ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் பாலத்தின் தரம் குறைவு!
பழைய பாம்பன் ரயில்வே பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட புதிய பாலம் தரம் குறைவாக உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. மண்டபம் மற்றும் பாம்பன் பகுதிகளை இணைக்கும் வகையில் 1914ல் கட்டப்பட்ட தூக்குப்பாலம் பழுதடைந்தால், அதற்கு மாற்றாக ராமேசுவரம் புதிய பாம்பன் ரயில் பாலம் கட்டும் பணி 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய ரயில் பாலம் 2,078 மீட்டர் நீளம், கடல் மட்டத்திலிருந்து 6 மீட்டர் உயரம், 333 கான்கிரீட் அடித்தளங்கள், 101 தூண்கள், 99 இணைப்புகளைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது.
இந்த ரயில் பாலத்தின் பாதுகாப்பு குறித்து தென்மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சௌதரி 13, 14 ஆகிய தேதிகளில் ஆய்வு மேற்கொண்டார் அப்போது புதிய பாலத்த்தில் டிராலிகள் மற்றும் ரயில் என்ஜின் சோதனை மற்றும் அதிவேக ரயில் இயக்க சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வு குறித்த அறிக்கையை ஆணையர் வெளியிட்டார்.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:.
பாம்பன்-மண்டபம் இடையே கடந்த நவ.14-ஆம் தேதி 80 கி.மீ. வேகத்தில் ரயில் இயக்கி சோதனை செய்யப்பட்டது. இதில் சில தொழில்நுட்பக் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றைச் சரிசெய்ய வேண்டும். குறிப்பாக, கப்பல் வரும்போது மேல் நோக்கி தூக்கும் தண்டவாளப் பகுதியின் பளு தாங்கும் திறன் மற்றும் அதன் இயக்குமுறை அம்சம் வெளிநாட்டு தொழில்நுட்பம் சார்ந்தது என்பதால் அதுகுறித்து ரயில்வே வாரியம் முறையான கண்காணிப்புகளை மேற்கொள்ள வேண்டும்.
பாலம் அமைந்துள்ள கடல்பகுதியில் இரும்பு பாகங்கள் துருப்பிடிக்கும் தன்மை அதிகம் என்பதால், அவ்வாறு துருப்பிடிக்காமல் இருப்பதற்கான ஏற்பாடுகளை ரயில்வே கோட்ட அதிகாரிகள் செய்ய வேண்டும்.. இருந்தபோதிலும், பாலத்தின் உறுதித்தன்மைக்கு ஏற்ப சரக்கு மற்றும் பயணிகள் ரயிலை அதிகபட்சம் 75 கி.மீ. வேகத்தில் இயக்க அனுமதிக்கலாம். தண்டவாளத்தின் இணைப்பு, சிக்னல் அனைத்தும் சரியாக உள்ளன. மதுரை-ராமேசுவரம் இடையே அனைத்து வகை ரயில்களையும் இயக்க அனுமதிக்கப்படும். பாலத்தை இயக்கும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட்ட பின் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் அதில் இடம்பெற்றுள்ளன.