மாலத்தீவு நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அடிதடி,சண்டை;- ஏன்?
மாலத்தீவின் எதிர்க் கட்சிகளும் கடந்த காலங்களில் பேசுபொருளாக இருந்தன. தற்போது மாலத்தீவில் எதிர்க்கட்சிகளில் இருக்கும் பெரும்பாலான தலைவர்கள் இந்தியாவின் ஆதரவாளர்களாகவே கருதப்படுகிறார்கள்.அதிபர் முய்ஸு இந்தியாவுக்கு எதிரானவராகவும், சீன ஆதரவாளராகவும் கருதப்படுகிறார்.சில நாட்களுக்கு முன்பு, முய்சு அரசாங்கத்தின் இந்தியாவுக்கு எதிரான அணுகுமுறை குறித்து மாலத்தீவின் ஜனநாயக கட்சி கவலை தெரிவித்திருந்தது. மாலத்தீவு அரசாங்கம் ஒரு சீனக் கப்பலை மாலே துறைமுகத்தில் நிறுத்திக் கொள்ள அனுமதித்திருந்தது. மாலத்தீவு ஜனநாயக கட்சியினர் இதை எதிர்த்தனர், தங்கள் நீண்டகால நட்பு நாடான இந்தியாவை தனிமைப்படுத்துவது சரியல்ல என்று கூறினர். இந்த சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்பு, முகமது முய்சு சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். சீனாவிலிருந்து திரும்பியதும், முகமது முய்சு இந்தியாவின் பெயரைக் குறிப்பிடாமல் , "எங்கள் நாடு சிறியதாக இருக்கலாம், ஆனால் அவர்கள் எங்களை துன்புறுத்த உரிமம் பெற்றுள்ளனர் என்று அர்த்தமல்ல." என்று கூறினார். இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கு இடையேயான ராஜதந்திர உறவுகள் சீர்குலைந்து வரும் நேரத்தில் அவரது அறிக்கை வந்துள்ளது. சில நாட்களுக்குப் பிறகு, மார்ச் 15 ஆம் தேதிக்குள் இந்திய வீரர்கள் நாட்டை விட்டு வெளியேற மாலத்தீவு காலக்கெடு விதித்தது.
ஜனவரி 2024-ல், மாலத்தீவு அரசின் அமைச்சர்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்தபோது, மாலத்தீவின் எதிர்க்கட்சிகள் அதை எதிர்த்தன.முய்சு அரசாங்கம் கருத்து தெரிவித்த அமைச்சர்கள் மற்றும் தலைவர்களை இடைநீக்கம் செய்தது. அமைச்சர்களை இடைநீக்கம் செய்தது மட்டும் போதாது என்றும், இந்த விவகாரத்தில் இந்தியாவிடம் மாலத்தீவு அரசு அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. மாலத்தீவின் முன்னாள் அதிபர்கள் முகமது நஷீத், இப்ராஹிம் முகமது சோலிஹ் மற்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித் ஆகியோரும் அமைச்சரின் அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இச்சூழலில் நேற்று மாலத்தீவு நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. முகமது முய்சுவின் அமைச்சரவையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 4 அமைச்சர்களுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறும் நோக்கத்தில் இந்த சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டது. அந்நாட்டின் அதிபர் முகமது முய்சுவின் அமைச்சரவையில் புதிதாக 4 அமைச்சர்களை நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்க எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நாடாளுமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டு, வாக்கெடுப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரியது. இதனால், ஆளும் கட்சி எம்.பி.களுக்கும், எதிர்க்கட்சி எம்.பி.களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
தொடர்ந்து மாலத்தீவு ஜனநாயகக் கட்சியின் (எம்.டி.பி) எம்.பி இசா மற்றும் ஆளும் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சியின் எம்.பி அப்துல்லா ஷஹீம், அப்துல் ஹக்கீம் ஆகியோருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், நான்கு எம்.பி.க்கள் சேர்ந்து, ஒரு எம்.பி.யின் காலை பிடித்து கொண்டு சண்டையிட்டு கொள்கின்றனர்.
மோதலை தடுக்க வந்தவர்களையும் அவர்கள் தாக்குவது போன்று வீடியோவில் பதிவாகி உள்ளது. மேலும், மற்றொரு வீடியோவில், சபாநாயகர் அமர்ந்திருக்கும் இடத்திற்கு சென்று மைக்குகளை பிடுங்கி ஏறிந்திருக்கின்றனர். மேலும், இரண்டு பேர் சபாநாயகர் பக்கத்தில் நின்று விளையாட்டு பொருளை கையில் எடுத்து ஊதுகின்றனர். அந்த சத்தம் தாங்க முடியாமல் சபாநாயகரும் காதை மூடும் காட்சிகளும் பதிவாகி உள்ளன. மாலத்தீவு நாடாளுமன்றத்திற்குள் எம்பிக்கள் அடித்துக் கொண்ட காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.