தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த கட்சியானது விஜய்யின் த. வெ. கழகம்!
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த பிப்ரவரி 2-ம் தேதி தொடங்கினார். இந்திய தேர்தல் ஆணையத்திலும் தனது கட்சியை பதிவு செய்ய அவர் விண்ணப்பித்திருந்தார். தொடர்ந்து, கட்சியின் கொடி மற்றும் பாடலை கடந்த மாதம் 22-ம் தேதி விஜய் வெளியிட்டார். இதனிடையே கட்சியின் முதல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்துவதற்கான பணிகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், நடிகர் விஜய்யின் மாநாட்டுக்கு விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளார். இதனால், தவெக தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். இதற்கிடையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி என்ற அங்கீகாரம் வழங்கி இருக்கிறது. இதனைத் தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.
மத்திய சென்னை மாவட்டம் சார்பில் சென்னை வில்லிவாக்கம் நாதமுனி திரையரங்கம் அருகில் மாவட்ட தலைவர் பூக்கடை குமார் தலைமையில், தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். மேலும், அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள், பேருந்தில் சென்ற பயணிகள் என அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினர். இந்த கொண்டாட்டத்தில், ஜப்பானில் இருந்து வந்த விஜய் ரசிகைகளும் கலந்து கொண்டனர்.