தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

சோசலிச ரஷ்யாவின் புதல்வனும் தந்தையும், கொடுங்கோலனுமான – தோழர் ஸ்டாலின்!

06:57 AM Dec 21, 2023 IST | admin
Advertisement

தோழர் ஸ்டாலின்,

Advertisement

அவர் உலக முதலாளித்துவத்தின் சிம்ம சொப்பனம்.

உலக பாட்டாளி வர்க்கத்தின் உற்ற தோழன்.

Advertisement

ரஷ்யாவில் உழைக்கும் மக்களை அழுத்தி கொண்டிருந்த ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்துப் போராடிய ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் தளகர்த்தர் தோழர் ஸ்டாலின்.அப்போராட்டத்தில் சிறை சென்றார். நாடு கடத்தப்பட்டார். பல்லாண்டுகள் தலைமறைவாக வாழ்ந்தார். தன்னுடைய வாழ்க்கையை நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் அர்ப்பணித்த மாபெரும் புரட்சியாளர் தோழர் ஸ்டாலின்.

உழைப்பவர்களுக்கே அரசியல் அதிகாரம் என்று சுரண்டும் வர்க்கங்களுக்கெதிராக போர்க் குரலெழுப்பிய மார்க்சிய லெனினியத்தை உறுதியாக பற்றி நின்று நடைபோட்ட கம்யூனிச போராளி தோழர் ஸ்டாலின்.

சுரண்டும் வர்க்கங்களுக்கும் சுரண்டப்படும் வர்க்கங்களுக்கும் பொதுவாய் ஒரு அரசு இருக்க முடியாது. சுரண்டலை ஒழிக்க, இருக்கும் அரசை தூக்கியெரிந்து, உழைக்கும் மக்களின் அரசை நிறுவ வேண்டும் என்று மார்க்சிய லெனினிய அரசியலை உயர்த்தி பிடித்த போல்ஷ்விக் தோழர் ஸ்டாலின்.

சிறுபான்மை முதலாளிகள் பெரும்பான்மையான உழைக்கும் மக்களை அடக்கி ஒடுக்கும் முதலாளித்துவ ஜனநாயகம் கூறும் பொதுவான அரசு என்பது முதலாளித்துவ சர்வாதிகாரமே!பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் அரசியல் அதிகாரத்தின் கீழ் முதலாளித்துவ சுரண்டலுக்கு முடிவுகட்டும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமே ஜனநாயகம் என்று நிலை நாட்டிய மாபெரும் ஜனநாயகவாதி தோழர் ஸ்டாலின்.

1878 ஆம் ஆண்டு முதல் 1953 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த ஜோசப் ஸ்டாலின் சோவியத் யூனியன் அரசியல் தலைவர். பின்தங்கிய நாட்டை தொழில்துறை மற்றும் இராணுவத்தில் வல்லரசாக மாற்றியவர். 1920களின் மத்தியிலிருந்து 1953ல் இறக்கும்வரையிலான காலகட்டத்தில் சோவியத் யூனியனின் சர்வாதிகாரியாக இருந்தார். இவருடைய பொருளாதார திட்டங்களால் ரஷ்யாவில் பெரும் தொழில்புரட்சி ஏற்பட்டது என்றும், அதேசமயம் பாதகமான விளைவுகளையும் உண்டாக்கியது என்றும் கூறப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான மற்றும் செல்வாக்குமிக்க நபர்களில் ஒருவராகவும், இருபது மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டதற்கு காரணமான கொடூரமான தலைவராகவும் அறியப்படுகிறார்.

ஆம்.. 'அவனின்றி ஓர் அணுவும் அசையாது' என்பதுபோல ஸ்டாலினுக்குத் தெரியாமல் ஓர் எறும்புகூட ஊர்ந்து போக முடியாத அளவுக்கு சோவியத் ராஜ்ஜியம் ஸ்டாலினின் இரும்புக்கரங்களால் கட்டுப்படுத்தப்பட்டது. ஸ்டாலினின் ரகசியப் படை சோவியத் ஒன்றியத்தின் தூணிலும் இருந்தது, துரும்பிலும் இருந்தது. Czar மன்னர்களின் குழப்பமான முடியாட்சியைத் தொடர்ந்து, முதல் உலகப்போரில் கடும் அடி வாங்கிய ரஷ்யா, ஸ்டாலின் எனும் ஒற்றை மனிதனால் மெல்ல மெல்ல துளிர்த்தெழுந்தது.கிட்டத்தட்ட இன்றைய ஐரோப்பிய ஒன்றியத்தைப் போன்ற பெரும் அமைப்பாக இருந்த அன்றைய சோவியத் ஒன்றியத்தை, ஒன் மேன் ஆர்மியாகக் கட்டியெழுப்பிய ஸ்டாலின் எனும் இரும்பு மனிதனை, இன்றும் பெரும்பாலான ரஷ்யர்கள் Uncle Joe-வாகவே பார்க்கிறார்கள். 1930கள் மற்றும் 40களில் அவர் எழுதிய ரஷ்ய வரலாறு, உலகம் சுழலும் வரை அழிக்கமுடியாத அசாத்திய சரித்திரம். கார்ல் மார்க்ஸ் போட்ட விதை, லெனினால் நீரூற்றப்பட்டு, ஸ்டாலினால் உரமிடப்பட்டு, சோவியத் ஒன்றியம் எனும் ஆல விருட்சமாக அன்று கிளை பரப்பியது. அதன் விளைவாகவே இன்றும் அமெரிக்கா போன்ற பெரும் வல்லரசுகளுக்கே சவால் விடும் நிலைக்கு ரஷ்யா வளர்ந்து நிற்கிறது

சர்ச்சைக்குரிய பல நிகழ்வுகளும் ஸ்டாலின் காலத்தில் நடந்தன. விவசாயத்தில் கொண்டுவரப்பட்ட கூட்டுமயமாக்கல் திட்டம் கிராமப்புறங்களில் கணிசமான எதிர்ப்பைச் சந்தித்தது. குறிப்பாக உக்ரைன் இதில் கடுமையாக பாதிக்கப்பட்டது. 1929-ம் ஆண்டில் ஜோசப் ஸ்டாலினின் 'The Year of the Great Break' என்ற நூல் பிரசுரமானது. அப்போது சோவியத் ரஷ்யாவில் விவசாய கூட்டுமயமாக்கல் ஒரு பெரிய அளவிலான செயல்முறையாக மாறியது. 'Kulaks' என்று அழைக்கப்பட்ட வசதி படைத்த விவசாயிகளின் வர்க்கத்தை கலைக்க வேண்டும் என்று எண்ணிய ஸ்டாலின், Kolkhozes எனும் திட்டத்தை அறிமுகம் செய்தார். பணக்கார வர்க்கத்திடமிருந்து நிலங்களைப் பிடுங்கி, அவற்றைப் பலருக்கும் பகிர்ந்தளிப்பதன் மூலம் வேளாண்மை புரட்சியை உண்டு பண்ணலாம் என எண்ணினார். இது சோஷலிச சித்தாந்தத்தில் ஒரு மைல்கல்லாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால், யானைக்கும் அடி சறுக்கியது.

ரஷ்ய விவசாயிகளின் பழைய மரபுகள் அடித்து நொறுக்கப்பட்டன. மில்லியன் கணக்கான குலாக்கள் தங்கள் பண்ணைகளை இழந்து, பெரிய கூட்டுப் பண்ணைகளில் உழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த சட்டங்களை எதிர்த்தவர்கள் ஒன்று சுடப்பட்டனர்; அல்லது சைபீரியாவில் உள்ள கட்டாய தொழிலாளர் முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். அங்கு பட்டினியிலும் உறைபனியிலும் அவதிப்பட்டு பலர் இறந்தனர்.

கூட்டு விவசாயத் திட்டமும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. சோவியத் யூனியன் முழுவதும் உற்பத்தி சரிந்து பஞ்சம் வெடித்து 10 மில்லியன் மக்களைக் கொன்றது. 1933 காலப்பகுதியில் ரஷ்யாவை உலுக்கிய பஞ்சத்தில் மக்கள் அடுத்தவர்களை அடித்து உண்ணும் அவலத்துக்கு ஆளாகினர். வரலாற்றிலேயே மனிதனால் உருவாக்கப்பட்ட மிகக்கொடிய பஞ்சமாக இது குறிப்பிடப்படுகிறது.

இப்பேர்ப்பட்ட ஸ்டாலின் பிறந்த தினமின்று

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Georgian-born RussianJoseph StalinpoliticianrevolutionarySoviet Union of RussiaStalinStalinism.
Advertisement
Next Article