'விஞ்ஞான ஊழல்' என்னும் பட்டம் பாஜகவுக்கே பொருத்தம்!
அதானி மீதான ஹின்டன்பர்க்கின் அறிக்கை வெளி வந்த பின்னர் அந்த நிறுவனத்தில் எந்த முறைகேடுகளும் நடக்கவில்லை என்று செபி எனும் மும்பை பங்குச் சந்தை அறிக்கை கொடுத்திருந்தது. அப்போது சில பாஜக அபிமானிகள் எனது இன்பாக்ஸ் வந்து 'இப்போதாவது புரிகிறதா?' என்று நக்கல் அடித்தார்கள். செபி ஏன் அப்படி அதானி மீது தூய்மை பெயிண்ட் அடித்தார்கள் என்பது இப்போது புரிய வந்திருக்கிறது.
அதானி குழுமத்தின் ஃபர்னீச்சரை உடைத்துப் போட்ட ஹின்டன்பர்க் நிறுவனமே இதையும் உடைத்திருக்கிறது. செபியின் இயக்குனர் மாதபி பூரி மற்றும் அவர் கணவர் இருவரும் கவுதம் அதானியின் சகோதர் சேர்ந்து அதானி நடத்தும் அந்நிய நாட்டு நிறுவனங்களில் பங்குதாரர்களாக இருந்திருக்கிறார்கள் என்று தெரிய வந்திருக்கிறது. அதாவது எந்த நிறுவனத்தின் ஷெல் கம்பெனிகளின் நடவடிக்கைகள் குறித்து ஹின்டன்பர்க் குற்றப்பத்திரிகை கொடுத்திருந்ததோ, அதில் ஒரு நிறுவனத்தில் செபி தலைவரே பங்குதாரர்! போலீசும் திருடனுமே பங்காளிகள்.
ஹின்டன்பர்க் நிறுவனத்தின் இந்த அறிக்கை அதானி நிறுவனத்தின் மீது விழும் இன்னொரு சந்தேக நிழல். ஆனால் இதையும் கண்டு கொள்ளாமல் கடக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. காங்கிரஸ் மீது ஒரு சிறிய குற்றச்சாட்டு வந்தாலே குய்யோ முறையோ என்று கூச்சலிடும் பாஜக அபிமானிகள் 'ப்ரெய்னுக்கு ஒண்ணும் ஆபத்தில்லையே!' டயலாக் மாதிரி 'ஸ்டாக் மார்க்கெட் ஒண்ணும் பாதிக்கப்படலையே' என்று சாதிக்கிறார்கள். மோடி தேர்தல்களில் வென்றால் அவர் ஆட்சியின் மீதான விமர்சனங்கள் பொய் என்று வைக்கும் ஒரு மொக்கை டிஃபென்ஸ் போல ஸ்டாக் மார்க்கெட் பாதிக்கப்படவில்லை, எனவே அதானி குற்றமற்றவர் என்பது அவர்களது twisted logic.
அதானி குழுமத்தின் மீது விழும் இன்னொரு மாபெரும் சந்தேக நிழல் இந்த சமீபத்திய அறிக்கை. Crony Capitalism என்று சொல்லப்படும் கூட்டுக் களவாணி முதலாளித்துவத்தின் எவரெஸ்ட் உதாரணம் அதானி என்றே சொல்லலாம். அதுவும் மோடியும் மத்திய அரசும் இந்த அளவுக்கு விழுந்து விழுந்து அவரைக் காப்பாற்ற முனைவதைப் பார்க்கும் போது அந்த சந்தேகம் இன்னும் வலுப்பெறுகிறது. 'தால் மே குச் காலா ஹை' என்று இந்தியில் சொல்வார்கள். அதற்கு பொருத்தமான உதாரணம் மோடியின் மௌனம்.
தேர்தல் பத்திரம், ஷெல் கம்பெனிகள், அதானி கார்ப்பரேட் என்று பாஜக செய்வதெல்லாமே ஹைடெக் லெவலில்தான் இருக்கிறது. 'விஞ்ஞான ஊழல்' என்று யார் யாருக்கோ சொல்கிறார்கள். உண்மையில் பாஜகவின் இன்றைய தலைமைக்குத்தான் அந்தப் பட்டத்தை வழங்க வேண்டும் என்று முழு மனதுடன் பரிந்துரைக்கிறேன்.