தங்கப் பத்திரம் விற்பனை நடக்குது... நீங்க வாங்கலையா?
நம் நாட்டில் வாங்கப்படும் தங்கத்தில் பெரும்பகுதி ஆபரணங்களாக அணிந்துகொள்வது என்ற நோக்கத்தில் வாங்கப்படுகிறது. இந்த நோக்கத்திற்காக வாங்குபவர்கள் தாங்கள் விரும்பிய கடைகளில் தங்கத்தை வாங்கிக் கொள்ளலாம். பெரும்பாலும் செய்கூலி, சேதாரம் போன்றவை சற்றுக் குறைவாக இருக்கும் இடங்களைத் தேர்வுசெய்து, 916 முத்திரை பதிக்கப்பட்ட தங்க நகைகளை வாங்கிக்கொள்ளலாம். ஆனால், ஆபரணமாக வாங்கும்போது 3 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும். அதேபோல, செய்கூலி, சேதாரம் என்ற பெயரில் 10 - 15 சதவீதம் வரை கூடுதல் பணத்தை நகைகளுக்குச் செலுத்த வேண்டியிருக்கும். ஆபரணமாக வாங்குவதில் உள்ள சாதகமான அம்சம், இவற்றை அணிந்து மகிழ முடியும் என்பதோடு, அவசரச் செலவுகளுக்கு இந்த நகைகளை அடகுவைத்து பணத்தைப் பெற முடியும். ஆனால், முதலீட்டு நோக்கில் பார்த்தால் குறுகிய காலத்தில் இது லாபகரமாக இருக்காது. வாங்கும்போதே 13- 15 சதவீதம் வரை அதிக விலைக்கு வாங்குவதால், அதனைவிட விலை அதிகரிக்கும்போதுதான் லாபகரமாக இருக்கும். தவிர, நகைகளைப் பாதுகாத்து வைப்பதும் ஒரு சிக்கலான விஷயம். மேலும் தங்கக் காசுகளாகவோ, கட்டிகளாகவோ வாங்குவது வெறும் முதலீட்டு வாய்ப்புதான். கடைகளில் இதனை வாங்கும்போது இதற்கும் 3 சதவீதம் ஜிஎஸ்டி உண்டு. ஆனால், நகைகளோடு ஒப்பிட்டால் மிகக் குறைந்த அளவில் செய்கூலி - சேதாரம் விதிக்கப்படுகிறது. அவசர பணத் தேவைக்கு இவற்றையும் அடகு வைக்க முடியும். மிகக் குறைந்த அளவில் இவற்றை வாங்கிச் சேமிக்க முடியும் என்பது மற்றொரு சாதகமான அம்சம்.
ஆனால் SGB((Sovereign gold bond) எனப்படும் தங்கப் பத்திரங்களை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலையை வைத்து இந்தப் பத்திரங்களின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. முதலீட்டு நோக்கில் தங்கம் வாங்க விரும்புபவர்களுக்கு இது ஒரு வாய்ப்பு.அரசின் இந்த திட்டத்தின் கீழ், சந்தையை விட குறைந்த விலையில் தங்கத்தில் முதலீடு செய்யலாம். இது அரசு நடத்தும் திட்டம். இதில் முதலீடு செய்யப்படும் பணத்தின் பாதுகாப்புக்கு இந்திய அரசு உத்தரவாதம் அளிக்கிறது. இந்த பத்திர திட்டத்தை இந்திய ரிசர்வ் வங்கி நடத்துகிறது. இதை எந்த வங்கியிலும் வாங்கலாம். நெட் பேங்கிங் மூலமாகவும் வாங்கலாம்.இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி, நீங்கள் தங்கப் பத்திரத்தில் முதலீடு செய்யப் போகிறீர்கள் என்றால், குறைந்தபட்சம் ஒரு கிராம் தங்கத்தையாவது வாங்க வேண்டும். அதாவது, ஒரு தனி நபர் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சமாக 4 கிலோ வரை தங்கம் வாங்கலாம். இதே அறக்கட்டளைகள் மற்றும் பிற நிறுவனங்கள் 20 கிலோ வரை தங்கம் வாங்கிக் கொள்ள முடியும்.
அந்த வகையில் இந்திய ரிசர்வ் வங்கி 2023-2024 நிதியாண்டிற்கான மூன்றாவது தவணை இறையாண்மை தங்கப் பத்திர (Sovereign gold bond-SGB) விற்பனை தொடங்கியது. வரும் டிசம்பர் 22ம் தேதி இந்த விற்பனைக்கான கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 999 தூய்மையான தங்கத்திற்கான இறுதி விலை ரூ.6,199 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் இதில் முதலீடு செய்தால், 50 ரூபாய் தள்ளுபடியும் கிடைக்கும் என்பது சிறப்பு. இந்த தங்க பத்திரம் வாங்கினால் செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை. மேலும் இதற்கு ஜிஎஸ்டி வரியும் இல்லை. இத்தனை சிறப்பம்சங்கள் இருக்கும் தூய தங்கத்தை வாங்க மிஸ் பண்ண வேண்டாம் என்று பல முதலீட்டு ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆன்லைனில் வாங்க முடியாதவர்கள் அருகில் உள்ள போஸ்ட் ஆபீஸ்களிலும் தங்க பத்திரத்தை வாங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிடும் இந்த தங்கப் பத்திரத்திற்கு ஆண்டுக்கு 2.5 சதவீதம் வட்டி வழங்கப்படும். இதனை 6 மாதத்துக்கு ஒருமுறை பெற்றுக் கொள்ளலாம். அதாவது தங்கப் பத்திரத் திட்டத்தின் மொத்த முதிர்வு காலம் 8 ஆண்டுகள். 5வது வருடத்தில் நீங்கள் அதனை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டத்தின் கீழ், முதலீட்டாளர்களுக்கு 2.50 சதவீத வட்டி கிடைக்கும். வட்டி உங்கள் வருமானமாக சேர்க்கப்பட்டு, அதற்கு நீங்கள் வருமான வரியும் செலுத்த வேண்டியிருக்கும். எனினும் வட்டி வருவாயில் டிடிஎஸ் விதிக்கப்படுவதில்லை.
மேலும் முதிர்வு தொகை 24 கேரட் தங்கத்துக்கு ஈடாக அப்போதைய தங்கத்தின் மதிப்புக்கு பெற்றுக் கொள்ள முடியும். இந்தத் திட்டத்தின் கீழ் ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட், தபால் நிலையங்கள், அங்கீகரிக்கப்பட்ட பங்குச் சந்தைகள், என்எஸ்இ மற்றும் பிஎஸ்இ ஆகியவற்றில் தங்கப் பத்திரங்களை வாங்க முடியும்.
அதிலும் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுவதால், இந்த பத்திரங்களை டீமேட் கணக்கு மூலம் எப்போது வேண்டுமானாலும் விற்கலாம். மேலும், இந்தத் தங்கக் கடன் பத்திரங்களை முதிர்வு காலத்திற்கு முன்பாக அவசரப் பணத் தேவைகளின் போது சாதாரணத் தங்கம் போல அடமானமும் வைத்துக்கொள்ள முடியும். இத்திட்டத்தில், முதலீட்டுக் காலம் முடிந்ததும் தங்கமாக வழங்கப்படாது. மாறாக, பணமாகவே வழங்கப்படும். அந்த பணத்தை பயன்படுத்தி தேவையான நகையை வாங்கிக் கொள்ளலாம்.பொதுவாக, நம் சேமிப்பைக் கொண்டு தங்க நகை வாங்கும் போது செய்கூலி, சேதாரம் ஆகியவை வசூலிக்கப்படும். ஆனால், தங்கப் பத்திரமாக வாங்குவதால், இதுபோன்ற இழப்புகள் தவிர்க்கப்படுகின்றன. நகை வடிவில் இல்லாமல், பத்திரம் வடிவில் இருப்பதால் திருடு போகும் அபாயம் இல்லை. இதை பாதுகாக்க லாக்கர் செலவும் கிடையாது என்பதுதான் ஹைலைட்.