டுபாக்கூர் தேசபக்த கும்பலுடன் போராடி வரும் சுப்ரீம் கோர்ட்!
.சென்ற ஆகஸ்ட் மாதம் நாடெங்கும் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசின் ஆயுஷ் துறை ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. மருந்து மற்றும் அழகு சாதனங்கள் சட்டத்தின் விதிமுறை 170 இனிமேல் செல்லாது என்று அந்த சுற்றறிக்கை குறிப்பிட்டிருந்தது. ஆயுர்வேத, சித்த, யூனானி மருந்து தயாரிப்பாளர்கள் தத்தம் மருந்துகளின் பலன்களை தங்கள் இஷ்டப்படி விளம்பரம் செய்வதை விதிமுறை 170 தடுக்கிறது. அப்படி கண்டபடி விளம்பரம் செய்தால் அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க அரசுக்கு அந்த விதி அனுமதி அளிக்கிறது. அந்த விதிதான் செல்லாது என்று அந்த சுற்றறிக்கை குறிப்பிட்டிருந்தது. அதற்குப் பின்னர்தான் பதஞ்சலி அதீதமான கூற்றுகளை சொல்லி விளம்பரங்கள் வெளியிட்டது. தங்கள் மருந்துகளை உட்கொண்டால் பிபி, சுகர் எல்லாம் குணமாகி விடும் என்று அந்த விளம்பரங்கள் சொல்லின. அவற்றின் மீதான வழக்கில்தான் இந்த சுற்றறிக்கை வெளிச்சத்துக்கு வந்தது. அந்த சுற்றறிக்கையை வாபஸ் வாங்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உடனடி ஆணை பிறப்பித்தது. மத்திய அரசும் உடனே ஆவண செய்வதாக உறுதி அளித்திருந்தது.
ஆனால் இரண்டு மாதங்கள் முன்பு மத்திய அரசு வெளியிட்ட சுற்றறிக்கையில் அந்த விதி 170ஐயே நீக்கி விட்டார்கள். அதாவது 'அந்த விதி ஏம்பா இல்லை,' என்று கேட்டால், 'அந்த விதிதானே பிரச்சினை? அதையே தூக்கி விடுகிறேன்!' என்று செய்திருக்கிறது. அதாவது உச்ச நீதிமன்ற ஆணையை மத்திய அரசு மீறி இருக்கிறது. இது நீதிமன்றத்தைக் கோபப்படுத்தி இருக்கிறது. இது குறித்த விசாரணையை முடிவுக்குக் கொண்டு வந்த சுப்ரீம் கோர்ட் பெஞ்சு ஒன்று மத்திய அரசின் சுற்றறிக்கையை தாங்களே ரத்து செய்வதாக அறிவித்தது. 'அப்படி செய்ய வேண்டாம். அரசு சார்பில் இது குறித்து ஒரு அஃபிடவிட் தாக்கல் செய்கிறோம்,' என்று அரசு வழக்கறிஞர் வேண்டிக் கொண்டதையும் நிராகரித்திருக்கிறது. 'நீதிமன்ற ஆணையை மீறி விட்டு எந்த மாதிரியான அஃபிடவிட்டை தாக்கல் செய்யப் போகிறீர்கள்?' என்று கேட்டிருக்கிறது.
நடந்தது இதுதான்:
- மருந்து தயாரிப்பாளர்கள் இஷ்டத்துக்கு விளம்பரம் செய்யலாம் என்று மத்திய அரசு விதிகளைத் தளர்த்துகிறது.
- அதற்குப் பின் 'எங்கள் மருந்து சுகர், பிபி, ஹைபர் டென்ஷன், தைராய்ட் என்று எல்லாவற்றையும் குணப்படுத்தும்,' என்று பதஞ்சலி விளம்பரங்கள் வெளியிடுகிறது.
- இந்திய மருத்துவ கவுன்சில் வழக்கு தொடுக்கிறது.
- வழக்கு விசாரணையில் மத்திய அரசின் தளர்த்தப்பட்ட விதிகளை சுட்டிக் காட்டி தப்பிக்க பதஞ்சலி முயற்சி செய்கிறது.
- நீக்கப்பட்ட விதிகளை திரும்ப சேர்க்க சொல்லி சுப்ரீம் கோர்ட் அரசுக்கு ஆணையிடுகிறது. அரசும் ஏற்றுக் கொள்கிறது.
- ஆனால் விதிகள் திரும்ப சேர்க்கப்படவில்லை.
- வெறுப்பான சுப்ரீம் கோர்ட் அரசின் தளர்த்தல் முயற்சிகளை தானே ரத்து செய்கிறது.
அதாவது ஒரு டுபாக்கூர் நிறுவனம் தயாரித்த டுபாக்கூர் மருந்துகளை, பொய் சொல்லி மக்களிடம் தள்ளி விட அந்த டுபாக்கூர் நிறுவனம் முடிவெடுக்கிறது. மத்திய அரசே சட்ட விதிகளைத் தளர்த்தி அந்த முயற்சிக்கு உதவவும் செய்கிறது. அதை வாபஸ் வாங்க சொல்லி நீதிமன்றம் பிறப்பித்த ஆணையையும் அரசு கண்டு கொள்ளாமல் கடந்து போகிறது. பாபா ராம்தேவ் லாபம் பார்ப்பதற்காக மக்கள் ஆரோக்கியம் நாசமாய்ப் போகட்டும் என்று மத்திய அரசே முடிவெடுத்து செயல்படுகிறது என்பதை இதை விடப் பட்டவர்த்தனமாக தெளிவுபடுத்த முடியாது.
பதஞ்சலியின் சிட்டுக்குருவி லேகியங்களை உட்கொண்டு சுகர் எகிறிப் போய் எத்தனை பேர் ஆஸ்பத்திரியில் படுத்துக் கொண்டார்கள், பிபி ஏறி மாரடைப்பில் எத்தனை பேர் மாண்டார்கள், கிட்னி நசித்துப் போய் டயலிஸிஸ் இயந்திரத்தில் எத்தனை பேர் அடைக்கலம் கொண்டார்கள், தைராய்ட் சுரப்பியில் குளறுபடி ஆகி எலும்பும் தோலுமாகி நின்றார்கள் என்பதற்கான தரவுகள் இல்லை. கிடைக்கவும் கிடைக்காது. ஆனால் நொடிக்கு நூறு முறை தேசபக்தி மந்திரம் உச்சாடனம் செய்யும் ஒரு கட்சி ஆளும் அரசு, ஒரு ஃப்ராடு சாமியார் நடத்தும் கார்ப்பரேட் நிறுவனம் கோடிகளைக் குவிப்பதற்காக தேச மக்கள் நாசமாய்ப் போகட்டும் என்று இயங்குவதற்கு தரவு கிடைத்திருக்கிறது. இவர்களின் தேசபக்தியும் பதஞ்சலியின் மருந்துகள் போல ஒரு டுபாக்கூர்தான் என்பதற்கும் தரவு கிடைத்திருக்கிறது.டுபாக்கூர் மருந்துகளைத் தடுத்து நிறுத்தி தேச மக்களைக் காப்பதற்காக, டுபாக்கூர் தேசபக்த கும்பலுடன் தீவிரமாகப் போராடி வரும் சுப்ரீம் கோர்ட்டுக்கு நன்றிகள்.