உளவு பார்த்ததாக மும்பை போலீஸாரிடம் பிடிப்பட்ட புறா எட்டு மாதங்களுக்கு பின்னர் விடுவிப்பு!
தைவானில் திறந்தவெளி நீர் போட்டியில் பங்கேற்கும் புறா ஒன்று இரண்டு கால்களிலும் செம்பு மற்றும் அலுமினிய மோதிரத்துடன் கண்டறியப்பட்டு மும்பை போலீசாரிடம் பிடிப்பட்டு கூண்டில் 8 மாதங்கள் அடைக்கப்பட்ட நிலையில் அந்த புறா நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டது.
அண்டை தேசங்கள் மத்தியில் உளவு பார்ப்பதற்கு என செயற்கைக்கோள்கள், ட்ரோன்கள் வந்துவிட்டன. இந்த உளவு சாதனங்களை ஒருங்கிணைக்கும் செயற்கை நுண்ணறிவு மூலம் அபரிமிதமான உளவுத் தகவல்களை பெற முடியும். இந்த நவீன அறிவியல் முன்னேற்றங்கள் இல்லாத காலத்தில் தகவல் தொடர்புக்கும், அதன் வழியே உளவு தகவல்களை பரிமாறிக் கொள்ளவும் பறவைகளை, குறிப்பாக புறாக்களை நாடுகள் பயன்படுத்தி உள்ளன.
எட்டு மாதங்களுக்கு முன்னர் அப்படியான சந்தேகத்தின் பெயரில், புறா ஒன்றினை மும்பை போலீஸார் கைது செய்தனர். செம்பூரில் உள்ள ஆர்சிஎஃப் எனப்படும் ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அன்ட் ஃபெர்டிலைசர்ஸ் காவல் நிலைய போலீஸாருக்கு, சந்தேகத்துக்கு இடமான புறா ஒன்று குறித்து தகவல் வந்தது. இதனையடுத்து அந்த புறாவை தங்கள் கஸ்டடியில் எடுத்து, ஆராய்ந்த போலீஸார் ஆச்சரியமடைந்தனர். . புறாவின் காலில் இரண்டு மோதிரங்கள் கட்டப்பட்டிருந்ததாகவும், அதில் ஒன்று செம்பு மற்றும் மற்றொன்று அலுமினியம் என்றும் போலீசார் தெரிவித்தனர். அதன் இரு இறக்கைகளுக்கும் கீழே, சீன மொழியைப் போன்ற ஸ்கிரிப்ட்டில் செய்திகள் எழுதப்பட்டிருந்ததாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் தெரிவித்தனர்.
இதனையடுத்து புறா கால் வளையங்கள் தடயவியல் சோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. சந்தேகத்துக்குரிய புறாவும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. புறா மீதான ஐயங்கள் அடிப்படையில் போலீஸாரின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை.கடந்தாண்டு மே 17 அன்று இவ்வாறு பிடிபட்ட புறா, காவல்துறையினர் பொறுப்பில் பரேலில் உள்ள பாய் சகர்பாய் டின்ஷா பெட்டிட் என்ற விலங்குகளுக்கான மருத்துவமனையில் சிறை வைக்கப்பட்டது. மாதங்கள் கழிந்த பிறகும் சந்தேகத்துக்குரிய புறா குறித்து எந்த முடிவுக்கும் வர முடியாது போலீஸார் விசாரணையில் குழப்பமே மிஞ்சி இருந்தது. இதனிடையே உரிய காரணமின்றி போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவிக்கும் அப்பாவி புறா குறித்த தகவல் விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் ஊடகங்களுக்கு தெரிய வந்தது. அவர்கள் தரப்பில் இணையத்தில் தேடியதில், மும்பை போலீஸாரால் சிறை வைக்கப்பட்டிருக்கும் புறாவின் பின்புலம் தெரிய வந்தது.
தைவான் தேசத்தில் பந்தயப் புறாவாக வளர்க்கப்பட்ட புறாக்களில் ஒன்று திசை மாறி, நாடுகளின் எல்லை தாண்டி மும்பையில் சிக்கியது தெரியவந்தது. இதன் அடிப்படையில் சிறைவாசமிருக்கும் புறாவை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன. இதன் ஒரு பகுதியாக இங்குள்ள பரேல் பகுதியில் உள்ள விலங்குகளுக்கான பாய் சகர்பாய் டின்ஷா பெட்டிட் மருத்துவமனை, புறாவை விடுவிக்க போலீசாரிடம் அனுமதி கோரியதாக ஆர்சிஎஃப் காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் அனுமதி அளித்த நிலையில் புறா விடுவிக்கப்பட்டது.முன்னதாக அந்த புறா முழு உடல் ஆரோக்கியத்துடன் உள்ளதா, நீண்ட தூரம் பறப்பதற்கான உடல் தகுதி இருக்கிறதா என்பதற்கான மருத்துவ சோதனையும் மேற்கொள்ளப்பட்டதாம்.