For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

உலகக் கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக டைம்டு அவுட் ஆன வீரர்!

09:02 AM Nov 07, 2023 IST | admin
உலகக் கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக டைம்டு அவுட் ஆன வீரர்
Advertisement

கிரிக்கெட் என்பது ஏகப்பட்ட கடுமையான விதிகள் இருந்தாலும், இது ஒரு ஜென்டில்மேன் விளையாட்டு என்றே கருதுவதால் பெரும்பாலும் கிரிக்கெட் விளையாடும் இரண்டு அணி வீரர்களுமே ஜென்டில்மேனாக ஆடவே விரும்புவார்கள். இந்த கிரிக்கெட்டில் ஆக்ரோஷம், வீரர்களிடையேயான மோதல்கள் சமீபகாலமாக அதிகரித்து காணப்பட்டாலும் விளையாடுவது விதிப்படியே விளையாடி வருகிறார்கள். மன்கட் முறையில் அவுட்டாக்குவது போன்ற பேட்ஸ்மேனை அவுட்டாக்குவது போன்ற முறைகள் விதிகளுக்குட்பட்டது என்றாலும், அறத்திற்கு அப்பாற்பட்டது என்று கருதி பீல்டிங் செய்யும் அணிகள் அதைச் செய்வதில்லை. இச்சூழலில் நேற்று வங்கதேசத்துக்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இலங்கையின் ஏஞ்சலோ மேத்யூஸ் 'டைம்டு அவுட்' முறையில் ஆட்டமிழந்து பெரும் ஹாட் டாபிக்கை கிளப்பி விட்டார்..கிட்டத்தட்ட 140 ஆண்டுகளுக்கும் அதிகமாகி விட்ட உலக கிரிக்கெட் வரலாற்றில் 'டைம்டு அவுட்' முறையில் ஆட்டமிழந்த முதல் வீரர் என்ற பேர் பெற்று விட்டார் ஏஞ்சலோ மேத்யூஸ். இந்த விதத்தில் இது ஒரு எதிர்மறை உலக சாதனை.

Advertisement

அதாவது டெல்லியில் நடைபெற்று வரும் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியின் முதல் இன்னிங்ஸில், தாமதமாக பேட்டிங் செய்ய வந்ததால் 146 ஆண்டு சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக 'Timed Out' ஆனார் இலங்கை வீரர் மேத்யூஸ். இவர் தவறான ஹெல்மெட்டை எடுத்து வந்ததால், சரியான ஹெல்மெட்டை இன்னொரு வீரர் எடுத்து வருவதற்குள் 2 நிமிடத்திற்கு மேல் ஆனது. அதற்குள் வங்கதேச அணி வீரர்கள் நடுவரிடம் அப்பீல் செய்ய, விதிப்படி நடுவரும் அவுட் கொடுத்தார். நீண்ட நேரம் நடுவரிடம் வாதம் செய்தபோதும் 'அவுட்' முடிவில் இருந்து நடுவர் பின் வாங்கவில்லை. ஒரு விக்கெட் விழுந்ததும், 120 நொடிகளுக்குள் அடுத்த வீரர் களமிறங்கி பேட்டிங்கை தொடங்க வேண்டும் என்பது ஐசிசி விதி என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் கிரிக்கெட் வரலாற்றிலே ஒரு வீரர் டைம் அவுட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறுவதும், உலகக் கோப்பை வரலாற்றில் டைம் அவுட் முறையில் ஒரு வீரர் அவுட்டாகி வெளியேறுவதும் இதுவே முதன்முறை ஆகும். மேத்யூஸ் எதிரணி கேப்டனிடம் விளக்கம் அளித்தும், அதை ஷகிப் அல் ஹசன் ஏற்க மறுத்த வீடியோவையும் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். ஷகிப் அல் ஹசனையும், வங்கதேச அணி வீரர்களையும் விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.. 225 ஒருநாள் போட்டிகள், 106 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள மேத்யூஸ் தன் கிரிக்கெட் வாழ்வில் முதன்முறையாக இவ்வாறு ஆட்டமிழந்து விரக்தியுடன் வெளியேறியது ரசிகர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். மேத்யூஸ் இதுவரை 225 ஒருநாள் போட்டிகளில் ஆடி 3 சதங்கள், 40 அரைசதங்கள், 122 விக்கெட்டுகளையும், 5 ஆயிரத்து 900 ரன்களையும் எடுத்துள்ளார்..

Advertisement

இச்சூழலில் அது குறித்து வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் கொடுத்த விளக்கத்தில் “அப்போது நடுவரிடம் முறையிட்டால் மேத்யூஸ் வெளியேற வேண்டும் என எங்கள் அணியின் ஃபீல்டர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார். தொடர்ந்து நான் நடுவரிடம் முறையிட்டேன். அதில் நான் உறுதியாக இருக்கிறேனா அல்லது திரும்ப பெறுவேனா என என்னிடம் நடுவர்கள் கேட்டார்கள். இந்த வகை அவுட் கிரிக்கெட் விதிகளில் உள்ளது. அது சரியா, தவறா என்று எல்லாம் எனக்கு தெரியவில்லை. அணியின் வெற்றிக்காக நான் அந்த முடிவை எடுக்க வேண்டி இருந்தது. இது குறித்த விவாதங்கள் இருக்கும். ஆனால், அது விதிகளில் உள்ளது. அதனால் அந்த வாய்ப்பினை பயன்படுத்துவதில் எனக்கு கவலையில்லை” என தெரிவித்தார்.

ஆக கிரிக்கெட் வரலாற்றில் புது கரும்புள்ளி தோன்றி விட்டதென்னவோ நிஜம்

Tags :
Advertisement