தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட்-டுக்கு பேர் வர காரணமானவர் கதையிது!

08:10 AM Jul 04, 2024 IST | admin
Advertisement

லகின் மிக உயரமான சிகரம் எவரெஸ்ட் என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் எவரெஸ்ட் என்பது ஜார்ஜ் எவரெஸ்ட் என்ற ஆங்கிலேய நில அளவையாளரின் பெயர் என்பதோ, இந்தியாவின் நிலப்பரப்பை துல்லியமாக அளவிடுவதற்காக முதன் முதலாக நடைபெற்ற நில அளவைப் பணியை தலைமை ஏற்று நடத்தியவர் இவர் என்பதோ பெரும்பான்மையினர் அறிந்திருப்பதில்லை. சரி...இப்போது அதெற்கென்ன என்றுதானே கேட்கிறீர்கள்.சொல்கிறேன்...இன்று(ஜுலை 4) ஜார்ஜ் எவரெஸ்டின் பிறந்தநாள் எனவே அவர் தொடர்பான செய்தியை பகிர்ந்துக்கொள்வது பொருத்தமானதுதானே...!

Advertisement

இமயமலையின் உயர்ந்த சிகரங்களில் ஒன்றான இதை நேபாளிகள் "சாகர் மாதா" என்றும் திபேத்தியர்கள் "சோமுலிங்மா" என்றும் "தேவகிரி", "தேவதுர்கா"என்று வடமொழியிலும், காலம் காலமாக அழைத்து வந்தனர். இந்தியாவில் இமயமலை கைலாயம் என்று அழைக்கப்பட்டது.

Advertisement

சரி...ஜார்ஜ் எவரெஸ்ட் என்ற பெயரை ஏன் தெரியுமோ?

ஒரு நாட்டை நயவஞ்சகமாக ஆக்கிரமித்து அங்கு வாழும் பூர்வகுடி மக்களின் நிலங்களை ஆக்ரமித்துக் கொண்டு புதிய தேசங்களை கண்டுபிடித்ததாக பெயர் சூட்டிக்கொண்டு மகிழ்வது வெள்ளைகார்களின் வழக்கம். அமெரிக்கா, மேற்கிந்திய தீவுகள் என்ற பெயர் மாற்றம் பெற்ற பல பூர்வீக நிலங்கள் வெள்ளைக்காரர்களின் அதிகார வெறியால் தங்களது சுயத்தை இழந்ததையும் பூர்வ குடிகள் அழித்து ஒழிக்கபட்டதையும் இவ்வுலகம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. இது ஆரம்பித்தது 1802 ஆம் ஆண்டில். கர்னல் வில்லியம் லாம்டன் என்ற ஆங்கிலேயர் தி கிரேட் இண்டியன் ஆர்க் எனப்படும் இந்திய நில அளவைப் பணியை மேற்கொண்டார். சென்னையின் பரங்கிமலையில் துவங்கிய இப்பணி 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றது. இப்பணி நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே பாதியில் லாம்டன் இறந்துவிட்டார். லாம்டன் விட்டுச்சென்ற பணியை எவரெஸ்ட் சிறப்பாக செய்து முடித்தார்.

ஆனால்...

எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை முதன் முதலில் துல்லியமாக அளந்தது யாரென்றுத் தெரியுமா? இராதானாத் சிக்தார் என்னும் வங்காளத்து இந்தியரே முதன் முதலாக 1852 ஆம் ஆண்டில் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8,848 மீட்டர்கள் என்று துல்லியமாக கண்டுபிடித்தார். அவர் சுமார் 240 கி.மீ தொலைவில் இருந்து கொண்டே தியோடலைட் என்னும் கருவியினால் திரிகோணமிதி முறையின் அடிப்படையில் இதன் உயரத்தைக் கணித்தார்.

அது சரி.. இந்த எவரெஸ்ட் சிகரம் இந்தியாவில் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?

அதுதான் இல்லை இது நேபாளத்திற்கும் சீனாவிற்கும் எல்லையில் உள்ளது.

இங்கிலாந்தின் இராணியாக எலிசபெத் முடிசூட்டிக்கொண்ட அன்றுதான் எவரெஸ்ட் வெற்றி கொள்ளப்பட்ட செய்தி வெளியிடப்பட்டது. உடனே ஆங்கிலேயர்கள் அதற்கு எலிசபெத்தின் பெயரைச் சூட்ட வேண்டும் என்று பிரசாரம் செய்யத் தொடங்கினார்கள். ஆனால், எவரெஸ்டின் தென் பாதிக்கு உரிமையாளரான நேபாளமும் வடபாதிக்கு உரிமையாளரான சீனாவும் அதைக் கண்டு கொள்ளவேயில்லை.இச்சிகரத்தை முறைப்படி அளவிடும் முன் இதனை கொடுமுடி-15 என்று மட்டும்தான் குறித்து வைத்திருந்தார்கள். பின்னர் நில அளவை அணியின் தலைவராக இருந்த ஜார்ஜ் எவரெஸ்ட் (George Everest) என்பவரின் பெயரை இக்கொடுமுடிக்கு ஆங்கிலேயர் ஆண்ட்ரூ வாடஹ்(Andrew Waugh) என்பவர் சூட்டினார்.உலகின் உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டும் அப்படி பெயர் மாற்றம் பெற்று தனது இயற்பெயரை மறந்து ஒரு ஆங்கிலேய அதிகாரியின் பெயரைத் தாங்கிப் பரிதாபமாக நிற்கிறது.

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
British surveyorgeographerGeorge EverestMount EverestNepalSurveyor General of Indiaஇமயமலைஎவரெஸ்ட்
Advertisement
Next Article