இலங்கை அதிபர் தேர்தலில் மீண்டும் ராஜபக்சே குடும்பத்தினர்!
இலங்கையின் அதிபருக்கான தேர்தல் நடக்கவிருக்கிறது. இது குறித்த அறிவிப்பை இலங்கையின் தேர்தல் ஆணையம் வெளியிட்டு இருக்கிறது. அந்த வகையில், செப்டம்பர் 17 தொடங்கி அக்டோபர் 16 வரை ஒரு மாத காலத்திற்கு இலங்கையின் அதிபர் தேர்தல் நடக்கும் என அறிவிக்கபட்டு இருக்கும் சூழலில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், அரசியலைவிட்டு விலகியிருந்த ராஜபக்சே குடும்பத்தினர் அதிபர் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர்.
இலங்கையில் கடந்த 2022-ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அப்போது அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர் பதவி விலகினார். எதிா்க்கட்சியை சேர்ந்த ரணில் விக்ரமசிங்க அதிபராக பதவி ஏற்றார். அதனுடன் நிதி அமைச்சராக இருந்த பசில் ராஜபட்சவும் பதவி விலகினார்.
இந்த நிலையில், தலாவா என்ற கிராமத்தில் ராஜபக்சக்களின் கட்சியான இலங்கை பொதுஜன பெரமுனா (எஸ்எல்பிபி) கட்சி நேற்று பேரணி நடத்தியது. இது தொடர்பாக அக் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேனா பேசுகையில், ‘இலங்கையில் அடுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் அதிபர் தோ்தலை முன்னிட்டு கட்சியை பலப்படுத்தும் பணிகளை இந்தப் பேரணி மூலம் தொடங்கி உள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.
ராஜபக்சே ஆட்சியாளர்களின் வருகை மக்கள் மத்தியில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இருபினும், தேர்தல் களத்தில் அவர்களுக்கான ஆதரவு இருக்குமா இருக்காதா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகவே இருக்கிறது.