சன் பேசும்போது, “நான் பதவியில் இருந்து ராஜினாமா செய்யமாட்டேன். தொடர்ந்து ஜனாதிபதியாக இருப்பேன்” என்று அறிவித்தார். உண்மையை ஒப்புக்கொண்டால், தனக்கு மன்னிப்பு கிடைக்கும் என்று நிக்சன் நம்பினார். ஆனால் அது நேர்மாறான விளைவுகளை ஏற்படுத்தின. நிக்சனுக்கு ஆதரவாக இருந்த சிலரும், அவருக்கு எதிராக மாறினார்கள்.நிலைமை விபரீதமாக போய்க் கொண்டிருந்ததால் நிக்சனின் குடியரசு கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் கூடி ஆலோசனை செய்தார்கள். நிக்சனின் முக்கிய ஆதரவாளர்கள் என்று கருதப்படும் அனைவரும் இதில் கலந்து கொண்டனர். பதவியில் இருந்து நிக்சன் விலகவேண்டும் என்று அவர்கள் அனைவருமே கருத்து தெரிவித்தார்கள். “பதவியை விட்டு நீங்களே (நிக்சன்) விலகிவிடுங்கள் அல்லது நாங்கள் உங்களை பதவியில் இருந்து நீக்கவேண்டியது இருக்கும்” என்று அவர்கள் ஒரு தூதுக்குழுவை அனுப்பி நிக்சனிடம் தெரிவித்து விட்டார்கள்.
குற்றச்சாட்டு காரணமாக பதவி விலகும் ஜனாதிபதி மீது அவர் செய்த குற்றத்துக்காக கோர்ட்டில் வழக்கு தொடரமுடியும். ஆனால், நிக்சன் அவராக ராஜினாமா செய்வதால் அவர் மீது வழக்கு தொடராமல் விட்டு விடலாம் என்று அமெரிக்க மேல்_சபையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.
9_8_1974 அன்று அதிகாலை 6_30 மணிக்கு நிக்சன் டெலிவிஷனில் தோன்றி தனது ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டார். ராஜினாமா கடிதத்தை வெளிநாட்டு இலாகா மந்திரி கிசிங்கரிடம் கொடுத்தார். பிறகு ராஜினாமா ஏற்கப்பட்டது. “ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்ற ஒரு வரியை மட்டும் எழுதி கீழே கையெழுத்து போட்டிருந்தார். அமெரிக்க அரசியல் சட்டப்படி ஜனாதிபதி பதவியை விட்டு விலகினால், துணை ஜனாதிபதி, ஜனாதிபதியாக பதவி ஏற்க வேண்டும். அதன்படி இதுவரை துணை ஜனாதிபதியாக இருந்த ஜெரால்டு போர்டு ஜனாதிபதியாக பதவி ஏற்றார்.💥