இன்றும் அன்றைய பயங்கரமான காட்சிகளை மறக்கவே முடியாத அளவுக்குக் வந்து போன சுனாமி!
காஞ்சியில் சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக ஜெயேந்திரர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், விசாரணைக்கு ஆஜராகும்படி முதன்முறையாக இளைய சங்கராச்சாரியார் விஜயேந்திரருக்கு போலீஸ் அனுப்பி இருந்தது..!இதனால் டிசம்பர் 26, 2004 காலை, போலீஸ் அலுவலகத்தில் ஆஜராகவிருந்தார்.. !அவரின் வருகைக்காக இப்போது டிஐஜி அலுவலகமாக இருக்கும் காட்டு பங்களா முன்பு சன் டிவிக்காக செய்தி சேகரிக்க காலையிலேயே திரண்டுவிட்டிருந்தோம்..!எடிட்டோரியலிலேயே எப்போதும் வாழ்க்கையை தள்ளி வந்த நமக்கு சன் டிவி வாழ்க்கையில் களத்தில் சேகரிக்க. இறக்கி விடப்பட்டது, சங்கரராமன் கொலை வழக்கில் மட்டும்தான்.
விஜயேந்திரர் 10 மணிக்கு மேல் தான் வருவார் என்றாலும் காலையில் 7 மணிக்கே செய்தியாளர்கள் கூட்டம் நேரடி ஒளிபரப்பு வேன்களோடு காட்டு பங்களா பக்கம் முற்றுகை இட ஆரம்பித்தது. அப்போதுதான் பேரிடியாக ஒரு தகவல்.. இதுவரை எப்போதுமே இல்லாத அளவுக்கு கடல் கொந்தளிக்கிறது என்று.சில நிமிடங்களில் அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன..!
"சென்னையில் கடல் புகுந்துவிட்டது.. வேளாங்கண்ணியை கடல் அழித்துவிட்டது. கன்னியாகுமரியை கடல் காவு வாங்கிவிட்டது" வரிசையாக வந்த, எடுத்த எடுப்பில் நம்ப முடியாத தகவல்களால் ஆரம்பத்தில் ஒன்றுமே புரியவில்லை. பின்னர் தான் மூத்த செய்தியாளர் ஒருவர், அது சுனாமி என்று சொல்லி விளக்கினார். இந்த ரகளையிலும் சங்கர மடத்து பக்தர் ஒருவர் சொன்னார் பாருங்கள், "பெரியவர் ஜெயேந்திரரை கைது செய்யும் போது எதுவுமே நடக்கவில்லை. ஆனால் சிறியவரை விசாரணைக்கு அழைத்த உடனே கடலே பொங்கி விட்டது. இப்போது தெரிகிறதா சின்னவர் பவர்?" என்று. சங்கரராமன் கொலை வழக்கை எல்லாம் ஓரங்கட்டி வைத்துவிட்டு, கலெக்டர் எஸ்பி உள்ளிட்ட அதிகாரிகள் சுனாமி தாக்கிய கல்பாக்கத்திற்கு அதிரடியாக கிளம்பி ஓட, செய்தியாளர்களும் அவர்களை பின்தொடர்ந்தோம்..!
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வரை பயணம் அனுபவம் சாதாரணமாகத்தான் போனது.கல்பாக்கம் பகுதிகளை நெருங்க நெருங்கத்தான் சுனாமியின் கோர முகத்தை காண முடிந்தது.. ஏராளமான கார்கள் ஊருக்கு வெளியே தூக்கி வீசப்பட்டு கிடந்தன.ஆங்காங்கே சடலங்கள்..ஊருக்குள் புகுந்து கடல் பேரலைகள் சுழற்றி சுழற்றி அடித்து இருக்கின்றன. முடிந்தவர்கள் தப்பித்துக் கொள்ள, சேதமான கட்டிடங்கள் அமானுஷ்யமான நிலையில் இருக்க பார்க்கவே பீதியாக இருந்தது..!எல்லா வீடுகளும் திறந்து கிடந்தன. ஒரு தேவாலயத்தில் புகுந்து பார்த்தால், உங்க மக்கள் அமரும் அத்தனை மரப்பலகைகளும் துண்டு துண்டாக கிடந்தன.. அப்படி என்றால்?
உண்மையை சொல்லப்போனால் சுனாமி வந்து தாக்கி விட்டு போயிருக்கிறது என்பதை விட, மீண்டும் சுனாமி வந்தால் நாம் தப்புவோமே என்ற பயம் தான் உள்ளுக்குள் அதிகரித்துக் கொண்டே இருந்தது.மருத்துவமனை அரசு மருத்துவமனை பக்கம் ஓடினால் வரிசையாக சடலங்கள் வந்தபடி,..!20 ஆண்டுகளுக்கு முன்பு கண்டவை என்றாலும் இன்றும் பயங்கரமான காட்சிகளை மறக்கவே முடியவில்லை.சங்கர் ராமன் கொலை வழக்குக்கு தற்காலிகமாக மூடு விழா நடத்திவிட்டு, சன் டிவி நியூஸ் எடிட்டோரியலுக்கு திரும்பி திரும்பிவிட்டோம்.
அதன் பிறகு சுனாமி தொடர்பான செய்திகளை தினமும் எழுத எழுத.. அதிலும் சன் டிவி செய்தியாளர்கள் ( மறைந்த) நாகை ஜான் கென்னடி, Devanathan Cuddalore, நாகர்கோவில் பரமேஸ்வரன், கன்னியாகுமரி ஐயப்பன், திருவட்டாறு பீட்டர் ஜெரால்டு, தூத்துக்குடி Vasi Karan ,நெல்லை ராமலிங்கம்,கோவில்பட்டி கோமதி சங்கர், தென்காசி முத்துவேல்..போன்றோர் இரவு பகல் பாராமல் களப்பணியில் ஈடுபட்டு நெஞ்சை கனகனக்கச் செய்யும் வீடியோக்களையும் தகவல்களையும் அனுப்ப அனுப்ப.. கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு உச்சகட்ட துக்கம்தான் ஆட்டிப்படைத்தது.
கடலூர், நாகப்பட்டினம் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 10,000க்கும் மேற்பட்டோர் பலி.. இன்னும் வேளாங்கண்ணி பகுதியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர்..!சுனாமி தாக்கிய சில நாட்களுக்குப் பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக பல்வேறு நாடுகளில் சுனாமி தாக்கிய கோரத்தின் உச்சகட்ட வீடியோக்கள் வெளி வர ஆரம்பித்தன. அப்பொழுதுதான் தமிழக கடற் பகுதிகளில் சுனாமி தாக்குதல் எப்படி நிகழ்ந்திருக்கும் என்பது புரிய வந்தது.